வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (13:16 IST)

புதன் கிரகம் பின்னோக்கி நகருமா? ஜோதிட நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்

Mercury

வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையேனும் புதன் கோளின் பெயர் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் வந்துவிடுகிறது.


 

ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்காகவோ அல்லது வரவிருக்கும் விண்வெளிப் பயண திட்டம் பற்றியோ புதன் கோள் டிரெண்ட் ஆவதில்லை. மாறாக ஜோதிடத்தை நம்புபவர்களால் டிரெண்டாக்கப்படுகிறது.
 

புதன் கிரகம் எதிர்த்திசை (retrograde orbit) சுற்றுப்பாதையில் நுழையும் போது துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது.
 

'புதன்' சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம். சூரியக் குடும்பத்தில் மிக சிறிய கிரகம். 'மெர்குரி ரெட்ரோகிரேட்’ என்று சொல்லப்படும் புதன் கோளின் எதிர்த்திசைப் பயணம் ஒரு வானியல் நிகழ்வு. இதில் இந்தக் கிரகம் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களின் திசைக்கு மாறாக அதன் இயல்பான பாதைக்கு எதிர் திசையில் நகர்வதுபோலத் தோன்றுகிறது.
 

புதன் பின்னோக்கி செல்வது போல் தோன்றுவது ஏன்?


 

இந்த நிகழ்வு சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் நிகழும். அவை அனைத்தும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருவதன் விளைவாக இது நிகழ்கிறது.
 

இந்த 'ரெட்ரோகிரேட்' காலத்தில், நமது கிரகத்தில் பூமியில் இருந்து பார்க்கும் போது புதன் பின்னோக்கி செல்வது போல் ஒரு காட்சிப்பிழை தோன்றும். பூமியும் புதனும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருவதால் புதன் பின்னோக்கி இயங்குவது போலான தோற்றம் ஏற்படுகிறது.
 

புதன் பூமியை விட வேகமாக ஒரு சுற்றுப் பாதையை நிறைவு செய்கிறது. மேலும், அது பூமியை 'முந்திச் செல்லும்' போது, எதிர் திசையில் நகர்வது போல் நமக்குத் தோன்றுகிறது, ஆனால், அது சூரியனைச் சுற்றி வழக்கமான சுற்றுப்பாதையில் தான் செல்கிறது.
 

சாலையில் ஒரு கார் மற்றொரு காரை கடந்து செல்லும் நிகழ்வோடு இதை ஒப்பிடலாம். அதில் மெதுவாகச் செல்லும் கார், கடந்து செல்லும் காருடன் ஒப்பிடும்போது பின்னோக்கி நகர்வது போல் தோன்றும்.
 

வானியல் என்ன சொல்கிறது?


 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டு வரும் இந்த வானியல் நிகழ்வை, சில ஜோதிடர்கள் இது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் காலம் என்று நம்புகிறார்கள். இது நமது அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.
 

புதன் கோள் ஒரு வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை, (மொத்தமாக மூன்று வாரங்கள்) எதிர்திசை சுழற்சி தோற்ற நிலையில் இருக்கும்.
 

2024-ஆம் ஆண்டில், பிரிட்டனில் இருந்து பார்க்கும்போது, ​​பின்வரும் தேதிகளில் புதன் கோள் எதிர்திசை சுற்றுப் பாதையில் பயணிக்கும். (உலகின் பல்வேறு பகுதிகளில் சில மணிநேரங்கள் வரை மாறுபாடு இருக்கும்):
 

ஏப்ரல் 1 - ஏப்ரல் 25 வரை, ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 28 வரை, நவம்பர் 26 முதல் டிசம்பர் 15 வரை.
 

"ஜோதிடம் மற்றும் வானியல் வலுவான வரலாற்று வேர்களைக் கொண்டிருந்தாலும், எதிர்திசை சுழற்சி போன்ற வானியல் நிகழ்வுகள் மனிதர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே நவீன அறிவியலின் கருத்து," என்று பிரிட்டனில் லெஸ்டர் நகரில் உள்ள தேசிய விண்வெளி மையத்தின் விண்வெளி நிபுணர் தாரா படேல் கூறுகிறார்.
 

ஆனால் விஞ்ஞான ரீதியாக ஆதாரங்கள் இல்லாத போதிலும், இந்த வானியல் நிகழ்வைச் சுற்றியுள்ள மூட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான ஜோதிட நம்பிக்கைகள் மக்களின் கற்பனைகளை வளர்க்கின்றன.

வானியல், பிரபஞ்சத்தை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானம், வான் பொருள்கள், இயற்பியல், ரசாயன மற்றும் கணித நிகழ்வுகளை ஆய்வு செய்து வரும் நிலையில் ​​ஜோதிடம் மனிதர்கள் மீதான ராசி பலன்கள், கிரகங்கள் மற்றும் வான்பொருள்களின் விளைவுகள் போன்றவற்றை ஆராய்கிறது.

 

போலி அறிவியல் நம்பிக்கை


 

ஜோதிடம், கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு 3000) மெசபடோமியாவின் பண்டைய நாகரிகங்களில் தோன்றியது, அங்கிருந்து இந்தியா வந்தடைந்தது.

பண்டைய கிரேக்க நாகரிகத்தின் ஹெலனிஸ்டிக் சகாப்தத்தில், ஜோதிடம் அதன் தற்போதைய வடிவத்தை அடைந்தது.
 

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் படி, கிரேக்க பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ஜோதிடம் இஸ்லாமிய கலாச்சாரத்தில் நுழைந்தது. அதன் பின்னர் அரபு மொழியைக் கற்கும் ஆர்வத்தின் மூலம் இடைக்காலத்தில் ஐரோப்பிய கலாச்சாரத்திற்குள் கால்பதித்தது.
 

ஜோதிடம் மற்றும் ஜாதகம் போலி அறிவியல் (pseudoscience) என வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், கிரகங்கள், அவற்றின் நிலைகள் மற்றும் அவற்றின் இயக்கங்கள் நமது அன்றாட வாழ்க்கை, நமது உணர்வுகள், நமது எண்ணங்கள், நமது எதிர்காலம் மற்றும் நமது விதி ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவற்றைப் பின்பற்றுபவர்கள் ஆழமாக நம்புகிறார்கள்.
 

மனித இனத்தின், ஆரம்பகால நாகரிகங்களில், வானிலை, மழை பொழியும் நேரம், ஈரப்பதம், வெப்பநிலை, காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றைக் கணிக்கச் சில இயற்கை நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாக இருந்தது. அந்த நேரத்தில், இது ஒரு உயிர் வாழத் தேவையான திறனாக (survival skill) இருந்தது.
 

பண்டைய கிரேக்கர்கள், புதன் கோளுடன் தங்களது அதிர்ஷ்டம், பாதுகாப்பு, வளம், இசை, மற்றும் வஞ்சகம் ஆகியவற்றின் கடவுளான 'ஹெர்ம்ஸ்’-உடன் தொடர்புபடுத்தினர்.
 

ரோமானிய புராணங்களில், புதன் கோளை 'மெர்குரியஸ்' (மெர்குரி) கடவுள் என்று அழைத்தனர். மேலும் மெர்குரியஸ், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு கடவுள் என்றும் கடவுள்களின் தூதர் என்று கருதப்பட்டது. மேலும் அவர் பாதாள உலகத்திற்கு ஆன்மாக்களை வழிநடத்தும் வழிகாட்டியாக இருந்தார் என்றும் நம்பப்பட்டது.

 

மக்கள் ஜோதிடத்தை நம்புவது ஏன்?


 

கிரகங்களின் எதிர்திசை இயக்கம் நம்மை பாதிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
 

அறிவாற்றல் உளவியல் (cognitive psychology) கோட்பாடுகளின்படி, ஜோதிடம் மற்றும் ராசி பலன்கள் பற்றிய மனித நம்பிக்கை 'உறுதிப்படுத்தல் சார்பு' (confirmation bias) என்ற நிலையில் இருந்து உருவாகிறது, இது மனித மனதின் பொதுவான சார்புகளில் ஒன்றாகும்.

'உறுதிப்படுத்தல் சார்பு' என்பது ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போவது, அல்லது நினைவில் வைத்துக்கொள்வது ஆகும். அந்த நம்பிக்கைகள் பற்றி உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும் மக்கள் அவற்றை ஒரு சார்பு முறையில் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அந்த தகவலைக் கடத்துவர்.
 

தற்போது யுக்ரேனில் மனிதாபிமான மனநலப் பணிகளைச் செய்து வரும் மருத்துவ உளவியலாளர் ஜீனாப் அஜாமி பிபிசி-யிடம் கூறுகையில், "மக்கள் நிம்மதியாகவோ அல்லது வசதியாகவோ உணரும் விஷயங்களை நம்ப முனைகிறார்கள். அந்தத் தகவலைப் பகுப்பாய்வு செய்து மறுமதிப்பீடு செய்ய அவர்களது மூளை விரும்புவதில்லை,” என்கிறார்.

 

"ஜோதிடம் மக்களுக்கு நிகழக்கூடிய எதற்கும் விரைவான மற்றும் எளிதான விளக்கத்தை வழங்குகிறது. அவர்களது பிரச்னைக்கான உண்மையான, சாத்தியமான காரணங்களையோ, அவர்களது பிரச்னைகளுக்கான பல அடுக்குகளையும் ஆராயவோ தேவையில்லை," என்று அவர் மேலும் கூறுகிறார்.
 

விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாத போதிலும், பலர் ஜோதிடத்தை உத்வேகம், பொழுதுபோக்கு, அல்லது ஆன்மீக ரீதியாக ஆறுதல் தரும் விஷயமாகக் கருதுகின்றனர்.

 

கிரகங்களின் தாக்கம்?


 

"பலர் ஜோதிடம் வெறும் முட்டாள்தனம், அல்லது தவறான நம்பிக்கை என்று கருதுகின்றனர்," என்று பெய்ரூட்டைச் சேர்ந்த ரெய்கி ஹீலிங் நிபுணர் மிரில்லே ஹம்மல் பிபிசி-யிடம் கூறினார்.
 

ரெய்கி என்பது ஒரு பிரபலமான துணை சிகிச்சை முறையாகும். அதன் விளைவுகளை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், இந்த ஆற்றல் வழி சிகிச்சை முறை (energy healing) மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது .
 

புதன் கோளின் எதிர்திசை விளைவுகளை நம்புபவர்கள் இந்தக் காலகட்டத்தில் பெரிய தொகையில் எதையும் வாங்க கூடாது என்றும், வாழ்க்கையின் முக்கிய, பெரிய நிகழ்வுகளை இந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் திட்டமிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஹம்மல் நம்புகிறார்.
 

"கிரகங்களின் தாக்கங்களைப் புரிந்துகொள்வதும், விழிப்புடன் இருப்பதும், ஆவேச நிலையை அடையாமல், நமது நம்பிக்கைகளுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம்," என்றும் அவர் கூறுகிறார்.