1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (15:36 IST)

ஏழை நாடுகளுக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து கிடைப்பது சாத்தியமா?

ஜெர்மனியின் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்க்கல், உலகின் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து பெறுவதை உறுதிப்படுத்துவது தொடர்பாக, தன் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
 
ஏங்கலா மெர்க்கல் பங்கெடுத்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்கள், கொரோனா தடுப்பு மருந்தின் நியாயமான விநியோகத்துக்கு உறுதி அளித்து இருக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில், செயல்பாடுகள் மெதுவாக நகர்வதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் ஏங்கலா மெர்க்கல். அதோடு, உலக கொரோனா தடுப்பு மருந்து கூட்டமைப்பான கவியிடம் இது குறித்து பேச இருப்பதாகவும் கூறி இருக்கிறார் ஏங்கலா மெர்க்கல்.
 
உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பது தொடர்பாக, எப்போது பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என கவியிடம் பேச இருக்கிறோம். இதுவரை அது தொடர்பாக எதுவும் செய்யப்படவில்லை என எனக்கு கவலையாக இருக்கிறது எனக் கூறி இருக்கிறார் ஏங்கலா மெர்க்கல். இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை செளதி அரேபியா நடத்தியது. கொரோனா பெரும் தொற்றால், இந்த மாநாடு காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
 
இந்த மாநாட்டில், பணக்கார நாடுகள், ஏழை நாடுகளுக்கு உதவுவதாக உறுதியளித்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில், ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்கிற விவரங்களும் விவாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் சோதனை, சிகிச்சை மற்றும் நியாயமான தடுப்பு மருந்து விநியோகம் போன்ற பணிகளுக்கு உடனடியாகத் தேவையாக இருக்கும் பணத்தை வழங்கவும் உறுதி அளித்து இருக்கிறார்கள்.
 
ஏழை நாடுகள், மலிவு விலையிலும், சமமாகவும் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற, எந்த ஒரு வழியையும் விட்டு வைக்கமாட்டோம் என, ஜி20 மாநாடு முடியும் தருவாயில், ஜி20 குழு கூறி இருக்கிறது. ஏதாவது ஒரு நாட்டை நாம் பின்தங்க விட்டுவிட்டால், நாம் அனைவருமே பின்தங்கிவிடுவோம் என்கிற ஒருமித்த கருத்து, ஜி 20 நாடுகளுக்கு மத்தியில் இருக்கிறது என, சௌதியின் நிதி அமைச்சர் மொஹம்மது அல் ஜடான், ஒரு செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தி இருக்கிறார்.
 
ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதிலும், தொழில்துறைக் கூட்டாண்மையை உருவாக்குவதிலும், அறிவுசார் சொத்துக்களை பகிர்ந்து கொள்வதிலும், இன்னும் வேகமாக முன்னேற வேண்டும் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவெல் மக்ரூன் ஜி 20 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
 
உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துச் செல்லும், கொரோனா சோதனைகள், சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்துகளை உறுதிப்படுத்தும் ACT என்கிற திட்டத்தில், 4.5 பில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய நிறைய பணம் வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்.