திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (14:07 IST)

குழந்தையை தாக்க முயன்ற புலியுடன் வெறும் கைகளால் சண்டையிட்ட தாய்

BBC
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது 15 மாத குழந்தையை தாக்க முயன்ற புலியிடம் சண்டையிட்டு போராடிய பெண் ஒருவர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அர்ச்சனா சௌத்ரி என்ற அந்த பெண் புலியுடன் வெறும் கைகளால் சில நிமிடங்கள் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து அவருடைய அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந்த பெண்ணும் அவருடைய 15 மாத ஆண் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 04) இச்சம்பவம் நடைபெற்றது.

புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவற்றால் தாக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் பிபிசி தமிழிடம் பேசுகையில், புலிகளை தவிர்த்து யானைகளும் தங்கள் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் என தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் வனப்பகுதிகள் மற்றும் தேசிய சரணாலயங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளில் மனித - விலங்கு எதிர்கொள்ளல் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

வேகமான நகரமயமாக்கலால் இயற்கை வாழ்விடங்கள் அழிவதால், இரை மற்றும் இருப்பிடத்தைத் தேடி விலங்குகள் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குள் நுழைவதற்கு தள்ளப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில், அர்ச்சனா சௌத்ரி தன் குழந்தையுடன் விவசாய நிலத்தில் இருந்தபோது, அங்கிருந்து புதரிலிருந்த புலி வெளியேறி குழந்தையை தாக்கியுள்ளது.
 
BBC

புலி குழந்தையின் தலையை தன் பற்களால் கவ்வி அக்குழந்தையை இழுத்துச் செல்ல முயன்றதாகவும் அப்போது அர்ச்சனா சௌத்ரி புலியுடன் சண்டையிட்டதாகவும் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடைய அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு கம்புகளுடன் வந்த கிராமத்தினர் புலியை அங்கிருந்து துரத்தினர்.

அர்ச்சனா சௌத்ரிக்கு நுரையீரலில் பாதிப்பு மற்றும் உடலில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குழந்தையின் தலையில் ஏற்பட்டுள்ள காயங்கள் ஆபத்தானவை அல்ல எனவும், தாய்க்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தீவிரமானவை என்றும் பிபிசி இந்தியிடம் பேசிய மருத்துவர் தெரிவித்தார்.

ஜபல்பூரை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் மிஸ்தி ருஹேலா கூறுகையில், தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இருவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, புலி தாக்குதல் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசுகையில், கிராமங்களுக்குள் நுழையும் புலியை இடம் கண்டறிந்து பிடிப்பது வனத்துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாக தெரிவித்தனர்.

மூத்த அரசு அதிகாரி இதுதொடர்பாக பிபிசி இந்தியிடம் கூறுகையில், காப்பகத்திலிருந்து அதிகமான புலிகள் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

பிபிசி இந்தியின் சல்மான் ரவி அளித்த தகவல்களுடன் எழுதப்பட்டது.