திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மே 2022 (14:03 IST)

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட்

DK
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் 2018-20 வரையான சீசன்களில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். பின்னர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். 2022 ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தினேஷ் கார்த்திக்கை வாங்கியது. அந்த அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

நடுவே 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று அங்குள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் வர்ணனையாளராகவும் பணிபுரிந்தார் தினேஷ் கார்த்திக்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் சமீப காலமாக எழுந்துவந்தது.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜூன் 9ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பண்டியா ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு மீண்டும் தேர்வான நிலையில், தினேஷ் கார்த்திக் தன் ட்விட்டர் பக்கத்தில், "உங்களை நீங்கள் நம்பினால், எல்லாமும் சரியாக நடக்கும். உங்கள் அனைவரது ஆதரவு, நம்பிக்கைக்கு மிக்க நன்றி. கடின உழைப்பு தொடர்கிறது..." என பதிவிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக்குக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.