புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (18:43 IST)

பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் - என்ன நடந்தது?

வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரானின் இந்த நடவடிக்கைகள் "சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று அவர் கூறியுள்ளார்.

தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது.

இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை சேர்ந்ததாக நம்பப்படும் படகுகள் வளைகுடாவுக்கு வெளியே ஹோர்முஸ் நீரிணைக்குள் நகர்ந்து கொண்டிருந்ததை, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை நெருங்கி, நிறுத்த முயற்சித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

படகுகளை விலகி செல்ல ஆணையிடப்பட்ட வேளையில், ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் கப்பலில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எச்சரிக்கைக்கு செவிமடுத்ததால், தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.
இரானின் படகுகள் நெருங்கி வந்தபோது, அபு முஸா தீவுக்கு அருகில், அபு முசா தீவின் அருகே பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பல் பதிவு செய்யப்பட்ருந்ததாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.

இரானிய படகுகள் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலுக்கு தெந்தரவு வழங்கியவுடன், அதனை சற்று தள்ளி தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் உதவிக்கு விரைந்து வந்தது என்று பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஜோனதான் பிலே தெரிவித்தார்.

அபு முசா சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் இருந்தாலும், ஹெச்எம்எஸ் மெண்டரோஸ் சர்வதேச கடற்பரப்பில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"ஹோர்முஸ் நீரிணை மூலம் வந்த வணிகக்கப்பலான பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தடுக்க இரானின் மூன்று படகுகள் சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக முயற்சித்துள்ளன" என்று பிரிட்டன் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

"இந்த நடவடிக்கையால் கவலையடைந்துள்ளோம். இந்த பிரதேசத்தில் பதட்ட நிலைமையை தணிக்க இரானிய அதிகாரிகளிடம் வலியுறுத்துவதை தொடர்ந்து வருகிறோம்" என்றும் அவர் கூறினார்.

ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் படையணிக்கு நன்றி தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் ஃபாக்ஸ், "இத்தகைய படைப்பிரிவுகள் அனைத்தும் எல்லா வசதிகளையும் போதுமான அளவுக்கு பெற்றிருப்பதை உறுதி செய்வது நமது கடமை" என்று கூறியுள்ளார்.

"பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தடுக்க முயற்சித்ததாக கூறப்படும் அமெரிக்க தகவலை ஐஆர்ஜிசி (இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை) மறுக்கிறது" என்று அந்நாட்டு கடற்படையின் பொது தொடர்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனம் ட்விட்டர் பதிவில் இரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளர்.

"பிரிட்டன் கப்பல் உள்பட எந்தவொரு வெளிநாட்டு கப்பல்களோடும் கடந்த 24 மணிநேரத்திற்குள் மோதல்கள் எதுவும் இல்லை" என்று ஐஆர்ஜிசி மேலும் தெரிவித்துள்ளதாக ஏஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பதற்றத்தை உருவாக்கவே பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸாரிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"இத்தகைய தகவலுக்கு எந்த மதிப்பும் இல்லை" என்றும் சாரிஃப் கூறியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.