“மவுண்ட் ரெய்னரைச்(வாஷிங்டன், டி.சி.யிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள புறநகர்) சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு பேய் பிடித்த பிறகு, கத்தோலிக்க பாதிரியாரால் காப்பாற்றப்பட்டான். ஒருவேளை மத ரீதியான வரலாற்றில் நடந்த மிகவும் அசாதாரண சம்பவங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.” என்ற செய்தி அமெரிக்க செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்டில் ஆகஸ்ட் 20, 1949 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க தொடர்புகளை மேற்கோள் காட்டி, அந்த சிறுவனை பேயிடமிருந்து விடுவிக்க அந்த பாதிரியார் 20 முதல் 30 முறை பேயோட்டும் வழிமுறைகளை செய்ய வேண்டியிருந்ததாக அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை சடங்கின் முக்கிய பகுதியை எட்டும் போதும் அந்த சிறுவன் தனக்கு தெரியாத லத்தீன் மொழியில் கத்துவது மற்றும் திட்டுதல் போன்றவற்றை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில காலம் கழித்து, இந்த சம்பவம் நடைபெற்றதற்கு சிறு தொலைவில் உள்ள வில்லியம் பீட்டர் பிளாட்டி என்ற இளைஞர் முதன் முறையாக அவர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது இந்த கதை பற்றி தெரிந்து கொண்டுள்ளார்.
1971 ஆம் ஆண்டில், "தி பிங்க் பாந்தர்" போன்ற சில வெற்றி பெற்ற தொடர்களுடன் ஏற்கனவே எழுத்தாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பிளாட்டி பணிபுரிந்து கொண்டிருந்த போது, தனது நாவலான "தி எக்ஸார்சிஸ்ட்" ஐ வெளியிட்டார். அதன் அடிப்படையில் அதே பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. இது படத்தின் நடையை மறுவரையறை செய்யும் வகையில் திகிலூட்டும் மற்றும் நவீன சினிமாவின் மிக அடையாளமான கதைகளில் ஒன்றாக உருவாகியது.
ஆச்சரியப்படும் வகையில், இந்த நாவல் மற்றும் திரைப்படம் மகத்தான வெற்றி பெற்ற போதிலும், அக்காலத்தின் பிரபலமான கலாசாரத்தில் அவை பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருந்த போதிலும், 50 வருடங்கள் தாண்டியும் இந்த புனைகதைக்கு முக்கிய பங்களித்த இளைஞனின் உண்மையான அடையாளம் மற்றும் வரலாறு இருளில் தான் உள்ளது.
செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக பாதிரியார்கள் தான் பேயோட்டும் நிகழ்வுகளை நடத்தியது.
"படுக்கை ஆடியது, நாற்காலிகள் நகர்ந்தன"
1949 ஆம் ஆண்டின் பத்திரிகை செய்திகள், ரோலண்ட் டோ என்று அடையாளம் காணப்படும் 14 வயது சிறுவன் (டோ என்பது அமெரிக்காவில் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தி கொள்ளாமல் இருப்பதற்காக மக்கள் பொதுவாக பயன்படுத்தும் ஒரு துணைப்பெயர்) தனது நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு பிறகு அவரது அறையின் சுவர்களில் இருந்து வரும் விசித்திரமான ஒலிகளைக் கேட்க ஆரம்பித்ததாக கூறப்பட்டுள்ளது.
மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸ் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் ஆவணங்களின் படி “டில்லி அத்தை தான் அந்த சிறுவனுடன் நெருக்கமாக இருந்தார். ஆவிகளுடன் தொடர்பு கொள்வது ஒரு மத நிகழ்வாக மாறிய 19 ஆம் நூற்றாண்டில் உருவான விளையாட்டான Ouija போர்டை அந்த சிறுவனுக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.”
செயின்ட் லூயிஸ் பல்கலைக் கழக பாதிரியார்கள் தான் இதில் பேயோட்டும் நிகழ்வுகளை நடத்தியது.
அந்த காலத்தில் இருந்த பத்திரிகைகளின் படி, "அந்த சிறுவன் தனது அத்தையை Ouija போர்டு மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தது தான் அவர்கள் எதிர்கொண்ட அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு தூண்டுதலாக இருந்ததாக அவனது குடும்பம் நம்பியது. ரோலண்டின் படுக்கையறையில் நாற்காலிகள் தானாகவே நகர்வதைக் கண்டதாகவும், படுக்கை தானாகவே ஆடியதையும் அவர்கள் பார்த்ததாகவும் கூறியுள்ளனர். யாரோ கனமான சாமான்களை தரையில் இழுத்து சென்றது போல, மர்மமான முறையில் தரையில் ஆழமான அடையாளங்கள் இருந்தன" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நடப்பவை குறித்து மருத்துவர்களோ, உளவியலாளர்களோ அல்லது மனநல மருத்துவர்களோ திருப்தியான பதில்களை வழங்க முடியாததைக் கண்டு, அந்த சிறுவனின் தாய் தனது லூத்தரன் பாதிரியார் லூதர் மைல்ஸ் ஷூல்ஸிடம் சென்றார். பேய் பிடித்த வழக்குகளை கையாள்வதில் கத்தோலிக்க திருச்சபை பெற்றுள்ள அனுபவத்தைக் கருத்தில் கொண்டு வாஷிங்டனில் உள்ள கத்தோலிக்க சமூகத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்கு பரிந்துரைத்தார் பாதிரியார்.
தேவாலயத்தில் பேய்களை விரட்டும் நடைமுறை கிட்டத்தட்ட அந்த மதத்தின் வரலாறு போலவே பழமையானது. பேய் பிடித்தவர்களின் உடலை விட்டு வெளியேறும்படி பேய்களுக்கு இயேசு எப்படி கட்டளையிட்டார் என்பது அங்குள்ள உயில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1614 முதல், இந்த சடங்குகளை (இது 1999 இல் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது) செயல்படுத்துவதற்கு குறிப்பிட்ட அளவுருக்களைக் கொண்டுள்ளது அந்த தேவாலயம்.
டியூக் பல்கலைக் கழகத்தின் உளவியல் சித்த மருத்துவத் துறைக்கு ஷூல்ஸ் அனுப்பிய கடிதம், ரோலண்டின் குடும்பம் புகார் கூறும் நிகழ்வுகளுக்கான சாட்சிகளில் ஒருவராக அவரை முன்வைக்கிறது. "அவருக்கு அருகில் நாற்காலிகள் தானாக நகர்ந்தன மற்றும் ஒன்று அவரைத் தூக்கி எறிந்தது. அவர் படுக்கையில் இருக்கும் ஒவ்வொரு முறையும் அவரது படுக்கை தானாகவே அசைந்தது.”
அந்த சிறுவனின் உறவினர்களைத் தேடும் போது அது அவர்களை மிசோரியின் செயின்ட் லூயிஸ் நகருக்கு அழைத்துச் சென்றது. அங்கு தான் அவர்களுக்கு பல்கலைக் கழகத்தின் ஜேசுட் சமூகத்துடன் தொடர்பு ஏற்பட்டது.
பாதிரியார் ரேமண்ட் பிஷப் அந்த சிறுவனின் கதையில் ஆர்வம் கொண்டது மட்டுமின்றி அங்கு என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்க்க அவருக்கு அனுமதியளிக்கும் அதிகாரம் கொண்ட நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அதை எடுத்துச் சென்றார். பிஷப் தனது ஒவ்வொரு வருகையின் நாட்குறிப்பையும் எழுதி வைக்கத் தொடங்கினார், பின்னர் அது பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பாதிரியார் எழுதியுள்ள குறிப்புகளின் படி, அவர் முதலில் ரோலண்டின் படுக்கையை பார்த்த போது அது ஆடிக் கொண்டிருந்தது. ஆனால், அவர் அதை ஆசிர்வதித்து சிலுவை குறி போட்டு அதன் மீது புனித நீரை தெளித்தவுடன் அது ஆடுவது நின்று விட்டது.
இது அவரை பல்கலைக் கழகத்தின் பாதிரியார் மற்றும் அனுபவம் மிக்க பாதிரியாரான வில்லியம் எச்.பவுடர்ன் உதவியை நாட வழிவகுத்தது.
“52 வயதாகும் பவுடர்ன் , இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்தவர் மற்றும் விரிவான போதனை மற்றும் கற்பித்தல் அனுபவம் உடையவர். இவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு ரோலண்டை சந்தித்தார். சந்திப்பின் போது, புனித நீர் போன்ற பொருட்கள் அறையில் பறந்து கொண்டிருந்தபோது, ரோலண்ட் உடலில் சிலுவை வடிவத்தில் இரண்டு பெரிய கீறல்கள் ஏற்பட்டன.” என்று செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் தொகுத்திருந்த உண்மையான சம்பவங்களின் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தகவல்படி, பிஷப் மற்றும் பவுடர்ன் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தின் பேராயரிடம் பேயோட்டும் சடங்குகளை நடத்துமாறு கோரிக்கை வைத்தனர். தேவாலய அதிகாரிகளும் சடங்குகளை செய்ய அனுமதி கொடுத்தனர்.
பிஷப்பின் நாட்குறிப்பில் 1949 மார்ச் மற்றும் ஏப்ரல் இடையில் பாதிரியார்கள் இரண்டு மாதங்கள் நடத்திய சடங்குகளின் விவரங்கள் இருந்தன.
"பேயோட்டும் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆர் (ரோலண்ட்) தனது தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளுடன் கடுமையாக போராடி கொண்டிருந்தான். ரோலண்டின் கைகள், கால்கள் மற்றும் தலையை மூன்று பேர் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவன் உடலை வளைத்தது இயற்கை சக்திக்கு அப்பாற்பட்ட உடல் வலிமையை வெளிப்படுத்தியது.”
"அவனை பிடித்து கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களின் முகத்தில் துப்பினான். மத அடையாளங்கள் மீதும், பாதிரியார்களின் கைகளிலும் அவன் துப்பினான். அவன் மீது அவர்கள் புனித நீரை தெளித்த போது அவன் நடுங்கினான். அவன் போராடி கொண்டே, அதி தீவிரமான , பேயின் குரலில் கத்தினான். ”
“சிறுவனின் வேதனையைத் தீர்க்க வேண்டி” வெவ்வேறு இடங்களில் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதாக புனித லூயிஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.” பிஷப் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விசித்திரமான நிகழ்வுகளை விவரிக்கிறார். ஒரு பாதுகாப்பு மையத்தில், அதன் நுழைவாயிலில் ஆசீர்வதிக்கப்பட்ட புனித நீரை தெளித்து போது, ரோலண்ட் அருகில் இருந்த ஒரு பள்ளத்தாக்கில் குதிக்க முயன்றான்.
பல்கலைக் கழக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகு, ஒரு ஈஸ்டர் தினத்தன்று பவுடர்ன் பேயோட்டும் சடங்குகளை செய்து கொண்டிருக்கும் போது, ரோலண்ட் கலக்கத்துடன் தூக்கத்திலிருந்து விழித்ததாக கூறியுள்ளார் பிஷப். அவரது நாட்குறிப்பில், பவுடர்ன் மற்றும் ரோலண்டுக்கு இடையிலான கவனத்தை உருவாக்கிய பரிமாற்றம் குறித்து விவரித்துள்ளார்.
வெவ்வேறு விதமான குரல்கள் ரோலண்டிடம் இருந்து வந்ததாக கூறுகிறார் பிஷப்
சடங்கின் ஒரு கட்டத்தில், பவுடர்ன், அந்த பேய் தன்னை யார் என்று சொல்லிவிட்டு, சிறுவனின் உடலை விட்டு வெளியேறும்படி கோரினார். அதற்கு ரோலண்ட் தெளிவற்ற குரலில் பதிலளித்தான்/
“அவன் (ரோலண்ட்) இன்னும் ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை மட்டும் சொல்ல வேண்டும். சிறிய வார்த்தை, அதாவது ஒரு பெரிய வார்த்தை. அதை அவன் ஒருபோதும் சொல்லவே மாட்டான். நான் எப்போதும் இதில் இருப்பேன். எனக்கு எல்லா நேரங்களிலும் அதிக சக்தி இல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் நான் எப்போதும் இதில் தான் இருப்பேன். அவன் அந்த வார்த்தையை எப்போதும் சொல்லவே மாட்டான்.”
அதற்கு பிறகு நள்ளிரவுக்கு சில நிமிடங்களுக்கு முன்னால், வெவ்வேறு விதமான குரல்கள் ரோலண்டிடம் இருந்து வந்ததாக கூறுகிறார் பிஷப். “சாத்தான்! சாத்தான்! நான் செயின்ட் மைக்கேல், டோமினஸ் நாமத்தின் பேராலே சாத்தானே உனக்கும் பிற தீய சக்திகளுக்கும் இந்த உடலை விட்டு உடனடியாக வெளியேற நான் ஆணையிடுகிறேன். ஆல்ரெடி! ஆல்ரெடி! ஆல்ரெடி!”
ரோலண்ட் முழித்த போது, தேவதூதர் செயின்ட் மைக்கேல் அவனை காப்பாற்றுவதற்காக கடுமையான சண்டை போட்டதாகவும் அதில் அவர் வெற்றி பெற்றதாகவும் பாதிரியார்களிடம் தெரிவித்தான். “ அவர் சென்றுவிட்டார்”
ரோலண்டின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக இந்த விவகாரத்தில் பொது அறிக்கை எதுவும் வெளியிடாமலேயே செயின்ட் லூயிஸ் தேவாலய அதிகாரிகள் இதனை முடித்து விட்டனர். இருப்பினும், 1949 ஆகஸ்ட் மாதம் அந்த குடும்பத்தின் லூத்தரன் போதகர் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசினார். அதுவே பிறகு செய்தியாக வெளியாகி வில்லியம் பீட்டர் ப்ளாட்டியின் காதுகளையும் எட்டியது.
என்னதான் இந்த சம்பவம் குறித்து செய்திகள் வெளியான போதும், இதை அடிப்படையாக கொண்ட புத்தகம் மற்றும் திரைப்படம் இரண்டும் மகத்தான வெற்றியை பெற்ற போதிலும், ரோலண்ட்டின் அடையாளம் யாருக்குமே தெரியாமல் பார்த்து கொள்ளப்பட்டது.
இத்தனை ஆண்டுகளாக, இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்த எத்தனையோ ஆசிரியர்கள், ரோலண்டை 1935 இல் மேரிலாந்து மாநிலத்தில் பிறந்தவர் என்றும், அவர் நாசாவில் விண்வெளி பொறியாளராக பணிபுரிந்தார் என்றும் அடையாளம் கண்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு, அமெரிக்காவை சேர்ந்த பல ஊடகங்கள் 2020 ஆம் ஆண்டில் 86 வயதை அடைவதற்கு சற்று முன்பு ரோலண்ட் இறந்துவிட்டதாகக் பதிவு செய்தன.
பேயோட்டுதல் தொடங்குவதற்கு முன்பு, கொடூரமான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை
1949 ஆம் ஆண்டு அந்த இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வுகள் பற்றி நிறைய ஊகங்கள் இருந்தாலும், அதன் இரண்டு கதாநாயகர்களின் குரல்கள் கொஞ்சம் வெளிச்சம் பெறலாம்.
1974ல் எழுதிய அவரது “ தி டெவில், டிமோனாலஜி மற்றும் விட்ச்கிராஃப்ட்” புத்தகத்தில் வரலாற்றாளர் எ . கெல்லி, பாதிரியார் பவுடர்னின் சாட்சியத்தை இணைத்துள்ளார். அதில் இந்த பேயோட்டுவதற்கான உத்தரவு தனக்கு தேவாலயத்தில் இருந்து நேரடியாக வந்ததாகவும், அவர் தனது பணியை செய்ததாவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதில் செயின்ட் லூயிஸின் திருச்சபை அதிகாரிகள் பேயோட்டுதலை நாடுவதற்கு வழிவகுத்த பேய் இருந்ததற்கான அறிகுறிகள் என்ன? என்ற கேள்விக்கு பாதிரியார் பவுடர்னின் பதில் எளிமையானது மற்றும் நேரடியானது. "பேயோட்டுதல் தொடங்குவதற்கு முன்பு, கொடூரமான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை அல்லது தெரிவிக்கப்படவில்லை,” என்று கெல்லி தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.
கெல்லியைப் பொறுத்தவரை, வழக்கின் முந்தைய விசாரணைகள் முழுமையானவையல்ல மற்றும் நகரும் விஷயங்கள் போன்ற சம்பவங்கள் வேறு வேறு விளக்கங்களைக் கொண்டிருக்கலாம். அதைவிட மோசமானது, இந்த சடங்குகளின் போது மருத்துவ மேற்பார்வை எதுவும் இல்லாதது பிஷப்பின் நாட்குறிப்புகளில் உள்ள சாட்சியத்தின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.