திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (14:29 IST)

இலங்கை நெருக்கடி: நிவாரணப்பொருட்களுடன் கொழும்பை அடையும் இந்திய கப்பல்

(மே 22: இன்றைய இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களுடன், கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்ட கப்பல் இன்றைய தினம் கொழும்பை வந்தடையவுள்ளது என்று வீரகேசரி இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட 'டான் பின்-99' என்ற கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொடியசைத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்தக்கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடையும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையரகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்களில் 9000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்களுக்கும் மேற்பட்ட 55 வகையான அத்தியாவசிய மருந்துகள், 2 வகையான சிறப்பு மருந்துகள் என்பன உள்ளடங்குகின்றன. இவற்றின் பெறுமதி இந்திய ரூபாயில் சுமார் 40.55 கோடி ரூபாய் (16 மில்லியன் அமெரிக்க டாலர்) நிவாரணப்பொருட்கள் இன்று இலங்கையில் இறங்கவுள்ளன என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்களுடன் நிற்க வேண்டும் : லண்டனில் ஒலித்த ஆதரவுக்குரல்

ஐ நா உயர் ஆணையரின் பரிந்துரைகளுக்கு கவனம் தந்து, நாம் தமிழர்களுடன் நிற்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் சர் கீர் ஸ்டாமர், மே18 ஆம் தேதி நிகழ்வுக்கான நினைவேந்தலில் பேசியுள்ளார் என்று `தி ஐலேண்ட் ஆன்லைன்` தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், "இறுதிக்கட்ட போரில் குற்றம் இழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்று பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் தரும் விதமாகப் பேசியுள்ளார்.

அத்துடன், "இறுதிக்கட்டபோரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கட்சி நினைவுகூர்கிறது. அந்த நிகழ்வின் பின்னணி உண்மை, அதற்கான பொறுப்பேற்பு மற்றும் நல்லிணக்கத்துக்கான தேவையை நமக்கு நினைவூட்டும் விதமாகவே இந்த நினைவு தினம்" என்றும் அவர் பேசியுள்ளார் .

"13 ஆண்டுகளகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதி வழங்கப்படவில்லை. அந்தப்போரில் கொல்லப்பட்டவர்களுக்கும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு இன்று வாழ்ந்துவருவோருக்கும் நீதி கிடைக்க, தொழிலாளர் கட்சி இந்த விவாகரத்தில் மறுபரிசீலனை செய்கிறது" என்று பேசியதாக `தி ஐலேண்ட் ஆன்லைன்` தளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கான இருப்பு ஆறே நாட்களில் காலி

இலங்கையில் 10 நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய அளவிலான எரிபொருளை, 6 நாட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்திதுறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் என்று நியூஸ் ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில், அத்தியாவசமாகத் தேவையான அளவு எரிபொருள் இலங்கைக்கு வருகிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், தொடர்ந்து பேசும்போது, அதிகப்படியான தேவை இருப்பதால் மொத்த இருப்பும் ஆறே நாட்களில் தீர்ந்து போயுள்ளது.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருளுக்கான கார்கோவுக்கு அமைச்சரவை பணம் செலுத்தியுள்ளது. எரிபொருளைக் குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டத்தை குறைப்பதற்கான எங்களிடம் திட்டம் இருக்கிறது. என்று தெரிவித்தாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.