1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (14:56 IST)

வலியச் சென்று கொரோனாவை வரவைத்துக்கொண்ட செக் பாடகி உயிரிழப்பு

செக் குடியரசைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி ஒருவர் வலிய தனக்கு கோவிட் தொற்று வரவைத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளார் என்று அவருடைய மகன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
57 வயதான ஹனா ஹோர்கா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மேலும் அவர் கோவிட் பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்த பிறகு, குணமடைந்து வருவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால், பதிவிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.
 
சில இடங்களுக்குச் செல்வதற்கு, ஏற்கெனவே கோவிட் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்ற வகையில் அனுமதி பெறமுடியும் என்பதால், ஜான் ரெக் மற்றும் அவருடைய தந்தைக்கு தொற்று பாதிப்பு இருந்தபோது, அவர் வேண்டுமென்றே நோய்த்தொற்றை வரவைத்துக்கொண்டார் என்று அவருடைய மகன், ஜான் ரெக் கூறினார்.
 
செக் குடியரசில் புதன்கிழமை கணிசமான அளவில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
 
ரெக் மற்றும் அவருடைய தந்தை, இருவருமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆயினும் இருவருக்கும் கிறிஸ்துமஸ் அன்று கோவிட் தொற்று ஏற்பட்டது. ஆனால், அவர்களிடமிருந்து விலகி இருக்கவேண்டாம் என்று தன்னுடைய தாயார் முடிவு செய்ததாகவும் அதற்குப் பதிலாக தன்னை கோவிட் வைரஸுக்கு வெளிப்படுத்திக்கொள்ள விரும்பியதாகவும் அவர் கூறினார்.
"பரிசோதனையில் எங்களுக்கு பாசிடிவ் என்று வந்தபோது, அவர் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவர் முழு நேரமும் எங்களுடனே இருந்தார்," என்கிறார் ஹனா ஹோர்காவின் மகன் ஜான் ரெக்.
 
செக் குடியரசில் சினிமாக்கள், பார்கள் மற்றும் கஃபேக்கள் உட்பட பல சமூக மற்றும் கலாச்சார இடங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அல்லது கோவிட் தொற்றுக்கு ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்த சான்று இருக்கவேண்டும்.
 
அவருடைய தாயார் பழைமையான செக் நாட்டுப்புறக் குழுக்களில் ஒன்றான அசொனன்ஸ் என்ற குழுவில் உறுப்பினராக இருந்ஹார். அவர் கோவிட் தொற்றுக்கு ஆளாக விரும்பினார். அதனால் அவருடைய இயக்கத்தில் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும் என்றும் விளக்கினார் ஜான் ரெக்.
 
அவர் உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தான் குணமடைந்து வருவதாக சமூக ஊடகங்களில் எழுதினார். "இப்போது தியேட்டர், சானா, கச்சேரி இருக்கும்," என்று குறிப்பிட்டார்.
 
ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் உயிரிழந்த நாளன்று, ஹோர்கா, தான் நன்றாக இருப்பதாகவும் நடைபயிற்சி செல்வதற்கு ஆடை அணிந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அவருடைய முதுகு வலிக்கத் தொடங்கியது. அதனால் படுக்கையறையில் படுத்துக்கொண்டார்.
"சுமார் 10 நிமிடங்களில் எல்லா முடிந்துவிட்டது. அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்," என்று அவருடைய மகன் ரெக் கூறினார்.
 
அவர் தடுப்பூசி போடாதவர் என்றாலும், கோவிட் தடுப்பூசிகள் குறித்த சில வினோதமான சதிக் கோட்பாடுகளை அவருடைய தாயார் நம்பவில்லை என்று ஜான் ரெக் வலியுறுத்தினார்.
 
"தடுப்பூசி போடுவதைவிட, கோவிட் தொற்றுக்கு ஆளாவதே மேல் என்பது அவருடைய தத்துவமாக இருந்தது. அதற்காக, நம்மில் மைக்ரோசிப் பொருத்தப்படும் என்பது போன்றவை அதற்குக் காரணமல்ல," என்று அவர் கூறினார்.
 
அதிகமாக உணர்ச்சிவயப்பட்ட நிலைக்குச் சூழல் சென்றுவிடும் என்பதால், அவரிடம் பிரச்னையை விவாதிக்க முயல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்குப் பதிலாக, அவர் தனது கதையைச் சொல்வதன் மூலம் தடுப்பூசி போடுவதற்கு மற்றவர்களை ஊக்கபடுத்த முடியும் என்று நம்பினார்.
 
"உங்களிடம் நிஜ வாழ்க்கையிலிருந்து உதாரணங்கள் இருந்தால், அது வரைபடங்கள் மற்றும் எண்களைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது. நீங்கள் உண்மையில் எண்களுடன் அனுதாபம் கொள்ளமுடியாது," என்கிறார் ரெக்.
 
10.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட செக் குடியரசில் கோவிட் தொற்றுக்கு ஆளானோரின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமை (28,469) புதிய உச்சத்தை எட்டியது.
 
ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கட்டாய சோதனை உட்பட, எண்ணிக்கை உயர்வை எதிர்த்துச் செயலாற்ற அரசு புதிய நடவடிக்கைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தாலும், அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களில் இருந்து ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 
புதன்கிழமை, செக் அரசாங்கம் சமூகத்தின் சில பிரிவுகளுக்கு கட்டாய தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் திட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த மாதத் தொடக்கத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் ப்ராக் மற்றும் பிற நகரங்களில் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
செக் குடியரசின் மொத்த மக்கள்தொகையில் 63% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் சராசரியாக 69% பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.