வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (23:41 IST)

குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை: வேலையிழக்கும் ஆபத்து - அடுத்தது என்ன?

குவைத் அரசு இந்தியர்கள் தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது. குவைத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குவைத் அரசாங்கம் அதனை ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.

வியாழனன்று காலை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, இரான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களை தவிர பிற நாட்டினர் குவைத்திற்கு பயணம் செய்யலாம் என அந்நாடு தெரிவித்துள்ளது.

இதை அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிர்வாக அளவில் இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.

கவலையில் இந்தியர்கள்

குவைத் அரசின் இந்த முடிவால் குவைத்தில் பணிபுரியும் இந்தியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கவலையடைந்துள்ளனர்.

குவைத்தில் உள்ள இந்திய கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டாப்ரோவில் பணிபுரியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்த வார்ஷ்னே ப்ரதாப், விடுமுறைக்காக குவைத்திலிருந்து இந்தியா வந்தார்.

தற்போது இவர் குவைத்திற்கு திரும்ப பயணம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
"நான் ஆகஸ்டு நான்காம் தேதியன்று எனது விமானப் பயணச்சீட்டை பதிவு செய்துள்ளேன். அதற்கு கோரக்பூரிலிருந்து லக்னவ் சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தற்போது இதில் பெரும் குழப்பம் நிலவுகிறது," என்கிறார் வார்ஷ்னே.
பொறியாளரான வார்ஷ்னே ப்ரதாப் நாராயண், கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் இல்லாமல் வீட்டில் உள்ளார். எனவே வெகு சீக்கிரம் இந்த பிரச்சனை சரியாக வேண்டும் என விரும்புகிறார்.

குவைத்தில் இந்தியர்களுக்காக உதவும் குழு ஒன்றின் தலைவரான ராஜ்பால் த்யாகியை பிபிசி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டது.

இந்த முடிவால், குவைத்திற்கு திரும்பி வர இயலாத ஏராளமான இந்தியர்கள் தங்கள் பணிகளை இழக்க நேரிடும் என தெரிவித்தார் த்யாகி.
"குவைத்தில் உள்ள நூற்றுக்கணக்கானவர்களின் குடும்பங்களை சேர்ந்த சிலர் இந்தியாவிற்கு சென்று கொரோனா சூழலால் அங்கு சிக்கியுள்ளனர், தற்போது அவர்கள் அனைவரும் திரும்பி வர முயற்சித்து வருகின்றனர்."

மேலும், "இந்தியாவிற்கு விடுமுறைக்கு சென்ற பலர் திரும்பி வர இயலாத சூழலால் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர், தங்களின் குவைத்திற்கான விசா முடிவடைகிற நிலையில் உள்ளனர் எனவே அவர்கள் இங்கு திரும்பி வரவில்லை என்றால் அது ரத்தாகும். குவைத்தில் தொழில் செய்வதற்கான அனுமதி அவர்களின் விசாவுடன் தொடர்புடையாதக உள்ளது.

எனவே அவர்களின் விசா ரத்தானால், அவர்கள் குவைத்தில் தொழில் செய்யும் அனுமதியை இழக்கின்றனர். மேலும் சில குடும்பங்களில் கணவன் இந்தியாவிலும், மனைவி குவைத்திலும் சிக்கியுள்ளனர். இது அவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுக்கும்." என்கிறார் த்யாகி.

இதுதொடர்பாக இந்தியர்களுக்கான உதவி குழு குவைத் தூதரக அதிகாரிகளை திங்களன்று சந்தித்தனர்.

இந்த குழு, குவைத்துக்கு விமானப் போக்குவரத்தை தொடங்க பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சக்கம் ஆகியவற்றுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

விமான சேவைகள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே எழுந்த பிரச்சனையே இந்த தடைக்கு காரணம் என இந்தியாவின் அறிக்கைகள் மற்றும் குவைத்தில் உள்ள செய்தி ஆதாரங்கள் மூலம் தெரிகிறது.

மார்ச் மாத மத்தியில் சர்வதேச விமானங்களை குவைத் ரத்து செய்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் அவர்களின் நாடுகளுக்கு செல்ல சில விமானங்களை அனுமதித்தது. அதில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சில இந்திய விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

குவைத்தின் சில விமான சேவை நிறுவனங்கள் இந்தியாவுக்கான தங்களின் விமான சேவையை மீண்டும் தொடங்க விரும்பின ஆனால் சில காரணங்களால் அது இயலாமல் போனது.

இந்தியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு இடையே விமானம் இயக்குவது குறித்து இந்திய விமானப் போக்குவரத்துத் துறைய செயலர் மற்றும் குவைத்தின் விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த தடை தற்காலிகமானது என்றும், இது இந்தியர்களின் மீது மட்டும் விதிக்கப்படவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் இதை சரி செய்வதற்கு முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.