செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (12:32 IST)

பெங்களூரு வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

வட கிழக்கு பெங்களூருவில் மூண்ட வன்முறையை அடக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் இறந்தனர்.

டிஜி ஹலி மற்றும் கேஜி ஹலி என்ற இரு காவல்நிலையப் பகுதிகளிலும் ஊடரங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது எனவும் நகரம் முழுவதும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன எனவும் காவல்துறை ஆணையர் கமல் பண்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காவல்துறையை சேர்ந்த 60 பேர் காயமடைந்துள்ளனர் என்று மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புலிகேசி நகர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆகாந்தா ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் ஒருவரின் சமூக ஊடக பதிவு முஸ்லிம்களின் மத உணர்வைப் புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவரின் அந்த பதிவு குறித்து புகார் தெரிவிக்க நேற்று மாலை அவர் இருக்கும் பகுதியின் காவல்நிலையத்தை நோக்கி சிலர்சென்றனர். மேலும் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டை நோக்கியும் ஒரு சாரார் சென்றுள்ளனர்.


தங்கள் மத உணர்வைப் பாதிக்கும் வகையில் பதிவிட்ட சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூட்டத்தினர் கேட்டனர். பின்னர், கூட்டத்தின் ஆவேசம் வன்முறையாக மாறியது என கூறப்படுகிறது. மேலும் பலர் காவல் நிலையத்திற்கு வெளியில் உள்ள வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தினர் என்றும் கூறப்படுகிறது.

மற்றொரு கும்பல் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு அருகில் உள்ள வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.

"போலீசார் பெரிய பெரிய கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. காவல்நிலையம் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டது எனவே எங்களுக்கு துப்பாக்கிச்சூட்டினைத் தவிர வேறு வழி தெரியவில்லை," என கமல் பண்ட் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், "முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தான் ஆதரவு தருவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்," எனவும் அவர் தெரிவித்தார்.

"நான் புலிகேசிநகர் எம்எல்ஏ ஆகாண்டா ஸ்ரீநிவாஸ் மூர்த்தி. சட்டத்தை மீறியவரை எதிர்த்து போராட வேண்டாம் என முஸ்லிம்களிடம் கேட்டுக் கொள்கிறேன். விஷயம் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் சகோதரர்கள். சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என்பதை நாம் உறுதி செய்வோம். நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் அமைதி காக்கவேண்டும் என்று கோருகிறேன்," என அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

"மேலும், எதுவாக இருந்தாலும் அது சட்டப்படியாக தீர்க்கப்பட வேண்டும். போலீசிடம் நிலைமையை கட்டுப்படுத்தக் கோரியுள்ளேன். அமைதியை நிலைநாட்ட அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்," என உள்துறை அமைச்சர் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் அமீர் - இ- ஷரியட், ஹஸ்ரத்-மெளலானா-ஷகீர்-அகமத், "போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளதால் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், "சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.