திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (14:22 IST)

இந்தி தினம்: நரேந்திர மோதி, அமித் ஷா, ராகுல் காந்தி வாழ்த்துச் செய்தி என்ன?

hindi
இந்தி தினம் செப்டம்பர் 14-ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் தேர்வு செய்தது. அந்த நாளே 'இந்தி திவாஸ்' என்ற பெயரில் இந்திய அரசு, இந்தி மொழி பேசுவோர் உள்ளிட்டவர்களால் கொண்டாடப்படுகிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 43.62% பேரின் தாய்மொழியாக இந்தி உள்ளது. 2001இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இது 41.03% ஆக இருந்தது.

நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில்தான் இந்தி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் பிகார், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மொரீசியஸ், சூரினாம், கயானா, ஃபிஜி, டிரினிடாட் & டொபாக்கோ, நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் கணிசமாக உள்ளனர்.

இன்று 'இந்தி திவாஸ்' அனுசரிக்கப்படுவதையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


''இந்தி உலகம் முழுவதும் இந்தியாவுக்கு ஒரு சிறப்பான மரியாதையைக் கொண்டுவந்துள்ளது. அதன் எளிமை, தன்னியல்பு மற்றும் உணர்திறன் ஆகியவை எப்போதும் ஈர்ப்பவை. இந்தியை வளமும் வலிமையையும் மிக்க மொழியாக்க அயராது பங்காற்றியவர்களுக்கு என் உளப்பூர்வ வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.

''அலுவல்மொழியான இந்தி ஒற்றுமை எனும் கயிற்றில் நாட்டை இணைக்கிறது. இந்தியாவில் உள்ள இதர மொழிகளுடன் இந்தி நட்புடன் திகழ்கிறது. நரேந்திர மோதி அரசாங்கம் இந்தியுடன் சேர்ந்து அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடுபடுகிறது,'' என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

''நமது அலுவல்மொழியும் உள்ளூர் மொழிகளும் உலகின் வளம் மிக்க மொழிகளுள் அடக்கம். நம் நாட்டின் அரசு, நிர்வாகம், அறிவு, ஆராய்ச்சி ஆகியவை உள்ளூர் மொழிகளிலும், அலுவல்பூர்வ மொழிகளிலும் நடக்க வேண்டும் என்று நாம் உறுதியேற்க வேண்டும்,'' என்று அமித் ஷா கூறியுள்ளார் என பாஜகவின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

''மொழிகள் உணர்வுகளால் ஆனவை. அனைத்து மொழிகளும் அழகானவை. அவை ஒன்றிணைந்து இயங்குவது நமது நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துகள்,'' என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் பதிவு காங்கிரஸ் கட்சியின் அலுவல்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிற துறைகளில் முன்னணியில் இருப்பவர்கள் உள்ளிட்டவர்களும் இந்தி தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.