கொரோனா வைரஸ் காரணமாக இரானில் மட்டும் 210 பேர் இதுவரை பலியாகி உள்ளதாக சுகாதார துறை தகவல்கள் கூறுகின்றன.
பெரும்பாலான மரணங்கள் இரான் தலைநகர் டெஹ்ரானில் பதிவாகி உள்ளன. இரான் அரசு வெள்ளிக்கிழமை காலை கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 34 பேர் பலியாகி உள்ளதாக கூறியது.
ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத் துறை அதிகாரி, இதுவரை 210 பேர் பலியாகி உள்ளதாக பிபிசியிடம் கூறினார். ஆனால், இதனை மறுக்கும் இரான் சுகாதார அமைச்சகம், தாங்கள் வெளிப்படையாக இருப்பதாகவும், பிபிசி பொய் தகவல்களைப் பரப்புவதாகவும் கூறினார்.
சரி, கொரோனா வைரஸ் தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.....
1. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக செளதி அரேபியா விசா வழங்குவதில் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி அந்நாட்டில் உள்ள புனித தளங்களான மெக்கா மதினாவை வழிப்பட வருபவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது.
2. கொரோனா வைரஸினால் இதுவரை சர்வதேச அளவில் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2800 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனா ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள்.
3. சுவிட்சர்லாந்தில் 1000 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மார்ச் 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. ஐஸ்லாந்து, நைஜீரியா, மெக்சிகோ, நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.
5. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் 50 நாடுகளில் பரவி உள்ளது.
6. ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைமண்ட் ப்ரின்சஸ் சொகுசு கப்பலிலிருந்த பிரிட்டன் குடிமகன் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். அவர் உயிரிழந்துவிட்டதாகப் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
7. கொரோனா வைரஸ் காரணமாகப் பங்குச் சந்தை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது.
8. கொரொனா வைரஸ் பாதிப்பானது சர்வதேச அளவில் மிகவும் மோசமான கட்டதை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
9. கொரோனா வைரஸ் தொடர்பாகப் பரவும் பொய் தகவல்களை எதிர்கொள்வதுதான் மிகுந்த சவாலாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறி உள்ளார்.
10. இரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ கூறி உள்ளார். ஆனால், இந்த உதவிகளை இரான் நிராகரித்துள்ளது.