வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (06:01 IST)

மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் தங்களால் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
 
“கொள்கைக் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, மனுதாரர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகினால் அது சரியாக இருக்கும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தலைமை நீதிபதி தனது உத்தரவில் கூறி, திரிபாதி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தார்.
 
இந்த மனுவை நாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று வேலை வழங்குபவர்களை கட்டாயப்படுத்தினால், அது பெண்களை பணியமர்த்துவதில் இருந்து அவர்களை தடுக்கும் என்ற கருத்தையும் முன்வைத்தது.“இந்த விவகாரம் கொள்கை தொடர்புடையது என்பதால் நாங்கள் அதனை கையாளவில்லை ” என்று உச்ச நீதிமன்றம் இன்று தனது உத்தரவில் தெரிவித்தது.
 
மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கை
மாணவிகள், பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின்போது மாதாந்திர விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
 
தனது மனுவில், மகப்பேறு காலத்தின் கடினமான கால கட்டத்தில் இருக்கும் பெண்களை கவனித்துக் கொள்ள சட்டத்தில் அனைத்து விதிகளும் இருந்தும், மகப்பேறு காலத்தின் முதல் கட்டமான மாதவிடாய் காலம் தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
 
பிபிசியிடம் பேசிய சைலேந்திர மணி திரிபாதி, இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை நாடும்படி உச்ச நீதிமன்றம் தனக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார்.
 
திரிபாதி தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவின் நகல் பிபிசி-க்கு கிடைத்தது. அதில், மகப்பேறு என்று அழைக்கப்படும் மனித உயிர்களை உருவாக்கும் சிறப்புத் திறன் படைத்தவர்கள் பெண்கள் மட்டுமே.
 
மாதவிடாய், கர்ப்பம், கருச்சிதைவு என மகப்பேறுவின் பல்வேறு நிலைகளிலும் ஏராளமான மனம் தொடர்பான, உடல் தொடர்பான இன்னல்களுக்கு பெண்கள் உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
சமூகம், சட்டமன்றம் ஆகியவை இந்த விவகாரத்தில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியாவில் பிகார் மட்டுமே கடந்த 1992ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
“1912 ஆம் ஆண்டில், கொச்சின் சமஸ்தானத்தின் (தற்போதைய எர்ணாகுளம் மாவட்டம்) திருப்புனித்துராவில் உள்ள அரசு பெண்கள் பள்ளி, மாணவிகள் ஆண்டுத் தேர்வின் போது 'மகப்பேறு விடுமுறை' எடுக்கவும் தேர்வை பின்னர் எழுதிக்கொள்ளவும் அனுமதி அளித்தது,” என்றும் தனது மனுவில் சைலேந்திர மணி திரிபாதி கூறியுள்ளார்.