செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (13:42 IST)

கொரோனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராகவில்லை! – உலக சுகாதார அமைப்பு!

உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள இன்னமும் உலக நாடுகள் தயாராகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆசியாவை தாண்டி உலகெங்கும் வீரியத்தோடு பரவத்தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனாவால் 2800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து தென் கொரியாவிலும், ஜப்பானிலும் கொரோனா வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆசிய நாடுகளை மட்டுமின்றி ஐரோப்பிய, வளைகுடா நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தெரிய தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடாவில் ஈரானில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

துருவப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான எஸ்தோனியா, டென்மார்க் மற்றும் சைபீரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா அறிகுறிகளை கண்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதை எதிர்கொள்ள மருத்துவ வசதிகள் எந்த நாட்டிலும் இல்லை என தெரிவித்துள்ளது. மிகவும் வளர்ந்த நாடுகளிலேயே கொரோனாவை கட்டுப்படுத்தவோ, மக்களை பாதுகாக்கவோ சரியான வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.

வயது முதிர்ந்தவர்களையே இந்த வைரஸ் உடனடியாக தாக்குவதால் அவர்களை முன்னெச்சரிக்கையோடு இருக்க சொல்லி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.