புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (18:49 IST)

தலாய் லாமா : பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார்

தன்னுடைய இடத்துக்கு எதிர்காலத்தில் வருகின்ற 'பெண் தலாய் லாமா' பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
பிபிசியிடம் கடந்த மாதம் பேசிய திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா, "எதிர்காலத்தில் வரக்கூடிய பெண் தலாய் லாமா ஈர்ப்பு மிக்கவராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், தலாய் லாமா நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறியுள்ள அவரது அலுவலகம், இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

அவர் கூறிய இந்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக தலாய் லாமா மன்னிப்பு கோருவதாக அவரது அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்த வாரம் 84வது வயதை தொடும் ஆன்மிக தலைவரான தலாய் லாமா அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், திபெத்திற்கு அவர் செல்லுவதற்கான கனவு மற்றும் அகதிகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆனால், இவருக்கு பின்னர், பெண் தலாய் லாமா இந்த பதவிக்கு வருவது பற்றிய தலாய் லாமாவின் கருத்து, பலரை அதிர்ச்சியடைய செய்தது.
"பெண் தலாய் லாமா வந்தால், அவர் அதிக ஈர்ப்புடையவராக இருக்க வேண்டும்" என்று சிரித்து கொண்டே தலாய் லாமா தெரிவித்திருந்தார்.

தலாய் லாமாவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், அதனை தவறான புரிந்துகொள்ளப்பட்ட நகைச்சுவையாக எடுத்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாய் லாமா தனது பயணங்களில் எதிர்கொள்ளும் பொருள்வயமான, உலகமயமான உலகத்திற்கு இடையிலான முரண்பாடுகளையும், திபெத்திய பௌத்த பாரம்பரியத்திலுள்ள மறுபிறப்பு பற்றிய சிக்கலான, மிகவும் ஆச்சரியமான கருத்துக்களையும் ஆழமாக உணர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இருப்பினும், ஒரு கலாசார பின்னணியில் ஆதிச்சியூட்டும் கருத்தாகவும், பிற மொழிபெயர்ப்புகளில் நனைச்சுவையை இழப்பதாகவும் தலாய் லாமாவின் இந்த கருத்து இருக்கலாம். இதற்காக அவர் வருந்துவதாகவும்" இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாய் லாமா தனது வாழ்க்கை முழுவதும், பெண்களை பொருட்களாக சித்தரிப்பதை எதிர்த்தும், பாலின சமத்துவத்தை ஆதரித்தும் வந்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அகதிகள் அனைவரும் இறுதியில் தாயகம் திரும்ப வேண்டும் என்கிற கருத்தும் தவறாக மொழிபெயர்க்கப்படலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

"தங்களின் நாட்டை விட்டு வந்துள்ளவர்களில் பலரும், தாயகம் திரும்பி செல்ல விரும்பமாட்டார்கள் அல்லது முடியாமல் போகலாம் என்பதையும் தலாய் லாமா நிச்சயம் ஏற்றுக்கொள்வதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறநெறி கொள்கைகள் குறைவானவர் என்று தலாய் லாமா தெரிவித்த கருத்துகளுக்கு இந்த அறிக்கையில் மன்னிப்பு கேட்கப்படவில்லை.