வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜூலை 2020 (14:22 IST)

கறுப்பர் கூட்டம் - போராடிய பாஜகவினர் மீது பாய்ந்த வழக்கு!

சென்னை எழும்பூரில் கடந்த வியாழனன்று (ஜூலை 16) கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் மீது தொற்றுநோய்கள் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
கைதான விவகாரம் குறித்து பேசும் பாஜகவினர், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில், கந்தசஷ்டி கவசம் குறித்து ஆபாசமான கருத்துக்கள் வெளியான போது, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்காத நேரத்தில், போராட்டத்தில் பாஜக இறங்கியது தவறில்லை என தெரிவித்துள்ளனர்.
 
தொற்றுநோய் பரவும் காலத்தில் விதிமுறைகளை மீறி, அந்நோய் பரவ வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். கறுப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி, பாஜக சார்பில் கடந்த வியாழனன்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முடக்கநிலை விதிகளை மீறி கூட்டமாகக் கூடி போராட்டம் நடத்தியதாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
கறுப்பர் கூட்டம் - பாஜகவினர் போராட்டம்
போராட்டம் நடத்தும் முன் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பேசியது குறித்து பாஜகவினர் புகார் அளித்திருந்தனர். இந்த விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வியாழனன்று சரண் அடைந்தார்.
 
முன்னதாக, மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் செந்தில்வாசன் என்பவரை புதன்கிழமை இரவு கைது செய்தனர். தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் யூடியூ சேனலின் அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
 
கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன், பல்வேறு அரசியல் கட்சியினர் மௌனமாக இருந்ததால், பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்.
 
''கந்த சஷ்டி கவசம் பாடல் ஆபாசமாக விமர்சனம் செய்யப்பட்ட நேரத்தில், யாரும் அது குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவினர் புகார் கொடுத்த பின்னர்தான் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத உணர்வுகளை புண்படுத்தியதோடு இல்லாமல், பெண்களை மோசமாக பேசும் நபர்களை கண்டித்து ஏன் அரசியல் தலைவர்கள் அறிக்கை கூட வெளியிடவில்லை,''என்கிறார் நாராயணன்.
 
மேலும், ''கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டம் என்பது சிக்கல் என்றாலும், மக்களின் உணர்வோடு விளையாடும் போது, மௌனம் காப்பது தவறு என்பதால் போராட்டம் நடத்தினோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்கொள்வோம்,'' என்றார் நாராயணன்.