வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (08:01 IST)

புற்றுநோய் பாதித்த டெல்லி பெண்ணின் உயிரை காப்பாற்றிய கோவை இளைஞர்

டெல்லியை சேர்ந்த புற்றுநோய் பாதித்த பெண்ணின் உயிரை ரத்த ஸ்டெம்செல் தானம் மூலம் கோவை வாலிபர் காப்பாற்றியுள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் கரிமா சரஸ்வத்(37). இவருக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் இவருக்கு ரத்த புற்றுநோய் தாக்கி இருப்பதும் அது பயங்கரமாக வளர்ச்சி அடைந்து உயிரை பறிக்கும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
 
இதனையடுத்து உறவினர்கள் அல்லாதவரின் ரத்த ஸ்டெம்செல்கள் மூலம் கரிமா சரஸ்வத்தின்  உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது தாத்ரி என்ற உடல் உறுப்பு தான அமைப்பை தொடர்பு கொண்டனர். அங்கு பதிவு செய்திருந்த குருமூர்த்தி (27) என்பவரின் ரத்த ஸ்டெம் செல் கரிமாவின் உடலுக்கு ஒத்துப்போனது தெரிய வந்தது. எனவே அவரிடம் இருந்து ரத்த ஸ்டெம்செல்கள் தானமாக பெற்று கரிமாவுக்கு செலுத்தப்பட்டது. இதனால் அவர் மரணத்தில் இருந்து மீண்டு உயிர் பிழைத்தார்.
 
கரிமாவுக்கு ரத்த ஸ்டெம்செல்கள் தானம் செய்த வாலிபர் குருமூர்த்தி, கோவையை சேர்ந்தவர். இவர் மெக்கானிக் ஆக பணிபுரிகிறார். குருமூர்த்தியின் தங்கை 3 வயதில் ரத்த புற்று நோயால் மரணமடைந்து விட்டார். தற்போது கரிமாவுக்கு ரத்த ஸ்டெம் செல்கள் தானம் வழங்கி காப்பாற்றியதன் மூலம் அவரை தங்களது மகளாகவே குருமூர்த்தியின் குடும்பத்தினர் கருதுகின்றனர். புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமாகிய சரஸ்வத், குருமூர்த்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.