ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (14:27 IST)

இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் இடையே என்ன பிரச்னை?

pm modi justin trudeau

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனறு அவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இந்தியா - கனடா இடையே என்ன நடக்கிறது?

 

கனடாவுக்கான தூதரை திரும்பப் பெற இந்தியா முடிவு

2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த, காலிஸ்தானுக்கு ஆதரவான ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது.

 

கனடாவின் இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல சவால்களை எதிர்கொள்வதால் இந்த விவகாரம் இப்போது அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியுள்ளது.

 

"ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அன்று கனடா தூதரகத்தில் இருந்து தகவல் ஒன்று வந்தது. கனடாவில் நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியாவின் தூதர் மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. கனடாவில் ட்ரூடோ அரசாங்கம் மக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக இதைச் செய்கிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், இந்தியா தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் கனடாவில் உள்ள பிற தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. மேலும், இது குறித்து கனடா தூதரக ஆணையத்திற்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

 

திங்கட்கிழமை (அக்டோபர் 14) அன்று கனடாவின் ராஜ்ஜிய தொடர்பை நிராகரித்து, இந்தியா மிகவும் வலுவான பதிலை அளித்துள்ளது.

 

இந்தியாவின் கடும் எதிர்ப்பு

 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கனடாவில் உள்ள இந்தியாவின் தூதர் சஞ்சய் குமார் வர்மாவை ஆதரித்து, "வர்மா ஒரு மூத்த தூதரக அதிகாரி. அவர் 36 ஆண்டுகளாக தூதரக பணியில் உள்ளார். ஜப்பான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இந்தியத் தூதரக அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார். மேலும் அவர் இத்தாலி, துருக்கி, வியட்நாம், மற்றும் சீனாவிலும் பணியாற்றியுள்ளார். அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்துவது அபத்தமானது மற்றும் அவரை அவமதிப்பதற்கு சமம்," என்று தெரிவித்தது.

 

2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி அன்று, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு, நிஜ்ஜாரின் கொலையில் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

 

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மீது கனடா குற்றம்சாட்டியது. இதற்குப் பதிலடியாக, கனடாவின் தூதரக உயர் அதிகாரியை ஐந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா கூறியது.

 

கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதையும் இந்தியா நிறுத்தியது. இந்தியாவில், 41 தூதரக அதிகாரிகள் கனடாவின் தூதரகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கனடாவில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது.

 

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கின்றது, அதற்கான உரிய ஆதாரங்களை எதுவும் வழங்கவில்லை என்று இந்தியா இது குறித்து ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. கனடாவின் விசாரணையை ஒரு சாக்குப்போக்கு என்றும் அரசியல் பலங்களுக்காக கனடா அரசாங்கம் வேண்டுமென்றே இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது என்றும் இந்தியா தெரிவித்தது.

 

கனடாவிலிருந்து திரும்பிப் பெறப்படும் இந்திய அதிகாரிகள்
 

இந்நிலையில், கனடாவில் இருந்து, இந்த விஷயத்தில் ‘இலக்கு வைக்கப்பட்ட’ இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற இந்திய அரசு முடிவு செய்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுருக்கும் ஏ.என்.ஐ செய்தி முகமை, அந்த அறிக்கையில் ‘தீவிரவாதம் மற்றும் வன்முறைச் சூழலில், ட்ரூடோ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது’ என்று கூறப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

 

“அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தற்போதைய கனடா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இந்திய அரசு ‘இலக்கு வைக்கப்பட்ட’ தூதரக உயர் அதிகாரி மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது," என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கை சொல்வதாக ஏ.என்.ஐ-இன் பதிவு சொல்கிறது.

 

ஆனால், கனடாவோ இந்திய தூதரை தாங்களே வெளியேற்றியதாக கூறியுள்ளது. திங்கட்கிழமையன்று தொலைக்காட்சி நேரலையில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் குற்றச் செயல்களுக்கு ஆதரவாக இருந்து இந்தியா அடிப்படைத் தவறை செய்திருப்பதாகவும், சமீபத்தில் தெரியவந்த தகவல்கள் அடிப்படையில் தனது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததாக கூறினார்.

 

கனடா தேசிய காவல் துறை வெளிக்கொணர்ந்துள்ள உண்மைகளை புறந்தள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

 

"கனடாவில் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் குற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்பதால் இந்த முடிவு தவிர்க்க முடியாததாகி விட்டது. அதனால்தான், அவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.

 

'சீக்கியர் வாக்கு வங்கியை வைத்து அரசியல் செய்யும் ட்ரூடோ'
 

"கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடைக்கலம் அளித்து வருகிறார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கனடா அரசு இதை அனுமதிக்கிறது," என்று இந்திய அரசு கூறியது.

 

"சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த சில நபர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தாமதம் இல்லை. கனடாவில் வாழும் பயங்கரவாதிகளை, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கனடா பலமுறை நிராகரித்து உள்ளது," என்றும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

 

"பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் பகைமை பாராட்டுவதை குறிக்கும் பல ஆதாரங்கள் உள்ளன. 2018-ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்தபோது, ​​அவரது வாக்கு வங்கியை வளர்ப்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவரது அமைச்சரவையில் இந்தியாவை தீவிரவாத மற்றும் பிரிவினைவாதக் கருத்துக்களுடன் தொடர்புபடுத்தும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர். ட்ரூடோவின் அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு கட்சியைச் சார்ந்து இருக்கின்றது," என்றும் இந்தியா கூறியிருந்தது.

 

செப்டம்பர் 4-ஆம் தேதி, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக புதிய ஜனநாயக கட்சியின் (NDP) தலைவர் ஜக்மீத் சிங் அறிவித்தார்.

 

புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் ட்ரூடோ அரசாங்கம் இயங்கி வந்தது. அக்கட்சி வாபஸ் பெற்ற போதிலும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தை ட்ரூடோ வென்றார்.

 

கனடாவில் அக்டோபர் 2025 -ஆம் ஆண்டு பிரதமர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்குள்ள சீக்கியர்களின் ஆதரவை பெற வேண்டும் என்று ட்ரூடோ விரும்புகிறார். ஜஸ்டின் ட்ரூடோ 2015-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறது.

 

இந்திய அரசாங்கத்தின் பார்வையில் ஜக்மீத் சிங்

 

ஜக்மீத் சிங்கின் ஆதரவுடன் ட்ரூடோவின் ஆட்சி நடப்பதை இந்தியா நல்ல முறையில் பார்க்கவில்லை.

 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பதை முடிவு செய்யும் பொறுப்பில் இருந்தது.

 

இந்தியாவைப் பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் விமர்சித்து வருகிறார்.

 

2022-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஜக்மீத் சிங், "இந்தியாவில் இஸ்லாமியர்களைக் குறிவைக்கும் வன்முறையின் படங்கள், வீடியோக்களைப் பார்த்து நான் கவலைப்படுகிறேன். மோதி அரசாங்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்," என்று கூறியிருந்தார்.

 

ஜக்மீத் சிங்கின் வம்சாவளி பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்துடன் தொடர்பு கொண்டது. அவரது குடும்பம் 1993-ஆம் ஆண்டு கனடாவுக்குக் குடிபெயர்ந்தது.

 

இந்தியாவில் 1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து ஜக்மீத் சிங் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். இந்திரா காந்தியின் உருவ பொம்மையைச் சுடுவது போன்ற கனடாவில் நடந்த பல நிகழ்வுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜக்மீத் சிங்கிற்கு அம்ரித்சர் செல்ல விசா வழங்க இந்திய அரசு மறுத்தது.

 

இதனை அடுத்து அவர் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "1984 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி குறித்து நான் பேசுகிறேன், அதனால் இந்திய அரசாங்கம் என் மீது கோபமாக உள்ளது. 1984 கலவரங்கள் இரண்டு சமூகங்களுக்கிடையில் நடந்த ஒரு கலவரம் அல்ல, அது அரசின் ஆதரவில் நடந்த ஒரு இனப்படுகொலை," என்று அவர் கூறினார்.

 

'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளின்படி, ஜக்மீத் சிங் அக்கட்சியின் தலைவராவதற்கு முன்பு காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார் என்பது தெரியவந்தது.

 

பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

 

கனடாவின் மக்கள் தொகையில் சீக்கியர்கள் 2.1% உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில், கனடாவில் சீக்கிய மக்கள் தொகை இரட்டிப்பாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கல்வி, தொழில், வேலை போன்ற காரணங்களுக்காகப் பஞ்சாபிலிருந்து கனடாவிற்கு இடம்பெயர்ந்தவர்கள்.

 

வான்கூவர், டொராண்டோ, கேல்கரி உட்பட கனடாவில் உள்ள பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

 

சீக்கியர்களின் முக்கியத்துவத்தை ஜஸ்டின் ட்ரூடோ நன்கு அறிந்தவர் என்று அவரது முதல் பதவிக் காலத்தில் இருந்தே அறியலாம். அப்போது அவரது அமைச்சரவையில் நான்கு சீக்கிய அமைச்சர்கள் இருந்தனர்.

 

சீக்கியர்களிடம் தாராள மனப்பான்மை கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் சிங் ட்ரூடோ என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

 

2015-ஆம் ஆண்டு, ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் இல்லாத அளவிற்குச் சீக்கியர்கள் தனது அமைச்சரவையில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.