1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (08:51 IST)

சந்திரயான் – 2 விண்கலத்தின் ரோவர் குறித்து தகவலை வெளியிட்டுள்ள தமிழக பொறியாளர்

சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் கலன் சேதமடையாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் -2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 22ஆம் தேதி விண்ணிற்கு செலுத்தியது.
 
பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு 2019 செப்டம்பர் 7ஆம் தேதி நிலைவை நெருங்கிய நிலையில், சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன், நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக தெரிகிறது.
 
இதையடுத்து தொடர் முயற்சியில் லேண்டர் இருப்பிடத்தை இஸ்ரோ கண்டறிந்தாலும் அதை உறுதி செய்வதில் சிரமங்கள் நீடித்தன. இந்த சூழலில் நிலவை சுற்றி வரும் நாசாவின் எல் ஆர் ஓ விண்கலம் எடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவற்றின் உதவி கொண்டு லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வட மேற்கில் 750 மீட்டர் தூரத்தில் உடைந்த பாகங்கள் தென்படுவதாக தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சன்முக சுப்ரமணியன் நாசாவுக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் லேண்டர் விழுந்த இடம் மற்றும் உடைந்த பாகங்களை ஆய்வின் மூலம் நாசா உறுதி செய்தது.
 
இந்நிலையில் சந்திரயான் விண்கலத்தின் ரோவர் சேதமடையாமல் இருந்திருக்க கூடும் என்ற புதிய தகவலை பொறியாளர் சண்முக சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், "நிலவில் லேண்டர் வேகமாக சென்று மோதியதில் அதில் இருந்த ரோவர் வெளியேறி சில மீட்டர் தூரம் தள்ளி விழுந்துள்ளது. வேகமாக மோதியதால் லேண்டரின் சில பாகங்கள் மட்டுமே உடைந்து சிதறியிருக்கும். அதே நேரம் ரோவர் கலன் பாதிப்படையாமல் இருக்க வாய்ப்புள்ளது. கடந்த மே மாதம் நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் கிடைத்தன. இதற்கு முன்பு கண்டறிந்த பாகங்களும் லேண்டரின் ஆய்வு சாதனங்களாகவே இருக்கக்கூடும் இதன் விவரங்களை இஸ்ரோ,நாசா மையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன்," என பதிவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டபோது, "பொறியாளர் சண்முக சப்ரமணியன் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றுள்ளது. எங்கள் வல்லுநர் குழு அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்," என தெரிவித்தனர் என விவரிக்கிறது அச்செய்தி.