திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (14:46 IST)

சமூக இடைவெளியால் உறவுகள் பிரியுமா? தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் என்று கூறப்படும் போலி மருந்துகள் லண்டனில் உள்ள பல்வேறு மருந்தகங்களில் விற்கப்பட்டு வருவது பிபிசி புலனாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் 'பதஞ்சலி ஆயர்வேத்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கொரோனில் மருந்து லண்டனில் ஆசிய மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் "கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்தும்" என்ற விளம்பரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
கொரோனில் மருந்தை உற்பத்தி செய்யும் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம், இந்த மருந்து மூச்சுக் குழாயில் உள்ள தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறுகிறது.
 
பிபிசி மேற்கொண்ட பரிசோதனைகளில் இந்த மருந்து கொரோனா வைரசுக்கு எதிராக எந்த வகையான பாதுகாப்பையும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
பிபிசிக்காக பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் இந்த மருந்தை சோதனைக்கு உட்படுத்தியது.
 
செடி-கொடிகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மருந்து கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்காது என்பது இந்த சோதனையில் தெரியவந்துள்ளது.
 
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் எனும் கூற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் அர்த்தமற்றது என்கிறார் நச்சுயிரியல் வல்லுநர் டாக்டர் மைத்ரேயி சிவக்குமார்.
 
ஒரு வைரசுக்கு எதிராக மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதில் பல சூட்சமங்கள் அடங்கியுள்ளன. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தி கோவிட்-19 தொற்றை குணப்படுத்த முடியுமா என்று இன்னும் தெரியாது என்று அவர் கூறுகிறார்.
 
பதஞ்சலி நிறுவனம் உருவாக்கும் கொரோனில் மருந்து நோயெதிர்ப்பு அமைப்புக்கு என்ன செய்யும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
 
பிரிட்டனில் உள்ள விளம்பர விதிகளின்படி கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போரிட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான மருந்து எனும் கூற்றுடன் எந்த மருந்தையும் விற்பனை செய்யக்கூடாது.
 
ஆனால், பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் பெரும் சந்தையை கொண்டுள்ள இந்தியாவில் அவ்வாறு விளம்பரம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
லண்டனில் இந்த மருந்து வாங்குபவர்களில் சிலரை பிபிசி சந்தித்தது.
 
"எனக்கு 78 வயதாகிறது. அதனால் நான் இந்த மருந்தை உட் கொள்கிறேன். நான் பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பொழுது யாரிடமிருந்தாவது எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாக வாய்ப்பு இருக்கிறது; அதனால் என்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நான் இதை வாங்குகிறேன், என்று அந்த முதியவர் கூறினார்.
 
வெம்ப்லே பகுதியில் உள்ள ஒரு மருந்தகம் தனது கடை மற்றும் இணையதளத்தில் கோவிட்-19 நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மருந்து எனும் கூற்றுடன் கொரோனில் மருந்தை விற்பனை செய்து வருகிறது.
 
அங்கு இந்த மருந்தை விற்பனை செய்யும் குறைந்தது நான்கு கடைகளை பிபிசி பார்த்தது.
 
கொரோனில் மருந்துக்கு பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான மெடிசின்ஸ் அண்ட் ஹெல்த்கேர் ப்ராடக்ட்ஸ் ரெகுலேட்டரி ஏஜென்சி (எம்.ஹெச்.ஆர்.ஏ) அனுமதி வழங்கவில்லை.
 
முறையான அனுமதி பெறாமல் இந்த மருந்தை பிரிட்டன் சந்தைகளில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
கொரோனில் கோவிட்-19 தொற்றைக் குணப்படுத்தும் தன்மை உடையது என்று பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் சாமியாருமான பாபா ராம்தேவ் இந்த ஆண்டு ஜூன் மாதம் கூறியிருந்தார்.
 
"எங்கள் மருந்தை மூன்று நாட்கள் எடுத்துக் கொண்ட பின்பு 69 சதவீத கோவிட்-19 தொற்றாளர்களுக்கு மேற்கொண்டு உடலில் தொற்று இல்லை என்று சோதனை முடிவில் தெரிய வந்தது. ஏழு நாட்கள் எடுத்துக் கொண்ட பின்பு 100 சதவிகித தொற்றாளர்ககளின் உடலிலும் வைரஸ் மேற்கொண்டு இல்லை என்பது தெரிய வந்தது," என்று பாபா ராம்தேவ் அப்போது கூறியிருந்தார்.
 
பதஞ்சலி ஆயுர்வேத மருந்தை நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த கூடியது என்று கூறி வேண்டுமானால் சந்தையில் விற்கலாம்; ஆனால் குணப்படுத்தக் கூடியது என்று கூறி விற்க கூடாது என்று இந்திய அரசு கூறியது.
 
அதன் பின்னர் தங்கள் கொரோனில் கோவிட்-19 தொற்றைக் குணப்படுத்தக்கூடியது எனும் கூற்றை பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டது.