வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (12:41 IST)

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை சமூக ஊடகங்கள்தான் தீர்மானிக்கிறதா?

தமிழ் திரையுலகைப் பொருத்தவரை பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படம் வெளியான ஒரு வாரம் அல்லது குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அதுகுறித்த விமர்சனம் வார இதழ்கள், நாளிதழ்களில் வெளியாகும். தொலைக்காட்சி அனைவரது வீடுகளையும் ஆக்கிரமித்த பின்னர், அந்த வாரத்தில் வெளியான படங்கள் குறித்த விமர்சனங்கள், படம் எப்படி இருக்கிறது என்பதை அறிய போதுமானதாக இருந்தது.

 


ஆனால், இப்போது ஒரு படத்தின் ஆரம்ப காட்சி முழுமையாகக் கூட முடியும் முன்பே, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதுகுறித்த விமர்சனங்கள் பதிவிடப்படுவதை காண முடிகிறது. படத்தின் முதல் பாதி முடிந்தவுடனேயே படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனங்கள் தொடங்கிவிடுகின்றன.


இந்த போக்கு, தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு போய்விட்டதாக சினிமா துறையில் இயங்குபவர்கள் கூறுகின்றனர்.


தங்களுக்குப் பிடிக்காத அல்லது அவர்களின் கொள்கைகளுடன் ஒத்துவராத நடிகர்கள், இயக்குநர்களின் திரைப்படங்கள் மீது சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


மற்றொருபுறம், இது தனிப்பட்ட நபர்களின் கருத்து சுதந்திரம் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.


சிறிய பட்ஜெட் மற்றும் அதிகம் அறியப்படாத நடிகர்கள், இயக்குநர்களின் திரைப்படங்களை பார்க்க மக்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதில் சமூக வலைதளத்தின் பங்கு மிகப்பெரிது என்றும், ஆரோக்கியமான விமர்சனங்கள் வேண்டும் என்றும் சினிமா இயக்குநர்கள் சிலர் கூறுகின்றனர்.


உண்மையில் ஒரு படம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள், எந்தளவுக்கு அதன் வெற்றி, தோல்வியில் பங்களிக்கின்றன?


'ஏன் இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள்?'
 

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14-ஆம் தேதியன்று பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் அன்றைய தினமே எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. அதுகுறித்து சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா கவலை தெரிவித்தார்.

 

jothika

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நிச்சயமாக படத்தில் முதல் அரை மணிநேரம் சரிவர இல்லை, கடும் சத்தமாக இருக்கிறது! பெரும்பாலான இந்திய திரைப்படங்களில் குறைகள் என்பது படத்தின் ஒருபகுதியே, குறிப்பாக இத்தகைய பரிச்சார்த்த முயற்சியில் எடுக்கப்படும் திரைப்படங்களில்” என்று ஜோதிகா குறிப்பிட்டிருந்தார்.


ஆனால், அப்படத்திற்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் கண்டு தான் ஆச்சர்யமடைந்ததாக ஜோதிகா கூறியுள்ளார். ஏன் கங்குவாவின் நேர்மறையான விஷயங்கள் பேசப்படவில்லை என்றும், விமர்சனங்களை முன்வைக்கும்போது படத்தின் நல்ல அம்சங்களை சிலர் மறந்துவிடுவதாக தான் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


“படத்தின் முதல் பகுதி முடிவதற்குள் இந்தளவுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்துள்ளன, (பல குழுக்களின் பிரசாரம் இது என தெரிகிறது)” என தெரிவித்துள்ளார். படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள் இருப்பதாகவும் கூறி அவற்றில் சிலவற்றை ஜோதிகா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


வசூல் ரீதியாக பாதிக்கிறதா?
 

சமீபத்தில், கங்குவா, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் சமூக வலைதளங்களின் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகின.


இதற்கு முன்பும், இந்தியன் 2 திரைப்படம் வெளியானபோது, அதில் நடித்திருந்த பாபி சிம்ஹா, எதிர்மறை விமர்சனங்கள் குறித்து கூறுகையில், “சிலர் தன்னை அறிவுஜீவிகளாக காட்ட முயற்சிக்கிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.

 


உண்மையில் குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகை, இயக்குநரை குறிவைத்து இத்தகைய தாக்குதல்கள் நடக்கிறதா என்று தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேள்வியெழுப்பினோம்.


“குறிப்பிட்ட நடிகர் அல்லது படத்திற்கு எதிராக திட்டமிட்டு இதை செய்கின்றனர். ஒரு நடிகரின் கொள்கைக்கு எதிராக சமூக வலைதளங்களில் திரண்டு தாக்குதல் நடத்துகின்றனர். இதன் மூலம் அந்த நடிகரை காயப்படுத்த முடியும் என நினைக்கின்றனர்.” என்கிறார் அவர்.


கடந்த 5 ஆண்டுகளாக இதுதான் நடக்கிறது என்றும் இந்த போக்கு தற்போது தீவிரமாகியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.


படம் குறித்து பரப்பப்படும் எதிர்மறை கருத்துகள் பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதால் வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக கூறுகிறார் தனஞ்செயன்.


'சிறிய படங்களுக்கு அவசியம்'
 

பல சிறு பட்ஜெட் திரைப்படங்கள், அதிகம் அறியப்படாத நட்சத்திரங்களின் நல்ல திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக வலைதளங்கள் பயனுள்ளதாக அமைவதாக கூறுகிறார், சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன்.


“ஒரு படம் குறித்து நாம் தான் முதலில் பதிவிட வேண்டும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படம் குறித்து விமர்சனத்தை காணொளியாக பகிர்வதற்குள், லட்சக்கணக்கான கருத்துகள் அப்படம் குறித்து பதிவிடப்படுகின்றன. இது நிச்சயம் வசூலை பாதிக்கக் கூடிய ஒன்றுதான். நேர்மறையான விஷயங்களை விட எதிர்மறையான விஷயங்கள் வேகமாக பரவுகின்றன” என்கிறார், ரங்கன்.


20 ஆண்டுகளுக்கு முன்பு படம் வெளியாகி 2 நாட்களுக்குப் பிறகு தான் தன்னுடைய விமர்சனம் வெளியாகும் என்று கூறும் அவர், ஆனால், நிலைமை தற்போது மாறிவிட்டது என்கிறார்.


“தொழில்முறை சினிமா விமர்சகர்கள் படத்தை ஆராய்ந்து விமர்சிக்க வேண்டும் என்பதை கடைபிடித்தாலும் சமூக வலைதளங்களில் இயங்கும் தனிநபர்கள் உடனடி கருத்துகளை இடுவதில் ஆர்வமாக உள்ளனர்” என்கிறார் பரத்வாஜ் ரங்கன்.


சமூக வலைதளங்களில் இயங்கும் தனிநபர்களின் கருத்துகளை தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது என்று கூறும் அவர் அது அவர்களின் கருத்து சுதந்திரம் என்கிறார்.


எனினும், யார் உண்மையிலேயே விமர்சனத்திற்காக பதிவிடுகின்றனர், தனிப்பட்ட வெறுப்பு காரணமாக பதிவிடுகின்றனர் என்பதை இந்த சமூக வலைதள யுகத்தில் கண்டுபிடிப்பதும் கடினம் என்கிறார் பரத்வாஜ் ரங்கன்.


இந்த கருத்தில் சற்று மாறுபடும் தயாரிப்பாளர் தனஞ்செயன், “இது நிச்சயமாக கருத்து சுதந்திரமாக இருக்க முடியாது. சிறிய படங்களை ஆதரிக்கும், கொண்டாடும் தனிநபர்களும் திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களை இடும் நபர்களும் ஒரே நபராக இருக்க முடியாது. குறிப்பாக, பெரிய கதாநாயகர்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த இணைய தாக்குதல் நடக்கிறது” என்கிறார்.


'சிறிய படங்களை மக்களிடம் சேர்க்கின்றனர்'
 

சமூக வலைதளங்களில் படங்கள் குறித்து வெளியாகும் விமர்சன பதிவுகள், காணொளிகள் ஆகியவை பல சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றிக்கு உதவியுள்ளன. குறிப்பாக இந்தாண்டில் வெளியான சில படங்களை உதாரணங்களாக குறிப்பிடலாம்.

 


லப்பர் பந்து, கருடன், மகாராஜா, வாழை, ஆகிய படங்களை கூறலாம். மெய்யழகன், போகுமிடம் வெகுதூரமில்லை படம் ஓடிடியில் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் கிடைத்த நேர்மறை விமர்சனங்களால் நல்ல வரவேற்பை பெற்றன. இதில், சில படங்களில் விஜய் சேதுபதி (மகாராஜா) போன்று வெற்றி படங்களை முன்பு கொடுத்த நடிகர்கள் இருந்தாலும், பல படங்கள் அப்படியல்ல. அதிலும், ஓரிரு படங்களையே இயக்கிய இயக்குநர்களும் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.


“இந்த படங்களை கொண்டாடியவர்கள் சமூக வலைதளங்களில் இயங்கிய மக்கள்தான். அவர்கள் தான் மக்களை திரையரங்குக்கு வரவழைக்கின்றனர்” என்கிறார், பரத்வாஜ் ரங்கன்.


“உதாரணத்திற்கு சொல்கிறேன், ‘லப்பர் பந்து’ படம் பார்க்கும்போது எனக்கு இயக்குநர் யாரென்றே தெரியாது. அதன் பட்ஜெட்டுடன் வசூலை ஒப்பிட்டால் மிகப்பெரும் வெற்றியடைந்த படம் அது” என கூறுகிறார் ரங்கன்.


சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஆரோக்கியமான விமர்சனங்கள் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்களித்திருப்பதாக தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பிபிசி தமிழிடம் பேசினார், ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நிதிலன் சாமிநாதன்.


“எல்லா காலங்களிலும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். அதன் தளமும் வடிவமும் மாறலாம். என் படங்களை மக்களிடம் சென்று சேர்த்ததில் சமூக ஊடகங்களின் பங்கு வெகுவாக உண்டு. எனவே, அது அவசியம் என நினைக்கிறேன். ஆனால், படத்தில் உள்ள குறைகளை தாண்டி ஒரு நடிகரையோ, இயக்குநரையோ அல்லது வேறு யாரையுமோ தனி நபர் தாக்குதல் செய்வது, குறிவைத்து தாக்குவது கண்டிக்கதக்கது, நிச்சயமாக, அதில் எனக்கு உடன்பாடு இல்லை. விமர்சனங்கள் கலைஞனை மேம்படுத்த வேண்டும்" என்கிறார் நித்திலன்.


‘மகாராஜா’ குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்கள் மூலம் அப்படத்திற்கு வரவேற்பு கிடைத்ததாக கூறும் நித்திலன், அத்தகைய விமர்சனங்களில் நலனும் அக்கறையும் இருப்பதாக கூறுகிறார். பட்ஜெட், புரொமோஷனுக்கான செலவுகளை ஈடுசெய்ய முடியாத போது, இத்தகைய விமர்சனங்கள்தான் படத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.


“விமர்சகர்கள் சொல்லும் சில விஷயங்களில் சரி என்பதை ஏற்றுக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் சரிசெய்ய முயற்சிக்கிறோம், படம் முடிக்கும் போது நமக்கு சில விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதை விமர்சனமாக முன்வைக்கும் போதுதான் நமக்குத் தெரியும். விமர்சனம் கண்டிப்பாக தேவை” என்கிறார் அவர்.


அதிகமான மிகைப்படுத்துதல்
 

ஒரு படத்தின் வெளியீடுக்கு முன்பே ‘புரொமோஷன்’ எனும் பெயரில் அதிகமாக மிகைப்படுத்தும் போது அதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. ஆனால், படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் சமூக ஊடகங்களில் அதிகப்படியான எதிர்மறை விமர்சனங்கள் பதிவிடப்படுவதாக சினிமாவை உற்றுநோக்குபவர்கள் கூறுகின்றனர்.


இந்தியன்-2, கங்குவா ஆகிய 2 படங்களும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படங்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.


விஜயின் ‘கோட்’ திரைப்பட வெளியீட்டுக்கு முன்பு படத்தை மிகைப்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்த்ததாக, அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அச்சமயத்தில் கூறியிருந்தார். “படத்தை மிகைப்படுத்துவது அதன் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறியிருந்தார்.


'சுமாரான படங்கள் ஓடுவதில்லை'
 

சமூக வலைதளங்களில் பெரும்பாலான பொதுஜன பார்வையாளர்கள் இருப்பதில்லை என்பதால், வாய் வார்த்தையாக ஒரு படத்திற்கு கூறப்படும் கருத்தும் படங்களின் வெற்றி, தோல்விக்கு பங்களிக்கிறது என்கிறார் பரத்வாஜ் ரங்கன்.


ஏராளமான எதிர்மறை கருத்துகள் பதிவிடப்படுவதால், ஓரளவுக்கு நல்ல படம் கூட திரையரங்குகளில் ஓடாமல், மிகப்பெரும் தோல்வியை தழுவுவதாக கூறுகிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.


“முன்பு ஒரு படம் சுமாராக இருந்தால் அது ஓரளவுக்கு ஒடும், ஆனால் இப்போது சுமாரான படத்தை முழுமையாகவே தோல்வி படமாக்கி விடுகின்றனர். வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது சினிமாவுக்கும் சமூக வலைதளங்களில் கருத்து கூறுபவர்களுக்கும் இடையே ஒரு போர் போன்று நிகழ்கிறது” என்கிறார் தனஞ்செயன்.


- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு