ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (13:30 IST)

40 ஆண்டுகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா உருவானது எப்படி?

40 ஆண்டுகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா உருவானது எப்படி? சீனாவில் மா சே துங் காலத்துக்கு பிறகு, பொருளாதார புரட்சி ஏற்படுத்திய புகழ் டெங் ஷியாபிங் என்பவரையே சாரும்.



1978ஆம் ஆண்டு டெங் ஷியாபிங் தொடங்கிய பொருளாதார புரட்சி 2018ஆம் ஆண்டில், 40 ஆண்டுகள் பயணித்து இன்று சீனா உலக அளவில் பெற்றிருக்கும் மகத்தான இடத்தை அடைந்திருக்கிறது. இதை, சீனாவின் இரண்டாவது புரட்சி என்று சொல்கிறார் டெங் ஷியாபிங்.

இந்த பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிறகே உலக அளவில் பெரிய பொருளாதார சக்தியாக வலுவுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது சீனா. இன்றைய நிலையில் சீனாவிடம் அதிக அளவிலான அந்நிய செலாவணி இருப்பு, (3.12 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) யின் அடிப்படையில் (11 டிரில்லியன் டாலர்கள்) சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய நாடாக திகழும் சீனா, நேரடி அந்நிய முதலீட்டை ஈர்க்கும் உலகின் மூன்றாவது பெரிய நாடு.

1978ஆம் ஆண்டில் டெங் ஷியாபிங் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டபோது உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்களிப்பு 1.8% ஆக இருந்தது. 2017ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு 18.2% ஆக உயர்ந்துவிட்டது.

சீனப் பொருளாதாரம் வளர்ந்துவரும் பொருளாதாரம் மட்டுமல்ல, தனது வலிமையான கடந்த காலத்தை நோக்கி மீண்டும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு கிட்டத்தட்ட 30 சதவீதமாக இருந்தது.



சீனாவை வலுவாக மாற்றியவர்களைப் பற்றி பேசும்போது, மா சே துங், டெங் ஷியாபிங் மற்றும் தற்போதைய தலைவர் ஷி ஜின்பிங் ஆகிய மூவரின் பெயர் முதலிடங்களைப் பிடிக்கும். டெங் ஷியாபிங்கின் பொருளாதாரப் புரட்சி தொடங்கிய 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷி ஜின்பிங் போன்ற ஒரு வலுவான தலைவரின் தலைமையில் சீனா மீண்டும் முன்னோக்கி நகர்கிறது.

உற்பத்தி அடிப்படையில் சீனாவின் பொருளாதாரத்தை வலுவாக்க விரும்புகிறார் ஷி ஜின்பிங். அதற்காக அவர், டெங் ஷியாபிங்கின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார். அதன்படி, பொருளாதாரத்தை திறந்துவிடுவது, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது உட்பட பல முயற்சிகளை மேற்கொள்கிறார்.

சீனாவின் பொருளாதார வெற்றி மற்றும் கம்யூனிச அரசியலுக்கு இடையே மோதல் நிலவும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

சீனாவின் பொருளாதார முன்னேற்றமானது, அந்நாட்டின் கம்யூனிச அரசியலின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டது.

சீனாவின் முழு அரசியல் அதிகாரமும் ஷி ஜின்பிங்கின் கைகளுக்குள் அடங்கியுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தலைவர்கள் பொருளாதாரத்தை எந்த அளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்புகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.


சீனாவின் எழுச்சியின் கதை, இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட வளர்ச்சிக் கதை அல்ல. ஆனால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்த பொருளாதாரத்திலிருந்து விடுபட்டு, சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறிய பொருளாதாரப் புரட்சியின் கதை. உலகின் பல நாடுகள் சீனாவைப் போலவே மாற்றங்களை ஏற்றுக்கொண்டாலும், பல்வேறு கோணங்களில் இந்த விஷயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது சீனா.

உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றத்தை மேற்கொண்ட சீனா, சந்தையின் மீதான நம்பிக்கையையும் விட்டுவிடவில்லை. சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, வெளிநாட்டு முதலீடுகளை எங்கு செய்யலாம், எங்கு செய்யக்கூடாது என்பதில் கவனமாக முன்னுரிமை கொடுத்து முடிவெடுத்தது சீனா.



இதற்காக, சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று உருவாக்கப்பட்டது. தெற்கு கரையோர மாகாணங்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்க்காக தேர்வு செய்யப்பட்டன.

கம்யூனிச சோசலிச அரசியல் சூழலில் வலுவான மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தார் டெங் ஷியாபிங். அதன் முதல் கட்டமாக சோவியத் பொருளாதார மாதிரியின் அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைத்த அவர், பின்னர் சீனாவின் தேவைகளுக்கு ஏற்ப படிப்படியாக, சோசலிச அடிப்படையில் பொருளாதாரத்தில் நவீனமயமாக்கல் செயல்முறையை தொடங்கினார்.

'Cracking the China Kandrum: Why Conventional Economic Wisdom Is Wrong' என்ற புத்தகத்தில் சீன எழுத்தாளர் யூகோன் ஹுவாங் இவ்வாறு குறிப்பிடுகிறார், "டெங் ஷியாபிங் மாபெரும் சீர்திருத்தவாதி மட்டுமல்ல, பொறுப்பானவரும் கூட".

டெங் ஷியாபிங் தொடங்கிய சமுதாய பொருளாதார சீர்திருத்தம் உலக சரித்திரத்தில் இதற்கு முன் மேற்கொள்ளப்படவில்லை. 1978 - 2016 ஆண்டுகளுக்கு இடையில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,230% அதிகரித்தது.

இதே காலகட்டத்தில் 70 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு வரப்பட்டனர். 38.5 கோடி மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக உயர்த்தப்பட்டனர்.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் 17,500 சதவிகிதம் அதிகரித்தது, 2015வது ஆண்டுவாக்கில் சீனா வெளிநாட்டு வர்த்தகத்தில் உலக அளவில் முன்னிலை பெற்றது. 1978 ஆம் ஆண்டில், ஆண்டு முழுவதிலும் செய்த வர்த்தகத்தை தற்போது இரண்டே நாட்களில் செய்கிறது சீனா.

சீன கம்யூனிஸ்ட் கட்சி (சி.சி.பி) கூட்டு தலைமையின் கீழ், சீனாவில் சமூக பொருளாதார மாற்றத்துக்கான துரிதமான செயல்முறையைத் தொடங்கினார் டெங் ஷியாபிங். 1960 மற்றும் 70களில் வாங்கிய பல அடிகளுக்கு பிறகு மாவோவின் பாணியைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையையும் அவர் கடைபிடித்தார்.

சர்வதேச உறவுகள் தொடர்பாக சில கொள்கைகளை வைத்திருந்த டெங் ஷியாபிங், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளமாட்டார். சீனப் பொருளாதாரத்தை துரித கதியில் உயர்த்துவதிலேயே அவரது கவனம் முழுமையாக இருந்தது.




ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் பேராசிரியராக இருந்த எஜ்ரா வோஜெல், டெங் ஷியாபிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அவர் மாபெரும் தலைவர்களில் ஒருவர் என்றும், எந்தவிதமான சிக்கலையும் சமாளித்து, நிலைத்தன்மையை ஏற்படுத்தும் திறன் கொண்டவர் அவர் என்றும் கூறுகிறார்.

சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் சீன குடிமக்களிடையே பொருளாதார செழிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தை பலப்படுத்தி ஆட்சியையும் வலுப்படுத்தியது.

ஷி ஜின்பிங் மற்றும் புதிய சகாப்தம்
டெங் ஷியாபிங் அடிக்கடி இரண்டு பூனை சித்தாந்தத்தை மேற்கோள் காட்டுவார். ஓடும் எலியை பூனை பிடிக்கும் வரை, பூனையின் நிறம் கருப்பா வெள்ளையா என்பது முக்கியமில்லை என்று அவர் கூறுவார்.

இதே வழியில், சீன மனோபாவத்தில் புதிய தொழில் துறை வளர்ச்சியை முன்மொழிந்தார் ஷி ஜின்பிங். 2014 ஆம் ஆண்டில் 12வது தேசிய காங்கிரசில் உரையாற்றும் போது, 'இரண்டு பறவை தத்துவம்' என்ற ஒன்றை முன்வைத்தார் அவர். கூட்டை திறந்து விட வேண்டிய அவசியம் இருக்கிறது, அந்தக்கூண்டில் வயதான, இறுதி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பறவைகளை அடைக்கவேண்டும் என்று கூறினார் ஷி ஜின்பிங்.

'சோசலிசம் மற்றும் புதிய சகாப்தத்தில் சீனாவின் பண்புகள்' என்ற தலைப்பில் தனது தத்துவத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்து வைத்தார் ஷி ஜின்பிங். அதை தொடர்ந்து, உயர் அதிகாரிகளும், அந்நாட்டின் ஊடகங்களும் தொடர்ந்து அதை, `ஷி ஜின்பிங்கின் கோட்பாடுகள்` என்றே குறிப்பிட்டன.

இதை செயல்படுத்தினால், சீனா வெற்றியடையும் என்று அவர் கூறினார். வளர்ச்சியுடன், அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

சீனாவின் அடுத்த தலைவர் யார்? என்பதே இப்போது சீனாவில் எழுப்பப்படும் முக்கியமான கேள்வி. கடந்த ஆண்டு மார்ச் மாதம், சீன நாடாளுமன்றம் (தேசிய மக்கள் காங்கிரஸ்), அதிபர் பதவிக்கான கால வரம்பை நீக்கியது.


ஷி ஜின்பிங் கோட்பாடு, சீனாவில் சோசலிசம் பற்றிய புதிய பார்வையை அறிமுகப்படுத்தியது. இது சீனாவின் ஒரு புதிய அத்தியாயத்தை அல்லது சகாப்தத்தைக் குறிக்கிறது.




விளக்கமாக கூறினால், சீனாவின் முதல் தலைவரான மாவோவின் கீழ், உள்நாட்டு போரால் பிளவுபட்டு இருந்த நாடு ஒன்றுபட்டது. இரண்டாவது தலைவரான டெங் ஷியாபிங்கின் கீழ், நாடு வளமடைந்தது; இந்த புதிய சகாப்தத்தில், நாடு மேலும் அதிக ஒற்றுமை மற்றும் வளங்களை பெறுவதோடு, உள்நாட்டில் ஒழுக்கத்தையும், வெளிநாட்டில் உறுதியும் பெறவேண்டும்.

அரசாங்கத் துறைக்கு ஷி ஜின்பிங் கடிவாளம் போட்டார். உதாரணமாக, அரசாங்க நிறுவனங்களை கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி, நிர்வாகத்தின் பொறுப்பில் முழுமையாக ஒப்படைத்தார். அதேபோல், தொண்டு நிறுவனங்கள் மீதும் கிடுக்கிப்பிடி போட்டார்; பல மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனது தந்தையைப் போலவே ஷி ஜின்பிங் தாராளமாக இருப்பார் என்று பலர் நம்பினர். ஷி ஜின்பிங்கின் தந்தை ஷி சோங்ஷூன், 1978ஆம் ஆண்டு குவாங்டாங் மாகாண ஆளுநராக பதவி வகித்தார். அவர் டெங் ஷியாபிங்கின் பொருளாதாரப் புரட்சியில் பங்களித்தவர்.

2012 டிசம்பர் மாத தொடக்கத்தில், ஷி ஜின்பிங், முதல் உத்தியோகபூர்வ பயணமாக குவாங்டாங்கின் ஷென்செனுக்கு சென்றார். டெங் ஷியாபிங்கின் பொருளாதார சீர்திருத்தங்களில் எந்த தடையும் ஏற்படாது என்பதை இந்த பயணத்தின் மூலம் அவர் அனைவருக்கும் தெரிவிக்க முயன்றார். கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை அதை உணர்த்தியும் இருக்கிறார்.

தாராளமயமாக்கலின் எல்லை

தாராளமயமாக்கலுக்கு முழு அளவிலான திட்டத்தை சீனா தயார் செய்துவிட்டது. சீனத் தலைவர்கள் மத்திய தலைமையை வலியுறுத்தினாலும், உள்ளூர் அரசாங்கத்திற்கும், தனியார் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே ஆழமான இணக்கம் ஏற்பட்டுவிட்டது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சீனா அதிகாரம் வழங்கியிருக்கிறது. முந்தைய தலைவர்களுடன் ஒப்பிடுகையில், ஷி ஜின்பிங் பொதுத்துறை-தனியார் கூட்டாண்மையை வலியுறுத்துபவராக இருக்கிறார்.

2014க்கு பிறகு, சீனாவில் தனியார் முதலீடு துரித வளர்ச்சி கண்டுள்ளது. உலகம் முழுவதும் சீனாவின் வர்த்தகத்தை விரிவாக்கினார் ஷி ஜின்பிங். பெல்ட் அண்டு ரோடு திட்டம் (The Belt and Road Initiative (BRI) எனப்படும் பட்டுசாலை மற்றும் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ், ஆசியா, ஐரோப்பா, மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களை கட்டமைப்பு மற்றும் வணிக வலைப்பின்னல் மூலம் இணைக்கும் திட்டத்தை ஷி முன்னெடுத்திருக்கிறார்.

சமீபத்திய நாட்களில், சீனாவின் நோக்கங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உதாரணமாக, சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை இலங்கை செலுத்த தவறிவிட்டதால், தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு ஒப்படைத்தது இலங்கை.

இதே போன்ற பிடியில்தான் ஜிபெளட்டி, பாகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் சீனாவிடம் சிக்கியுள்ளன. உலக வர்த்தக அமைப்பில் 2001ஆம் ஆண்டு முதல் சீனா இடம் பெற்றுள்ளது. அப்போதிலிருந்து வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக சீனா ஏழாயிரம் விதிமுறைகளை ரத்துசெய்துவிட்டது. 2011ஆம் ஆண்டில் இருந்து சீனா சராசரியாக 10 சதவிகித அளவுக்கு வரியை குறைத்து விட்டது.