வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (17:30 IST)

செல்ஃபி மரணம்: தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலி #SelfieDeaths

கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையில் செல்ஃபி எடுக்கும்போது, புதுமணப்பெண் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


 
தண்ணீர் அதிகமாகச் சென்றுகொண்டிருந்த பாம்பாறு அணையில் நீருக்குள் நின்றவாறு 6 பேரும் செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர்.
 
அப்போது, எதிர்பாராதவிதமாக ஐந்து பேர் வேகமாக ஓடிய தண்ணீரில் சிக்கி உள்ளனர். ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்ட நிலையில், 4 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
 
என்ன நடந்தது?


 
கிருஷ்ணகிரி ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவின் மகள்களான கனிதா, சினேகா, மகன் சந்தோஷ், இவர்களது உறவினரான உறவினரான யுவராணி மற்றும் புதுமண தம்பதி பிரபு - நிவேதா ஆகியோர் பாம்பாறு அணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.
 
அணையில் அதிகளவில் தண்ணீர் செல்வதைக் கண்ட அவர்கள், தண்ணீர் இறங்கி நின்றபடி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.
 
கனிதா, சினேகா, சந்தோஷ், புதுமணப்பெண் நிவேதா மற்றும் யுவராணி ஆகியோர் தண்ணீரில் நின்று கொண்டிருக்க, பிரபு தண்ணீரை ஒட்டியவாறு கரையில் நின்றபடி தனது செல்போன் மூலம் செல்ஃபி எடுத்தார்.
 
அப்போது எதிர்பாராதவிதமாக கனிதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி, யுவராணியை மட்டும் மீட்டுக் கரைசேர்த்தார்.
 
அதற்குள் மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
தகவலறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஊத்தங்கரை போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அதிகரிக்கும் செல்ஃபி மரணங்கள்
 
இது ஏதோ தமிழகத்தில் நடந்த சம்பவம் எனச் சுருக்கிப் பார்க்க வேண்டாம்.
 
சர்வதேச அளவில் செல்ஃபி மரணங்கள் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
 
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமான செல்ஃபி மரணங்கள் நிகழ்கின்றன.
 
அமெரிக்கத் தேசிய மருத்துவ நூலகத்தின் கணக்குப்படி, 2011 - 2017 இடையேயான காலகட்டத்தில் மட்டும் செல்ஃபி எடுக்கும் போது 259 பேர் பலியாகி உள்ளனர்.
 
இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வாளர்கள் செல்ஃபி மரணங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ள இடங்களில் செல்ஃபி எடுக்கத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இந்த நிகழ்வுகளில் இறந்தவர்களில் பெரும்பாலும் 20 முதல் 29 வயதினராக உள்ளனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அடுத்தபடியாக 10 முதல் 19 வயதுள்ளவர்கள் இறந்துள்ளனர்.