1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 9 ஜனவரி 2021 (09:44 IST)

உயிரைக் காக்கும் இரண்டு கொரோனா மருந்துகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மிகவும் உடல் நிலை மோசமாக இருப்பவர்களில் 25 சதவிகிதம் பேரை காப்பாற்றும் விதத்தில் புதிதாக இரண்டு மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
இந்த ஆண்டி இன்ஃப்ளமேட்டரி மருந்து, ட்ரிப்ஸ் மூலம் உடலில் செலுத்தப்படுகிறது. இந்த மருந்து செலுத்தப்படும் 12 பேரில் ஒருவர் உயிர்பிழைக்கிறார் என, பிரிட்டனின் அரசு சுகாதார நிறுவனமான என்.ஹெச்.எஸின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களிடம் சோதனை மேற்கொண்டவர்கள் கூறுகிறார்கள்.
 
ஏற்கனவே இந்த மருந்து பிரிட்டன் முழுக்க இருக்கிறது. எனவே பல நூறு பேரின் உயிரைக் காக்க இந்த மருந்தை உடனடியாகப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
தற்போது பிரிட்டன் முழுக்க மருத்துவமனைகளில் 30,000-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 2020-ல் இருந்ததை விட தற்போது நோயாளிகள் எண்ணிக்கை 39% அதிகரித்திருக்கிறது.
 
டாசிலிசுமாப் (Tocilizumab) மற்றும் சரிலுமாப் (Sarilumab) என்கிற இரண்டு மருந்துகள் பிரிட்டன் முழுக்க கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த, பிரிட்டன் அரசு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த மருந்து கொரோனாவில் இருந்து உயிர்களைக் காப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகள் விரைவில் குணமடையச் செய்கிறது. இதனால் ஒரு கொரோனா நோயாளி, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் காலத்தை (தோராயமாக 7 நாட்கள் வரை) குறைக்கிறது.
 
இந்த இரண்டு மருந்துகள் ஒரே போல செயல்படுகின்றன. இதோடு டெக்ஸாமெத்தாசோன் (Dexamethasone) மருந்தை எடுத்துக் கொள்ளும் போது பலன்கள் இன்னும் சிறப்பாக இருக்கின்றன.
 
மேலே குறிப்பிட்ட இந்த இரு மருந்துகளும் அத்தனை விலை குறைவான மருந்துகள் கிடையாது. ஒரு நோயாளிக்கு 750 - 1,000 பவுண்ட் ஸ்டெர்லிங் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதோடு 5 பவுண்ட் ஸ்டெர்லிங் செலவழித்து டெக்ஸாமெத்தாசோன் மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஒரு படுக்கைக்கு சுமாராக 2,000 பவுண்ட் ஸ்டெர்லிங் செலவாகிறது. எனவே இந்த மருந்து ஒரு நாள் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை செலவை விட குறைவாக இருக்கிறது.
 
இந்த மருந்தைக் எடுத்துக் கொள்ளும் 12 பேரில் ஒருவர் உயிர் பிழைக்கிறார். இது மிகப் பெரிய தாக்கம் என்கிறார் இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனில் முக்கிய ஆராய்ச்சியாளராக இருக்கும் அந்தோனி கார்டன் கூறுகிறார்.
 
பிரிட்டன் உட்பட ஆறு வெவ்வேறு நாடுகளில், 800 தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளிடம் நடத்திய REMAP - CAP சோதனையில் சில விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
 
1. வழக்கம் போல, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36 சதவீதத்தினர் இறந்துவிட்டார்கள்.
 
2. இந்த புதிய மருந்து கால் மடங்காக குறைக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் 27 சதவிகித நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது
 
அதிபயங்கரமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா பிரச்சனைக்கு மத்தியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காக்க இந்த மருந்து கிடைத்திருப்பது மிகவும் நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் என்.ஹெச்.எஸ் தேசிய மருத்துவ இயக்குநரான ஸ்டீஃபன் பொவிஸ்.
 
தன் நாட்டில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு புதிய, நம்பகமாக மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் பிரிட்டன் நாடு முன்னணியில் இருக்கிறது என்பதை நாம் மீண்டும் நிரூபித்திருக்கிறோம் என பிரிட்டனின் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலர் மேட் ஹான்காக் கூறியுள்ளார்.
 
கொரோனாவில் இருந்து வெளியேற, இந்த மருந்துகள் மற்றுமொரு முக்கியமான முன்னேற்றம். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளோடு இந்த மருந்துகளும் சேரும் போது, கொரோனா வைரஸை தோற்கடிக்க முக்கிய பங்குவகிக்கும்.
 
இந்த மருந்துகள் உடலில் உள்ள இன்ஃப்ளமேஷனைக் குறைக்கிறது. இந்த இன்ஃப்ளமேஷன் தான் கொரோனா நோயாளிகளின் நுரையீரல் மற்றும் மற்ற உடல் பாகங்களை பாதிக்கிறது.
 
டெக்ஸாமெத்தாசோன் மருந்தைப் பெற்ற போதிலும், மோசமடைந்து, தீவிர சிகிச்சை தேவைப்படும் எந்தவொரு கொரோனா நோயாளிக்கும் இந்த மருந்துகளைக் கொடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
டாசிலிசுமாப் (Tocilizumab) மற்றும் சரிலுமாப் (Sarilumab) ஆகிய இரு மருந்துகளும் ஏற்கனவே பிரிட்டன் அரசின் ஏற்றுமதி தடை பட்டியலில் இருக்கிறது. அதே போல பிரிட்டனில் இருக்கும் நோயாளிகளுக்கு எனக் கூறி இந்த மருந்துகளை வாங்கி, வேறு நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறார்கள்.
 
இந்த மருந்து குறித்த கண்டுபிடிப்புகள் எந்த வித அறிவியல் சஞ்சிகைகளிலும் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. அதே போல மற்ற அமைப்புகள் மற்றும் நாடுகளாலும் இந்த மருந்து மறு பரிசீலனை செய்யப்படவில்லை.