1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (13:59 IST)

சென்னை நிலத்தடி நீர்: வறண்டு போகாமல் காக்க என்ன செய்யவேண்டும்?

இந்தியாவில் சென்னை உள்பட 21 மாநகரங்களில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடிநீர் முற்றிலுமாக தீரும் நிலை ஏற்படும் என கடந்தவாரம் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தகவல் மாநகரவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



சுற்றுச்சூழல் அகதிகள்

வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரம் மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து, கிடைக்கும் வருமானத்தில், அன்றாட தேவைகளை ஓரளவு பூர்த்திசெய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை இந்த அறிக்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் பலரும் சென்னை நகர வாழக்கையில் இருந்து விடுபடமுடியாத நிலையில் உள்ளனர்.

பல மில்லியன் மக்கள் வாழும் சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம்,சோழவரம் ஏரிகளில் இருந்து கொண்டுவரப்படும் நீரும், கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டு ஆலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குடிநீரும் வழங்கப்படுகிறது. அதோடு பலரும் கேன் தண்ணீருக்கும் செலவு செய்கின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அன்றாடத் தேவைகளுக்கும் தண்ணீரை காசுகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால், பல குடும்பங்கள் தண்ணீரைத் தேடி இடம்பெயரும் சுற்றுச்சூழலும், அகதிகளாக வாழவேண்டிய நிலையும் வரும் என்கிறார்கள் சுற்றுச்சூழல்வாதிகள்.

''400 அடிக்கு ஆழ்குழாய் அமைத்துளோம்''

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சௌகார்பேட்டை பகுதியில் வாசித்த பல குடும்பங்கள் புரசைவாக்கம்,வேப்பேரி போன்ற பகுதிகளுக்கு ஏற்கனவே இடம்பெயர்ந்து சென்றுவிட்டதாக கூறுகிறார் சௌகார்பேட்டை பகுதிவாசி சந்திரமோகன்(46).

''வட மாநிலங்களில் இருந்து வந்த நாங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிவருகிறது. எங்கள் குடியிருப்புப் பகுதி பெருமளவு வணிக வளாகமாக மாறிவிட்டது. எங்கள் உறவினர்கள் பலருக்கும் சௌகார்பேட் பகுதி ஒரு தாய்வீடு போல இருந்தது. அந்த நிலை மாறிவிட்டது. பல எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீதிகளில் இன்று வெறும் கடைத்தெருக்கள் மட்டுமே உள்ளன,'' என வருத்தத்துடன் பேசினார் அவர்.

அடிப்படை தேவைக்கான தண்ணீரைப் பெறுவதற்கு சுமார் 400 அடிக்கு ஆழ்குழாய் அமைக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறும் சந்திரமோகன் சௌகார்பேட் பகுதியில் மழைநீர் சேகரிக்கும் வசதியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்தவேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார். ''நாம் வாழும் காலத்தில் நம் குழந்தைகளுக்கு சொத்து,வீடு,பணம்,நகை என பலவற்றை சேர்த்து வைக்கும் நாம், அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை தேவையான தண்ணீர்,காற்று போன்றவற்றை மாசுபடுத்திவிடுகிறோம். நாம் சேர்த்துவைக்கும் சொத்து அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று எண்ணுகிறோமோ, அதைவிட இயற்கையைப் பாதுகாத்து அவர்களுக்கு விட்டுப்போகவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படவேண்டும்,'' என்று அவரது விழிப்புணர்வு செய்தியை நம்மிடமும் பகிர்ந்துகொண்டார்.


சென்னை,



சென்னையில் பல அடுக்குமாடி கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உதவிவரும் சேகர் ராகவனிடம் பேசினோம். மழை மையம் என்ற விழிப்புணர்வு நிறுவனத்தை நடத்திவரும் அவர் ஒவ்வொரு தனிமனிதரும் எவ்வாறு மழை நீரைச் சேகரிக்கலாம் என்று விளக்கினார்.


மறைந்துபோன விழிப்புணர்வு

''புதிதாக வீடுகட்டும் போது,மழைநீர் சேகரிப்பு வசதி இருக்கவேண்டும் என்பது கட்டாயம் என்றாலும், அதை பராமரிக்கப் பலரும் மறந்துவிடுகிறார்கள். மழைநீரை சேகரிக்க அந்த கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரித்துவரவேண்டும் என்பதில் கவனம் வேண்டும். மழைநீரைச் சேகரிக்கும் அடுக்குமாடிகுடியிருப்புகள் குறித்து விளம்பரம் செய்யப்படவேண்டும். பலரும் வந்துபார்த்து தங்களது குடியிருப்பு பகுதிகளிலும் நீரைச் சேமிப்பதை அது ஊக்குவிக்கும். அதேபோல சென்னை மாநகராட்சி அமைத்துள்ள வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புகளில் மழைநீரைச் சேகரிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்,'' என்கிறார் சேகர் ராகவன்.

2013-2015ஆண்டுக்காலத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட 1,200 நிலத்தடி நீர் மாதிரிகளைச் சோதனைக்கு உட்படுத்தி, நீரின் தன்மை, எவ்வாறு நிலத்தடி நீரைப் பெருக்கலாம் போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேட்டதன் பேரில் வழங்கியதாகவும், அதன் பின்னர் அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் கூறுகிறார் சேகர் ராகவன்.

'அழிவைப் புரிந்துகொள்ளவேண்டும்''

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஏரி,குளம்,குட்டைகளை ஆக்கிரமித்து வீடுகள் அமைத்ததே சென்னை மாநகரின் பெரிய சாபம் என்கிறார் கட்டடக்கலை வல்லுநர் நடராஜன் லோகநாதன்.

''நுங்கம்பாக்கம், முகப்பேர், கோடம்பாக்கம், வியாசர்பாடி என பல இடங்களில் இருந்த நீர் நிலைகள் காணாமல்போயுள்ளன. சென்னைக்கு அடுத்து, ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட செங்கல்பட்டு பகுதியில் கூட தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது அழிவைத் தவிர வேறு என்ன?,'' என்று கேள்விஎழுப்புகிறார் நடராஜன்.

சென்னையில் பல இடங்களில் நிலத்தடிநீரை அதிக அளவில் உறிஞ்சிவிட்டதால், அங்கெல்லாம் கடல்நீர் ஊடுறுவிவிட்டது. தற்போது கடற்கரையோர குடியிருப்பு பகுதிகளில் உப்பு நீர் மட்டுமே கிடைக்கிறது. அடுத்ததாக சென்னையின் மத்திய பகுதிகளிலும் அந்த நிலை ஏற்படும் என்றே தோன்றுகிறது. நிதி ஆயோக் அறிக்கையில் சொல்லும் பற்றாக்குறை என்பதை அழிவு ஏற்பட்டுவிட்டது என்றுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்தார் நடராஜன்.

இது ஒரு அபாய சமிக்ஞை



சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை தொடர்பான நிதி அயோக் அறிக்கை பற்றி கேட்டபோது, ''வெள்ளநீர் வடிகால்களை நாங்கள் பராமரித்து வருகிறோம். தி.நகர், வளசரவாக்கம் பகுதிகளில் இவை நல்ல முறையில் உள்ளன. நீர்ப் பற்றாக்குறை மற்றும் நீர் வழங்குவது பற்றி சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மட்டுமே பதில் சொல்லமுடியும்,'' என்று முடித்துக்கொண்டார்.

சென்னையின் குடிநீர்த் தேவையை முழுமையாக தீர்க்கமுடியாத நிலையே தற்போது இருப்பதாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் விசாரித்தபோது, தினமும் சென்னைக்குத் தேவையான குடிநீர் 830 மில்லியன் லிட்டர் என்றும் ஆனால் தினமும் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலத்தடி நீர் முற்றிலுமாக தீர்ந்துபோகும் என்று நிதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிட்டதை ஒரு சமிக்ஞையாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சென்னை குடிநீர் வழங்கல் துறையின் உயரதிகாரி ஒருவர்.

சென்னையில் இருந்த பல ஏரி, குளங்கள் காணாமல் போனது உண்மைதான். ஆனால் தற்போது உள்ள நிலையில், அவற்றை மீட்பது எளிதானது அல்ல. பயன்பாட்டில் உள்ள ஏரிகளைப் பாதுகாக்கலாம். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மறு சுழற்சிக்கு எடுத்துக்கொள்ள முயற்சிதேவை. கடந்த ஆண்டு போரூர் எரி மற்றும் குன்றத்தூர் அருகில் உள்ள பிச்சராயபுரம் நீர் நிலைகள் சரிசெய்யப்பட்டு பரமாரிக்கப்பட்டுவருகிறது. கைவிடப்பட்ட குவாரி நிலங்களை சரிசெய்து வருகிறோம். எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை மோசமாகும் வாய்ப்பு உள்ளது என்பதைக் கூறும்போது, அதைத் தவிர்க்க நாம் எடுத்துவரும் முயற்சிகளையும் கணக்கில்கொள்ளவேண்டும்,'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ''கடல்நீரைக் குடிநீராக்க தற்போது உள்ள இரண்டு ஆலைகளோடு, மேலும் இரண்டு ஆலைகள் வரவுள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நிலையில் நம் நகரம் உள்ளது. குறைந்தபட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிப் பராமரிப்பதை ஒவ்வொரு குடியிருப்பு பகுதியும் உறுதிப்படுத்தினால், நிலத்தடிநீர் மட்டம் உயரும். அரசின் முயற்சியோடு, பொதுமக்களின் முயற்சியும் அவசியம்,'' என்றார் அவர்.