செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (15:33 IST)

கொரோனா வைரஸ்: சீன பொருளாதாரம் மட்டும் வேகமாக மீண்டெழுவது எப்படி?

கொரோனா தொற்று பாதிப்பால் உலகின் பல மிகப் பெரிய பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சீனா தனது வர்த்தகத்தில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதிகள் 9.9 சதவீதமும், இறக்குமதிகள் 13.2 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. மற்ற பெரிய உலக பொருளாதார நாடுகள், கொரோனா ஊரடங்கால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
 
கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வர்த்தகம் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது சீனாவின் பொருளாதாரம்  மீண்டும் வேகமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
 
சீனாவின் வூஹான் மாகாணத்தில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று பதிவானது.
 
அதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அந்நாட்டு பொருளாதாரத்தில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டது.
 
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மீண்டும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வழக்கமான நிலைக்கு சீனா திரும்பியது.
 
சர்வதேச அளவில் வீட்டு உபயோக மின் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஆடைகளுக்கு ஏற்பட்ட சர்வதேச தேவை,  அவற்றை உற்பத்தி செய்யும் சீனாவுக்கு, சாதகமான சூழலாக அமைந்திருக்கிறது.
 
எனினும், இந்தத் தேவை விரைவில் சரியத் தொடங்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
 
செப்டம்பர் மாத இறுதியில், சீனாவின் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் என இரண்டும் சேர்ந்த மதிப்பு 3.5 ட்ரில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது ஆகஸ்ட்  மாதத்தைவிட 0.7 சதவீதம் அதிகம்.
 
இதனால் கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு அந்நாட்டு பொருளாதாரம் எப்படி இருந்ததோ, அது மாதிரியான ஒரு நிலை.
 
கடந்த ஆக்ஸ்டு மாதம் ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் இல்லாத அளவு மிக வேகமாக சுருங்கியுள்ளது. இதற்கு காரணம் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட  சரிவு.
 
அதேபோல அமெரிக்காவும் பல தசாப்தங்கள் கண்டிராத பொருளாதார சரிவை கடந்த ஜுலை மாதம் பதிவு செய்தது.
 
இந்நிலையில், உலக பொருளாதாரத்தில் ஜுன் மாதம் கணித்ததைவிட சற்று குறைவான மந்தநிலையே இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கருதுகிறது.
 
ஆனால், விரிவான பார்வையை முன்வைத்தால் உலகப்பொருளாதாரம் ஆழமான மந்தநிலையில் இருப்பதாகவும், குறிப்பிடத்தக்க மோசமான விளைவுகளை சந்திக்க  நேரிடும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
 
தற்போது சீனா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதார நிலையில் இருந்து எதிர்பார்த்ததைவிட வலுவாக மீண்டுள்ளது.
 
சீனாவின் பெரிய வர்த்தக கூட்டாளியாக கருதப்படுவது மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பாகும்.
 
சீனாவின் அடுத்த பெரிய வாடிக்கையாளர் சந்தை என்பது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா என சீன சுங்க பொது நிர்வாகத்துறை தெரிவிக்கிறது.