செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 மே 2018 (18:54 IST)

வருடத்திற்கு 600 கோடி கரப்பான்பூச்சிகளை உற்பத்தி செய்யும் சீனா

கரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

 
வறுக்கப்பட்ட கரப்பான்பூச்சிகள் சீனாவில் பல ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகின்றன. பல ஆசிய நாடுகளிலும் கரப்பான்பூச்சி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி உற்பத்தியானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
 
மிகப்பெரிய அளவில் மருந்துகளை தயாரிக்கும் ஒரு மருந்து நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் பூச்சிகளை தயாரித்து வருகிறது. நாட்டின் தென் மேற்கு நகரமான ஷிசங்கில் இது அமைந்துள்ளது.
 
இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு இருக்கும் கட்டடத்தில் இந்த பூச்சிகள் வளர்க்கப்படுகின்றன என தென் சீன மார்னிங் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
 
உள்ளே பரந்த வரிசையில் உள்ள அலமாரிகளில் திறந்த உணவு மற்றும் நீர் கொள்கலன்கள் உள்ளன. அவை சூடாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் மற்றும் இருட்டாகவும் இருந்தன.
 
பண்ணைக்குள் பூச்சிகள் சுதந்திரமாக சுற்றலாம் இனப்பெருக்கம் செய்யலாம் ஆனால் அவை அங்கிருந்து வெளியேறவோ பகல் வெளிச்சத்தை பார்க்கவோ முடியாது.
 
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு கருவி அமைப்பு இந்த பண்ணையை கட்டுப்படுத்துகிறது. வெப்பநிலை, ஈரப்பதம், உணவு வழங்குதல் உள்ளிட்ட அனைத்துவித சேவைகளையும் இந்த அமைப்பு ஒழுங்குபடுத்துகிறது.
 
இந்த பண்ணையின் நோக்கம் கரப்பான்பூச்சிகள் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக இனப்பெருக்கம் செய்ய உதவுவதே.
 
கரப்பான்பூச்சி இளம்பருவத்தை அடைந்ததும் பிரத்யேக முறையில் ஒரு அமைப்பு மூலம் கவரப்பட்டு கொல்லப்படும். இறந்த பின்னர் அவை பதப்படுத்தப்பட்டு, பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படக்கூடிய சிகிச்சை முறைக்கான திரவ மருந்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
 
இந்த திரவ மருந்தானது மோசமான நாற்றத்துடன் இனிப்பான சுவையுடன் இருக்கும். இது காங்ஃ புக்ஸின் என அறியப்படுகிறது. இரைப்பை குடல் அழற்சி, கடுமையான வயிற்றுப் புண் மற்றும் அழற்சி, சுவாச பிரச்சினைகள் மற்றும் சில பிணிகளுக்கும் மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.
 
மருத்துவ பயன்பாடுகளுக்காக கரப்பான்பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. மேலும் இந்த பூச்சிகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் மருத்துவமனைகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன என்றபோதிலும் அங்கே எதிர்ப்புக் குரல்கள் இருக்கின்றன.