புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (22:17 IST)

சீனா - இந்தியா: ஜியோமியின் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்ன?

இன்னும் இரண்டே நாட்களில் 2019ஆம் ஆண்டு மட்டுமல்ல, இந்த தசாப்தமும் நிறைவடைய உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில், குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில், இந்த தசாப்தத்தில், ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய நிறுவனமாக தொடங்கிய ஒன்பதே ஆண்டுகளில் உருவெடுத்துள்ளது சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜியோமி நிறுவனம்.
 
2010இல் வெறும் 100 பணியாளர்களுடன், பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜியோமி நிறுவனம், இன்று 17,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் உலகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்கி பெருகியுள்ளது.
 
இந்த தசாப்தத்தில் தொழில்நுட்ப உலகில் புதிதாக உதயமாகி, மலைக்க வைக்கும் வளர்ச்சியை அடைந்துள்ள ஜியோமி நிறுவனத்தின் வெற்றிக்கதையை இந்த கட்டுரையில் காண்போம்.
 
படிப்படியான வளர்ச்சி
2010ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி லீ ஜூன் உள்ளிட்ட ஏழு பேரால் ஜியோமி நிறுவனம் தொடங்கப்பட்டது. சீனாவின் பெய்ஜிங்கை தலையிடமாக கொண்டு செயல்பட்ட இந்த நிறுவனத்தில் அப்போது வெறும் 100 பேர் தான் பணிபுரிந்தார்கள்.
 
திறன்பேசிகளுக்கும் மற்ற தொழில்நுட்ப கருவிகளுக்கும் பெயர்போன சீனாவில் இதே காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருந்தன; எனினும், மக்கள் தொகையில் உலகின் முதல் நாடாக விளங்கும் சீனாவில், அப்போது ஆப்பிளை போன்ற வசதிகளுடன், ஆனால் விலை குறைந்த திறன்பேசிக்கு தட்டுப்பாடு நிலவியது.
 
அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜியோமி நிறுவனம், தன்னுடைய முதல் திறன்பேசியான ஜியோமி எம்.ஐ. 1-ஐ 2011ஆம் ஆண்டும், ஜியோமி எம்.ஐ. 2ஐ அதற்கடுத்த ஆண்டும் அறிமுகப்படுத்தியது.
 
முதல் இரண்டு ஆண்டுகளில் புதிய விற்பனையகங்கள், சேவை மையங்களை அமைப்பதிலும், மக்களின் நன்மதிப்பை பெறுவதிலும் கவனம் செலுத்தியது ஜியோமி. இந்நிலையில், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜியோமி எம்.ஐ. 3 திறன்பேசிகள் சுமார் இரண்டு கோடி எண்ணிக்கையில் விற்பனையானதன் மூலம் புதிய சாதனையுடன், சீனாவின் ஐந்தாவது மிகப் பெரிய திறன்பேசி நிறுவனமாக ஜியோமி உருவெடுத்தது.
 
அதே ஆண்டில், திறன்பேசிகள் மட்டும் எங்களது இலக்கு அல்ல என்று கூறிய ஜியோமி, முதல் முறையாக 47 அங்குல ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தி அதிசயிக்க வைத்தது.
 
இந்தியாவில் கால்பதிப்பு
 
சீனாவில் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்திய பிறகு, 2014ஆம் ஆண்டு தனது சர்வதேச தலைமையகத்தை சிங்கப்பூரில் தொடங்கிய ஜியோமி, அதே ஆண்டில் தனது திறன்பேசிகளை இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தியது.
 
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவின் முன்னணி இணையதள வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டுடன் கைகோர்த்த ஜியோமி, 'ஹங்கர் மார்க்கெட்டிங்' எனப்படும் வாடிக்கையாளர்களை காக்க வைத்து, எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வைத்து, நிமிடத்தில் தயாரிப்புகளை விற்பனை செய்யும் ஒருவித வியாபார உத்தியை பயன்படுத்தி 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் எம்.ஐ. 3-யை இந்தியாவில் வெளியிட்டது.
 
முதல் 'பிளாஷ் சேலில்' 30 நிமிடங்களிலும், அடுத்தடுத்த விற்பனைகளில் ஒரு சில நொடிகளிலும் எம்.ஐ. 3 திறன்பேசிகள் இந்தியாவில் விற்று தீர்ந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 2014இல் மட்டும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆறு கோடி திறன்பேசிகளை ஜியோமி நிறுவனம் விற்பனை செய்தது.
 
சீனாவின் ஆப்பிள்
சந்தைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே 'சீனாவின் ஆப்பிள்' என்ற பெயரை பெற்ற ஜியோமி நிறுவனம், இந்தியாவில் கிடைத்த வரவேற்பால் அங்கு பிரத்யேக திறன்பேசிகளை வெளியிட தொடங்கியது.
 
2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இணையதளம் மட்டுமின்றி கடைகள் வாயிலாகவும் தனது திறன்பேசிகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்த ஜியோமி, அதே ஆண்டில் எம்.ஐ. 1எஸ் எனும் திறன்பேசியை சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளை விடுத்து இந்தியாவில் முதலாவதாக அறிமுகப்படுத்தியது.
 
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஆப்பிளின் ஐஃபோனை போன்ற வடிவமைப்புடனும், சாம்சங்கின் விலையுயர்ந்த திறன்பேசிகள் அளித்த வசதிகளுடனும் கூடிய ரெட்மி நோட் 3-யை குறைந்த விலையில் வெளியிட்டு இந்திய திறன்பேசி பயன்பாட்டாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய ஜியோமி, விற்பனையில் சாதனை படைத்தது.
 
இதன் மூலம், இந்திய சந்தையின் முக்கியத்துவத்தை மென்மேலும் புரிந்துகொண்ட ஜியோமி நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவை மையமாக கொண்டு திறன்பேசிகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், அங்கு படிப்படியாக தொழிற்சாலைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமைத்தது.
 
2018இல் இந்தியாவில் அதிகமான திறன்பேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் பல்லாண்டுகளாக கோலூச்சி வந்த சாம்சங்கை பின்னுத்தள்ளி முதலிடத்தை பிடித்தது ஜியோமி. அதுமட்டுமின்றி, 2018இல் இந்தியாவின் மிகவும் பிரபலமான திறன்பேசி தயாரிப்பு நிறுவனம் எனும் பெயரையும் பெற்றது.
 
அதே போன்று, 2019ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரையிலான தரவை பார்க்கும்போது, ஜியோமி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐடிசி ஆய்வு நிறுவனம் இதனை உறுதிப்படுத்துகிறது.
 
தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவில் ஆறு உற்பத்தி மையங்களை கொண்டுள்ள ஜியோமி நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜியோமி திறன்பேசிகளில் 99% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்றும், ஒரு நொடிக்கு மூன்று திறன்பேசிகளை உற்பத்தி செய்யும் நிலையை தாங்கள் எட்டியுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலரான முரளிகிருஷ்ணன் கூறியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
குறிப்பாக, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புத்தூர் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீசிட்டி ஆகியவற்றிலுள்ள ஜியோமி உற்பத்தி மையங்களில் தயார் செய்யப்படும் திறன்பேசிகள் நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
தொடர்ந்து அறிமுகமாகும் புதிய தயாரிப்புகள்
 
திறன்பேசிகளை மையாக கொண்ட தொழில்நுட்ப சந்தைக்குள் நுழைந்த ஜியோமி நிறுவனம் இன்று எண்ணற்ற தயாரிப்புகளை வெளியிட்டு தனது சந்தை பங்களிப்பை பன்மடங்கு பெருக்கியுள்ளது.
 
தொடக்கத்தில் மற்ற நிறுவனத்தின் முதலீட்டுக்காக காத்து கொண்டிருந்த ஜியோமி நிறுவனம், இன்று 270க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளதோடு, குறிப்பாக இந்தியாவில் புதிதாக 100 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
 
திறன்பேசி மட்டுமின்றி, தொலைக்காட்சிப்பெட்டி, பவர் பேங்க், ஸ்மார்ட் வாட்ச், இயர் ஃபோன், காற்றை சுத்திகரிக்கும் இயந்திரம், ஸ்பீக்கர், கண்காணிப்பு கேமராக்கள், ஸ்மார்ட் ஹோம் உபகரணங்கள், மொழிபெயர்ப்பு கருவிகள், ஆடைகள், காலணிகள், பைகள் உள்ளிட்ட எண்ணற்ற தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
 
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஜியோமியின் வெற்றியை சாத்தியப்படுத்தியது எது?
ஜியோமியின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் சீனாவை விட இந்திய சந்தையே ஜியோமியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை தரவுகள் வெளிப்படுகின்றன.
 
இந்த நீண்டகால மாற்றத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிந்த ஜியோமி நிறுவனம், சீரான இடைவெளியில் தனது நிறுவனம் மீதான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தியதே அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
 
நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா?
உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா?
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், விலையுயர்ந்த திறன்பேசிகளின் சிறப்பம்சங்களை குறைந்த விலையில் எதிர்பார்க்கும் பயன்பாட்டாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் விற்பனைக்கு பிந்தைய வாடிக்கையாளர்கள் சேவையில் அவப்பெயரை பெற்று நிலைத்தடுமாறுகின்றன.
 
அந்த வகையில், இந்தியா முழுவதும் 2500க்கும் மேற்பட்ட சேவை மையங்களை கொண்டுள்ள ஜியோமி நிறுவனம், அதை இன்னும் விரிவுப்படுத்துவதற்கு திட்டமிட்டு வருகிறது.
 
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அதுமட்டுமின்றி, காலத்துக்கேற்ற வகையில் தேவைப்படும் எண்ணற்ற புதிய தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து, 'ஜியோமி' என்ற ஒற்றை பெயரில் தயாரிப்புகளை வெளியிடுவது அந்நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்குகிறது.
 
மேலும், 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக இந்தியாவில் தனது செயல்பாட்டை அதிகரித்த ஜியோமி, இந்தியாவில் உற்பத்தி மையங்களை ஆரம்பித்ததன் மூலம், சீனாவை சேர்ந்த நிறுவனம் என்ற அறிமுகத்தை மெல்ல மெல்ல மாற்றி, தனது நிறுவனத்தின் பெயரை முதன்மையாக கொள்ளும் நிலையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
 
அதேநிலையில், ஜியோமி நிறுவனத்துக்கு சவால் கொடுக்கும் வகையில் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மற்றொரு நிறுவனமான ஒன் பிளஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன.
 
2014 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டுகளில் இந்தியாவின் திறன்பேசி சந்தையில் முதலிடத்தை வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள ஜியோமிக்கு வரும் ஆண்டு/ தசாப்தம் மிகப் பெரும் சவால்களை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.