1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (15:15 IST)

பா.ஜ.க. அண்ணாமலை பேச்சு சர்ச்சையாவது ஏன்? என்ன சொன்னார்?

தேர்தல் நேரத்தில் பணம் அளிப்பது குறித்து பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு ஒன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் அதனைக் கண்டிக்கிறார்கள். அண்ணாமலை சொன்னது என்ன?

தமிழ்நாடு அரசு சமீபத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தமிழக அரசின் இந்த அறிவிப்பை பா.ஜ.கவின் துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின.

"தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2,000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசியல்" என்று அவர் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டது. அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.

இது தொடர்பாக அண்ணாமலை பேசும் வீடியோ காட்சி ஒன்றும் இணையத்தில் பரவிவருகிறது. "தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு 2,000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசியல். மோடி அரசியல் என்பது வேறு. மோடி அரசியல் என்பது ஆறாண்டு காலமாக ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, பெண்களை தலைநிமிர வைத்து, விவசாயிகளை கூன்போடாம நேர நிக்க வைச்சு, அக்கவுன்டுக்கு ஆறாயிரம் ரூபாய் மோடி அவர்கள் கொடுக்கிறார். நீங்கள் வாக்களிக்கவில்லையென்றால் என்ன ஆகுமென்றால் தலையில் சீரியல் லைட் வச்சிருக்கவேன், காரோட டயரை விழுந்து கும்புடுறவேன்..." என்று அந்த வீடியோ காட்சியில் அண்ணாமலை பேசிச் செல்கிறார்.

அமைச்சரின் எதிர்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகம் ஒன்றிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான செம்மலை, அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்திருக்கிறார். "அண்ணாமலை, அரசியலை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். வந்த புதிதிலேயே இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்வது நல்லதல்ல. அவர் பேசியதை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஏழைகள் பொங்கலைக் கொண்டாடுவதற்காக இந்தப் பணம் கொடுக்கப்படுகிறது. இதை ஓட்டுக்குக் கொடுப்பதாக அவர் கூறுவது அவரது அறியாமையைக் காட்டுகிறது. அரசாங்க கஜானாவிலிருந்து கொடுக்கப்படும் பணத்தை, கொள்ளையடித்த பணமா? பா.ஜ.க. தலைமைதான் அவரைக் கண்டிக்க வேண்டும்" என்று கூறினார்.

அண்ணாமலை தரப்பு விளக்கம்

இது குறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, "நான் அப்படிச் சொல்லவில்லை. பொங்கலுக்கு தமிழக அரசு பணம் கொடுப்பதை ஆதரிக்கிறேன். ஓட்டுக்கு 2,000 ரூபாய் அளிக்கப்படுவதைப் பற்றித்தான் சொன்னேன்" என்று தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்திலும் இதனை விளக்கி பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றிருக்கும் நிலையில், அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கடந்த சில நாட்களாக இரு கட்சிகளிடமிருந்தும் மாறுபட்ட கருத்துகள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்தப் பின்னணியில்தான் அண்ணாமலையின் பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது.