புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (15:01 IST)

உண்ண கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு

பழுப்பு நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள் மற்றும் மயக்கும் உப்புக் குகைகள் என இரானின் ஹோமுஸ் தீவு புவியியலாளர்களின் டிஸ்னிலேண்ட் என்று கூறலாம்.
 
"இந்த மண்ணின் சுவையை நீங்கள் உணர வேண்டும்" என தெற்கு இரானின் ஹோமுஸ் தீவில் எனது சுற்றுலா வழிகாட்டியான ஃபர்சாத் கே கூறினார். கருஞ்சிவப்பு நிழல் தரும் மலை, கனிமம் நிறைந்த நிலப்பரப்பை நான் இன்னும் புரிந்து கொள்ளாததால், அவரது யோசனையை நான் பயத்துடன் அணுகினேன்.
 
பாரசீக வளைகுடாவின் அடர் நீல நீரின் மத்தியில் ஈரானின் கடற்கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோமுஸ் என்பது கண்ணீர் துளி வடிவ பளபளப்பான உப்பு குவிமாடம். 70 க்கும் மேற்பட்ட தாதுக்கள் இங்கு காணப்படுகின்றன. ஹோமுஸ் தீவின் 42 பிரமிப்பூட்டும் சதுர கிலோமீட்டரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு அங்குலமும் அதன் உருவாக்கம் பற்றிய கதையை நமக்கு அளிக்கிறது.
 
நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல்கள் பாரசீக வளைகுடாவின் விளிம்புகளைச் சுற்றி அடர்த்தியான உப்பு அடுக்குகளை உருவாக்கியது என்கிறார் முன்பு இரானில் பணிபுரிந்த பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு அமைப்பின் முதன்மை புவியியலாளர் கேத்ரின் குடெனோ. இந்த அடுக்குகள் படிப்படியாக அந்த பகுதியில் உள்ள கனிமங்கள் நிறைந்த எரிமலை வண்டலுடன் மோதி, ஒன்றோடொன்று இணைந்தன, இதனால் வண்ணமயமான நிலப்பரப்பு உருவாகியுள்ளது.
 
"கடந்த 500 மில்லியன் ஆண்டுகளில், உப்பு அடுக்குகள் எரிமலை வண்டலின் பிந்தைய அடுக்குகளால் மூடப்பட்டன. உப்பு மிதமானதாக இருப்பதால், காலப்போக்கில், மேல்புற பாறைகளில் உள்ள விரிசல்கள் மூலம் மேற்பரப்பை அடைந்து உப்பு குவிமாடங்களை உருவாக்கியது" என்கிறார் குட்னஃப். இந்த உப்பு அடுக்குகள், நிலத்திற்கு பல கிலோமீட்டர் கீழே உண்மையில் பாரசீக வளைகுடா பகுதி முழுவதும் பரந்து விரிந்திருக்கின்றன.
இயற்கையே செய்த இந்தப் புவியியல் ஒப்பனை காரணமாக பழுப்பு படிந்த நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள், உப்பு குகைகள் உருவாகியுள்ளன. இந்த வண்ண மயமான கலவையின் காரணமாக ஹோமுஸ் தீவு பெரும்பாலும் "ரெயின்போ தீவு" என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே உண்ணத் தகுந்த மலை என்று கருதப்படும் இடமும் இது தான். அதைத்தான் என்னைப் பரிசோதனை செய்யுமாறு ஃபர்சாத் கே கூறினார்.
 
நான் அருகில் நின்றிருந்த ஜெலக் என்று அழைக்கப்படும் மலையின் சிவப்பு நிறத்துக்குக் காரணம், தீவின் எரிமலை பாறைகளிலிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படும் இரும்பு ஆக்சைடான ஹெமாடைட். இது தொழில்துறையில் மதிப்புமிக்க தாது மட்டுமல்ல, உள்ளூர் உணவு வகைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. டாம்ஷி என்று அழைக்கப்படும் உள்ளூர் ரொட்டியுடன் உண்ணப்படும் தொடுகறிகளுக்கு ஒரு மண்வாசனையுடனான சுவையை இது அளிக்கிறது.
 
"சிவப்பு மண் சாஸாக பயன்படுத்தப்படுகிறது" என ஃபர்சாத்தின் மனைவி மரியம் பெய்க்கனி விளக்கினார். "இந்த சாஸ் சூரக் என்று அழைக்கப்படுகிறது. இதை ரொட்டியில் தடவிப் பயன்படுத்தலாம். சமையல் பயன்பாடுகளைத் தவிர, உள்ளூர் கலைஞர்கள், சாயமிடுதல், மட்பாண்டங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் ஓவியங்களிலும் சிவப்பு மண் பயன்படுத்தப்படுகிறது."
 
சிவப்பு மலைக்கு அப்பால், ஹோமுஸில் ஆராய இன்னும் நிறைய இருக்கிறது. தீவின் மேற்கில் உப்பு தெய்வம் என்று அழைக்கப்படும் கண்கவர் உப்பு மலை உள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு மேல் நீண்டு, அதன் வெளிறிய குகைகளும் கூர்மையான முனைகளும் கொண்ட சுவர்கள் பளிங்கு அரண்மனையின் வரிசைகளைப் போல காணப்படும்.
 
உப்புக்கு குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் எதிர்மறை சக்திகளை அகற்றும் ஆற்றல் இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். "பாறை உப்பு மகத்தான நேர்மறை ஆற்றலை வெளியிடுவதாக அறியப்படுகிறது," என்று அவர் என்னிடம் கூறினார். "இந்த பள்ளத்தாக்கில் சற்று நேரம் இருந்தால் நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள், அதனால்தான் இது ஆற்றல் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது."
 
தீவின் தென்மேற்கில் ரெயின்போ பள்ளத்தாக்கு உள்ளது. சிவப்பு, ஊதா, மஞ்சள், பழுப்பு, நீலம் என பல வண்ணங்களைக் கொண்ட மலைகள், பல வண்ண மண் என அற்புதமான காட்சியைக் கொண்டிருக்கிறது.
 
அருகே சிலைகளின் பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட காற்று அரிப்பால் கற்பாறைகள் அற்புதமான வடிவங்களாக மாற்றப்பட்டுள்ளன. கொஞ்சம் கற்பனையுடன் பார்த்தால், பறவைகள், டிராகன்கள் மற்றும் பிற கற்பித உயிரினங்களைக் காணலாம்.
 
அற்புதமான காட்சியையும் பெருமைகளையும் கொண்டிருந்தாலும், பெரும்பாலான பயணிகளுக்கு இது பற்றி தெரியாது. இரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் வெறும் 18,000 பயணிகள் தான் இங்கு வந்துள்ளனர்.
 
"வரலாற்று ரீதியாகவும் இயற்கையாகவும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தபோதிலும், இந்த இயற்கை அற்புதம் உலகப் பயணிகளால் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை" என மற்றொரு உள்ளூர்வாசி எர்ஷாத் ஷான் கூறினார்.
 
"ஹோர்முஸின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டால், இந்த தீவை சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக மாற்ற முடியும்." என்றார் அவர். உள்ளூர்வாசிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்கத் தொடங்கியுள்ளனர். தீவு முழுவதும் மக்களை கொண்டு செல்ல ரிக்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுகின்றன.
 
ஹோமுஸ் புவியியலாளர்களின் டிஸ்னிலேண்ட் என்பதில் சந்தேகமில்லை. அதன் உண்ணக்கூடிய மண், குடிமக்களின் நரம்புகளில் ஓடுகிறது. அதுவே உண்மையில் சிறப்பு.