வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:53 IST)

'சிக்கன் கபாப்'பில் காரம் குறைவு; மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

(இன்று 02/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)

பெங்களூருவில் 'சிக்கன் கபாப்'பில் காரம் குறைவாக இருந்ததால் மனைவியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியர், காவல்துறைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவரது மனைவி ஷாலினி. இருவரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். சுரேஷ் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த அவர், 'சிக்கன் கபாப்' செய்யும்படி மனைவியிடம் கூறியுள்ளார். அப்போது கபாப்பில் காரம் குறைவாக இருந்ததாகவும் இதனால் கோபமடைந்த சுரேஷ் மனைவியை வீட்டில் இருந்த கத்தியால் குத்தி, உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுவதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஷாலினியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் மனைவி இறந்துவிட்டதாக நினைத்த சுரேஷ், காவல்துறைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது சென்னையின் 2-வது விமான நிலையம்
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார் என, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Flight

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, "சென்னையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை விமான நிலையம் அமைக்கத் திட்டம் உள்ளதா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

"சென்னைக்கு அருகே புதிய விமான நிலையம் அமைக்க 4 இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டது. விமான நிலையங்கள் அமைக்க அடிப்படை சாத்தியமுள்ள பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய 2 இடங்களை கண்டறிந்த ஆணையம், அதை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தது.

அந்த இரண்டு இடங்களிலும் அடுத்தகட்ட சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. விளை நிலங்கள், தொழிற்சாலைகள், மக்கள் வசிக்கும் பகுதிகள், நிலத்தை கையகப்படுத்த ஆகும் செலவு என பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த தமிழ்நாடு அரசு, இறுதியாக, புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைய எல்லா வகையிலும் ஏற்ற இடம் பரந்தூர் என முடிவெடுத்து மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

இறுதி செய்யப்பட்டுள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதிக்கான இட அனுமதியை வழங்கும்படி கேட்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பும். அனுமதி கிடைத்த பிறகு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும்" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் மற்றொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது

'கோட்டா கோ கம' போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான 'ரட்டா' எனப்படும் ரதிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி மே 21ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ரட்டா கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினத்தவருக்கு பிரதமர் பதவியை வழங்குங்கள் - நளின் பண்டார

குறுகிய காலத்திற்காக அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினர் பிரதிநிதியொருவரை அதன் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பரிந்துரைத்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் கூறுகையில், "இனவாதத்தைத் தூண்டி மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் இரு ஆண்டுகளிலேயே பதவி துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களது ஆட்சியில் மக்களின் கனவுகள் சிதறடிக்கப்பட்டுள்ளன. இன்று பெட்ரோல் மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றைப் பெற்த்றுக் கொள்வதே மக்களின் கனவாகவுள்ளது.

நாட்டை இந்த நிலைமைக்கு உள்ளாக்கிய அஜித் நிவாட் கப்ரால், பி.பி.ஜயசுதந்திர உள்ளிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அதனை விடுத்து தற்போதுள்ள அரசாங்கமும் நாடாளுமன்றமும் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் எனில் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

விரைவில் பொதுத் தேர்தலுக்குச் செல்லக் கூடியவாறு குறுகிய காலத்திற்கு சர்வகட்சி அரசாங்கமஒன்றை அமைப்பதாகக் கூறினால் அது தொடர்பாக அவதானம் செலுத்த முடியும்.

அந்த அரசாங்கத்தில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரை பிரதமராக நியமித்து ஒரு முன்னுதாரணமாக செயற்பட முடியும். அதனை விடுத்து கால வரையற்ற சர்வகட்சி அரசாங்கத்தில் எம்மால் இணைய முடியாது" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.