1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:18 IST)

கடும் மின் தட்டுப்பாடால் தத்தளிக்கும் சீனா - காரணம் என்ன?

சீனாவில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு பல லட்சம் வீடுகளும், வர்த்தகங்களும் மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.

சீனாவில் மின்சார தட்டுப்பாடு அரிதான விஷயமல்ல, ஆனால் இந்த ஆண்டு பல காரணிகளால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாக சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை பகுதிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பனிகாலம் நெருங்குகிறது. இதனால் உலகின் பிற பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.
 
சீனாவில் ஏன் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது?
 
சீனாவில் கோடைகாலத்திலோ அல்லது பனிகாலத்திலோ அதிக மின்சார பயன்பாடு இருக்கும் சமயத்தில் கடுமையான மின்சார தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான்.
 
ஆனால் இந்த ஆண்டு சில காரணிகள் இந்த பிரச்னையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
 
பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் மீண்டும் வழக்கம்போல இயங்க தொடங்கி வருகிறது சீனா. இந்நிலையில் சீன பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதனை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.
 
2060ஆம் ஆண்டுக்குள் சீனாவில் கரியமிள வாயுவின் வெளியேற்றம் இல்லாமல் போக வேண்டும் என சீனா சில விதிகளை விதித்துள்ளது.
 
இதனால் நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளது. இருப்பினும் பாதி மின்சாரத்திற்கு நாடு நிலக்கரியைதான் நம்பியுள்ளது.
 
அதேபோன்று மின்சாரத்தின் தேவை அதிகரித்திருப்பதால் நிலக்கரியின் விலையும் அதிகரித்துள்ளது.
 
ஆனால் அரசு மின்சார கட்டணத்தின் மீது கடுமையாக இருப்பதால் நிலக்கரி உற்பத்தி ஆலைகள் நஷ்டத்தில் இயங்க தயாராக இல்லை. எனவே பலர் பெருமளவு உற்பத்தியை குறைத்துவிட்டனர்.
 
இந்த மின்சார தட்டுப்பாட்டால் யாரெல்லாம் பாதிக்கப்படுகின்றனர்?
பல மாகாணங்களில் குறிப்பிட்ட அளவில் மின்சாரம் வழங்கப்படுவதால் வீடுகளும் வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
 
சீனாவின் தெற்கு பகுதியில் இருக்கும் குவான்டாங், வட கிழக்கு பகுதியில் இருக்கும் ஹெய்லோங்ஜியாங், ஜிலின் மற்றும் லியானிக் ஆகிய மாகாணங்களில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் நாட்டின் பிற பகுதிகளிலும் மின்சாரத் தட்டுப்பாடு உள்ளது.
 
முக்கிய உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் அதிக மின் தேவை இருக்கும் சமயங்களில், அதிக ஆற்றலை பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இயங்கும் தினங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
 
எஃக்கு உற்பத்தி, அலுமினியம் உருக்குவது, சிமென்ட் தயாரிப்பு மற்றும் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆகிய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
இது சீன பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?
அதிகாரபூர்வ தகவல்கள்படி, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இந்த செப்டம்பர் மாதம்தான் சீனாவின் தொழிற்சாலைகள் குறைவாக இயங்குகின்றன. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
மின்சாரத் தட்டுப்பாடு குறித்த கவலைகளால் சர்வதேச முதலீட்டு வங்கிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை குறைத்துள்ளன.
 
மின்சாரத் தட்டுபாடால் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி, நாட்டின் தொழிற்சாலை செயல்பாடுகள் 44% அளவு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டு சீன பொருளாதாரம் 7.8% அளவு விரிவடையும் என அந்த வங்கி கணித்துள்ளது. முன்னதாக அது 8.2%ஆக இருக்கும் என கணித்திருந்தது.
 
சர்வதேச அளவில் இது விநியோக சங்கிலியை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் சமயத்தில் அதிக ஷாப்பிங் சீசனில் இது எதிரொலிக்கும்.
 
பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதிக்கான தேவை அதிகரித்திருப்பதால், உலகம் முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் ஏற்கனவே பரவலான இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
 
இதை சரிசெய்ய சீனா என்ன செய்யப்போகிறது?
சீனாவின் பொருளாதாரம் குறித்து திட்டமிடும் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையம், இந்த பிரச்னையை தீர்க்க பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது.
 
நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரித்தல், நிலக்கரி விநியோகத்தை அதிகப்படுத்தி மின்சாரத்தை வழங்குவது போன்ற திட்டங்களை வகுத்துள்ளது.
 
உற்பத்தி நிறுவனங்களின் கவுன்சிலான சீன மின்சார கவுன்சில் நிலக்கரி எரிமின் நிறுவனங்கள் தங்களின் கொள்முதல் அளவுகளை விரிவுபடுத்துவதாக தெரிவித்துள்ளது. குளிர்காலத்தில் தேவைப்படும் நெருப்பு மூட்டல் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய இது உதவும் என கவுன்சில் தெரிவித்துள்ளது.
 
அதேபோன்று நிலக்கரி இறக்குமதிக்கான புதிய ஆதாரங்களை தேடுவது எளிதான விஷயமல்ல. ஐரோப்பாவில் உள்ள தங்களின் வாடிக்கையாளர்களை ரஷ்யா ஏற்கனவே இலக்கு வைத்துவிட்டது. இந்தோனீசிய நிறுவனங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மங்கோலியாவில் சாலை வழியாக கொண்டுவருவதற்கான போதுமான வசதிகள் இல்லை.
 
உலகில் உள்ள ஆற்றல் குறைப்பாடுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதா?
சீனாவின் மின்சாரத் தட்டுப்பாடு, பிரிட்டன் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு, ஐரோப்பாவில் ஆற்றல் சக்திகளுக்கான கட்டணங்கள் அதிகரித்தல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரியின் விலை மொத்த விற்பனை சந்தையில் அதிகரித்தல்... இவை அனைத்தும் சர்வதேச அளவில் ஒரு ஆற்றல் வறட்சி ஏற்பட்டுள்ளது போல நினைக்க வைக்கிறது
 
இருப்பினும் அதை அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. உலகம் முழுவதும் வேறு சில காரணங்களும் உண்டு.
 
எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் டாங்கர் ஓட்டுநர்களின் தட்டுப்பாட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் மக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்தனர்.
 
ஐரோப்பாவில், ஆற்றல் பயன்பாட்டிற்கான கட்டணம் அதிகரிக்க பல உள்ளூர் காரணிகள் உண்டு. குறைந்த எரிவாயு சேமிப்பு, பிராந்திய காற்றாலையில் குறைவான உற்பத்தி, சூரிய சக்தி ஆலைகள் சரியாக இயங்காமை ஆகியவை அதில் அடங்கும்.