1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (11:13 IST)

மனிதர்கள் இயற்கையிலேயே சோம்பேறிகளா? எதுவும் செய்யாமல் 'சும்மா இருப்பது' சாத்தியமா?

கொரோனா பெருந்தொற்று நம்முடைய சிந்தனையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது.
 
அதில் முக்கியமான ஒன்று, நம்மால் வேலையே செய்யாமல் சும்மா இருக்க முடியாது என்பது.
 
கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் நமக்கு வழங்கப்பட்ட அதிமுக்கியமான அறிவுரை – 'வீட்டிலேயே இருங்கள்' என்பதுதான். வீட்டில் சோஃபாவில் படுத்துக்கொண்டு, தொலைக்காட்சியோ நெட்ஃபிளிக்ஸ் தொடர்களோ பார்த்துக்கொண்டு நேரத்தைக் கடத்த நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு அது. நமக்குள்ளிருக்கும் சோம்பேறித்தனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும்.
 
ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்டோம்.
 
உயிரியல் ரீதியாக நாம் சோம்பேறிகளாகப் படைக்கப்படவில்லை. சுறுசுறுப்பாக வேலைசெய்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருப்போம். குறைந்தபட்சம், சரியான விகிதத்தில் உழைப்பும் ஓய்வும் இருக்கவேண்டும்.
 
எப்போதும் குறைவான முயற்சிதான் செய்கிறோமா?
 
பொதுவாக நாம் வெற்றியை எட்ட எளிதான வழிகளையோ குறுக்கு வழிகளையோ தேடுகிறோம். கையில் ரிமோட் இருந்தால் எதற்காக எழுந்து சென்று டி.வி.யில் சேனல்களை மாற்ற வேண்டும்? கார் இருக்கும்போது எதற்காக சைக்கிளில் போக வேண்டும்? சக ஊழியரைவிட பாதி அளவு வேலை செய்தால் போதுமானது என்றால் சந்தோஷம்தானே?
 
உடல் மற்றும் மன ரீதியாக அழுத்தம் தரக்கூடிய வேலைகளை பொதுவாக நாம் தவிர்க்கிறோம். இது ‘குறைந்த முயற்சிக் கோட்பாடு’ (principle of least effort) அல்லது ‘ஜிஃப் விதி’ (Zipf’s Law) என்று அறியப்படுகிறது.
 
இவ்விதியை நாம் ஒருபோதும் மீறுவதில்லை என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. எப்போதுமே இதனை மீறிக்கொண்டிருக்கிறோம்.
 
‘சும்மா இருக்க’ வைத்த ஆராய்ச்சி கொடுத்த ‘ஷாக்’
 
எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பதைப்பற்றி நாம் அனைவரும் கனவு காண்போம்.
 
ஒரு அமைதியான மதிய வேளையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தபடி சும்மா இருப்பது சுகமானதுதான். ஆனால் நாம் விழித்துக்கொண்டிருக்கும்போது எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பது மிகக்கடினமான விஷயம்.
 
சில வருடங்களுக்குமுன், அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா பல்கலைகழகம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் பங்குபெற்றவர்கள் முற்றிலும் காலியான ஒரு அறைக்குள் அனுப்பப்பட்டனர். அவர்களது கால்களில் மின்முனைகள் பொருத்தப்பட்டன. அவர்களுக்கு ஒரு இயந்திரம் காட்டப்பட்டது. அதில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், மின்முனைகளின்மூலம் அவர்களுக்கு ஷாக் அடிக்கும்.
 
இந்த அறையில் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும்படிக் கூறி, அவர்கள் 15 நிமிடங்கள் தனித்து விடப்பட்டனர்.
 
இந்தச் சூழ்நிலையில் என்ன நடந்திருக்க வேண்டும்?
 
ஆராய்ச்சியில் பங்குபெற்றவர்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருந்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.
 
அதுதான் இல்லை.
 
ஆராய்ச்சியில் பங்குபெற்றவர்களில் 71% ஆண்களும், 25% பெண்களும் ஒருமுறையேனும் தமக்குத் தாமே ஷாக் வைத்துக்கொண்டனர். ஒரு ஆண் 15 நிமிடங்களில் தனக்கே 190 முறை ஷாக் வைத்துக்கொண்டார்.
 
இதன்மூலம், எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதைக்காட்டிலும், மக்கள் தங்களையே வருத்திக்கொள்வதைக் கூடத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முடிவு எட்டப்பட்டது.
 
சிறுவயதிலேயே கற்றுத்தரப்படும் உழைப்பின் அவசியம்
 
இதேபோல் வாழ்வில், அவசியமில்லாத, ஆனால் அதீதமான உழைப்பைக் கோருகிற வேலைகளைச் செய்வதைப் பார்த்திருப்போம். மாரத்தான் ஓடுவது, பனிமலைகளின்மீது ஏறுவது, என இப்படி.
 
டொரோன்டோ பல்கலைகழத்தின் பேராசிரியர் மைக்கேல் இன்ஸ்லிச்ட் இதனை ‘முரண் விளைவு’ (paradox effect) என்கிறார். சில சமயங்களில் எளிதான வழியைத் தேர்ந்தெடுப்போம், வேறு சமயங்களில் கடின உழைப்பினால் செய்யக்கூடிய வேலைகளைட் தேர்ந்தெடுப்போம்.
 
குழந்தைகளாக இருந்தபோதிருந்தே நமக்குச் சொல்லப்படுவது: ‘உழைப்பே வெற்றிதரும்’. நாளடைவில் இதுவே நமது இயற்கையாகி, உழைப்பை விரும்பத்துவங்கிவிடுகிறோம்.
 
இது ‘கற்றறியப்பட்ட உழைப்பு’ (learned industriousness) எனப்படுகிறது.
 
கடினமான பாதைகளை நடந்து கடந்து ஏன் மலைகளுக்கும் ஏரிகளுக்கும் செல்கிறோம்?
 
 
20 வருடங்களுக்குமுன் நான் இந்தோனீசியாவின் ஃப்ளோர்ஸ் தீவிலுள்ள கெலிமுடு (Kelimutu) எனப்படும் வண்ணமயமான ஏரிகளுக்குச் சென்றிருந்தேன். பல நாட்கள் படகிலும், மோசமான சாலைகளில் பேருந்திலும் சென்று ஒரு மோசமான ஹோட்டலில் தங்கினோம். அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஒரு சிற்றுந்தில் ஏரிகளுக்குச் சென்றோம்.
 
அங்கு சென்றடைய பல துன்பங்களைச் சந்தித்தோம். ஆனால் அவையெல்லாம் அனுபவத்தின் ஒரு பகுதி.
 
நாங்கள் அங்கு சென்றிருந்த சமயம், பல பணக்கார பயணிகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர். ஆனால் நாங்கள் அவர்கள்மீது பொறாமைப்படவில்லை. ஏனெனில், அவ்வளவு சிரமப்பட்டு அங்கு சென்றிருந்த நாங்கள், எளிதாக வந்திறங்கிய அவர்களைவிட ஏரியை முழுமையாக அனுபவித்தோம் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.
 
உலகின் பல மலைச்சிகரங்களை கேபிள் கார் மூலம் சென்றடையலாம். ஆனால் பலரும் அவற்றில் நடந்து ஏறுவதையே விரும்புகின்றனர்.
 
நலமாக இருக்க உழைப்பு அவசியம்
அன்றாட வாழ்வில் ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், ‘இகியா விளைவு’ (Ikea effect) பற்றிச் சொல்லலாம். கடைகளில் வாங்கிய பொருட்களைவிட, தமது கைகளால் சொந்தமாகச் செய்த பொருட்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
 
இதிலிருந்து நமக்குத் தெரிவது – சோஃபாவில் சாய்ந்தபடி, டி.வி பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது நேரம் கடத்துவதற்கான ஒரு வழியாக இருக்குமே தவிர, அது நமது இயல்பு கிடையாது. அதையும் மீறி நாம் சும்மா இருந்தால், ஓய்வையும் அமைதியையும்விட , பதற்றமும் எரிச்சலுமே ஏற்படும்.
 
சோம்பேறித்தனம் நமது இயல்பல்ல. சும்மா இருப்பதும் சுலபமல்ல.