1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (09:51 IST)

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு: இளவரசர் ஹாரி, சீமாட்டி மேகன் மார்க்கல் அதிர்ச்சிப்பேட்டி!

பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ் இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் வெளியிட்டு வரும் நேர்காணலில் வெளியிடும் விவரங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
 
பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹாரி ,மேகன் மார்க்கல் ஆகியோர் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்.
 
அடிப்படையில், ஹாரியும் மேகன் மார்க்கலும் இன்னமும் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தாலும், கடந்த மாதம் இவர்கள் இருவரும் அரசு குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டு மணி நேர நேர்காணலில் ஹாரி, மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவை குறித்து பேசி வருகின்றனர்.
 
அவற்றில் சில முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம்.
 
'நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை'
அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, "நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை" என்று கூறிய அவர், இதை நான் ஹாரியிடம் கூறுவதற்கு "வெட்கப்படுகிறேன்", ஏனெனில் அவர் "சந்தித்த இழப்புகள்" அவ்வளவு அதிகம் என்று கூறினார்.
 
அப்போது நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, "ஆம்" என்று மேகன் பதிலளித்தார். "அது எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.
 
மேலும், தனது இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற "அமைப்பொன்றின்" உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேகன் தெரிவித்துள்ளார்.
 
"குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்"
 
ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினர் தன்னை பொருளாதார ரீதியில் முற்றிலும் கைவிட்டதாகவும், தனது பாதுகாப்புக்கு தானே பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இளவரசர் ஹாரி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
 
எனினும், தன்னுடைய தாய் விட்டுச்சென்ற பணம் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். "என்னைப் பொறுத்தவரை, நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவி என் பக்கத்தில் அமர்ந்திருக்க, உங்களுடன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
 
அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகியபோது சந்தித்த விடயங்கள் குறித்து மேலும் பேசிய அவர், "இது எங்கள் இருவருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் ஒருவருக்கொருவராக இருந்தோம்" என்று ஹாரி கூறினார்.
 
அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலக என்ன காரணம் என்று ஓப்ரா கேட்டபோது, "அது அவசியப்பட்டது," என்று ஹாரி கூறினார். "நாங்கள் எல்லா இடங்களுக்கும் தனித்தனியாகவும் இணைந்தும் சென்று உதவி கேட்டோம்." என்று அவர் கூறினார்.
 
அப்படியென்றால் நீங்கள் உதவி கேட்டு அது கிடைக்காமல் போனதால்தான் அந்த முடிவை எடுத்தீர்களா என ஓப்ரா கேட்டதற்கு, "ஆமாம்" என தெரிவித்த ஹாரி, "அப்போதும் கூட நாங்கள் குடும்பத்தை விட்டு விடவில்லை," என்று கூறினார். அப்போது மேகன், "அவர்கள்தான் ஏற்கெனவே உள்ள ஒரு வகை பொறுப்பில், அதாவது அரச குடும்பத்து மூத்த உறுப்பினர் பொறுப்பில் இல்லாதவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்கள்," என்று தெரிவித்தார்.
 
எனது ஒரே வருத்தம் எல்லாம் வரலாறு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதுதான் என்று கூறிய ஹாரி, சமூக ஊடக பரிணாமங்களும் போட்டியும், எனது தாய்க்கு நேர்ந்த நிலையை விட இது மிகவும் அபாயகரமானது என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.