செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (12:37 IST)

குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் உறுப்பினர் வெளியேற்றம்

தனது குழந்தையை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்ததற்கு மற்ற சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கென்ய நாடாளுமன்றத்திலிருந்து பெண் உறுப்பினர் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக தனது ஐந்து மாத கைக் குழந்தையை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்ததாக ஜூலைக்கா ஹசன் எனும் அந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஜூலைக்கா ஹசன் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
கென்ய நாடாளுமன்றத்தின் விதிகளின்படி, அந்நியர்கள் அதன் கட்டடத்துக்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது. அந்த அந்நியர் எனும் பட்டியலில் குழந்தைகளும் அடக்கம். 
 
ஜூலைக்கா ஹசன் தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் அவரது சக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதுடன், இவரது செயல் வெட்கக்கேடானது என்று விமர்சிக்க தொடங்கினர். அதையடுத்து பேசிய சபாநாயகர், ஹசன் தனது  குழந்தையுடன் அவையை விட்டு வெளியேற உத்தரவிட்டார். எனினும், குழந்தையை விட்டுவிட்டு தனியே அவர் அவைக்கு திரும்பலாம்  என்றும் தெரிவித்தார்.
 
"நாடாளுமன்ற வளாகத்தில் 'குழந்தை பராமரிப்பு மையம்' இருந்திருந்தால், எனது குழந்தையை அவைக்கு அழைத்து வந்திருக்க மாட்டேன். நாடாளுமன்றத்துக்கு அதிக பெண் உறுப்பினர்கள் வரவேண்டுமென்றால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட  வேண்டும்," என்று ஜூலைக்கா கூறினார்.
 
நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பெண் ஊழியர்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு சிறப்பு அறைகளை அமைக்க  வேண்டுமென்று 2017ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்ட கென்ய நாடாளுமன்றத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.