திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (02:24 IST)

ஆன்டி இண்டியன் - 'ப்ளு சட்டை' மாறன் படத்தின் சினிமா விமர்சனம்

நடிகர்கள்: சி. இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா, ஜெயராஜ், விஜயா, கர்ணராஜா; கதை, வசனம், இசை, இயக்கம்: சி. இளமாறன்.
 
உலக அளவில் சினிமா விமர்சகர்களாக இருந்த பலர் இயக்குனர்களாகியிருக்கிறார்கள். ஷான் - லுக் கொதார், ஃப்ரான்சுவா த்ருஃபோ போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து மிகச் சிறந்த இயக்குநர்களாகவும் உருவெடுத்தார்கள். இந்தியாவிலும் காலித் முகமத், மின்டி தேஜ்பால் போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள். அதே பாணியில், தமிழ்த் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட சினிமா விமர்சகரான 'ப்ளூ சட்டை' மாறன், 'ஆன்டி - இண்டியன்' படத்தின் மூலம் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார்.
 
சுவர் விளம்பரக் கலைஞரான இ. பாட்ஷாவை (இளமாறன்) யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அவருடைய தந்தை இஸ்லாமியர். தாய் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். இதனால், அவரது சடலத்தை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை வைத்துக்கொண்டு சிலர் செய்யும் அரசியல் ஒரு பக்கம் நடக்கிறது. அதே நேரம் அந்தத் தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலுக்கு இந்த விவகாரத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் சில அரசியல்வாதிகள். முடிவில் என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.
 
பாட்ஷா என்ற பாத்திரம் இறந்து சடலமாகக் கிடப்பதிலிருந்து துவங்குகிறது படம். அந்தச் சடலத்தை ஒவ்வொரு இடுகாட்டிற்கும் கொண்டுசெல்வது, அங்கே அனுமதி மறுக்கப்பட, அதை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்வது என முதல் பாதி விறுவிறுப்பாகவே நகர்கிறது. இரண்டாம் பாதியில், படம் சற்றுத் தொய்வடைந்து க்ளைமாக்ஸில் மீண்டும் சூடுபிடித்து, முடிவுக்கு வருகிறது.
 
 
மதத்தை முன்னிறுத்தி சிலர் செய்யும் மோசமான காரியங்களையும் மதவாத அரசியலையும் எவ்வளவு மோசமான சூழலையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சிக்க நினைத்திருக்கிறார் மாறன். அதில் ஓரளவுக்கு அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மதவாத சக்திகள், காவல்துறை, அரசியல்வாதிகள், ஊடகம் என பல்வேறு தரப்பினரின் தவறுகளை சரியாகவே சுட்டிக்காட்டுகிறார் என்றாலும், அவர் எடுத்துக்கொண்ட கதை மிகச் சிறியதாக இருப்பதால், தன்னுடைய விமர்சனங்களை முன்வைப்பதற்காகவே பல நேரங்களில் அந்த சம்பவத்தை தேவையில்லாமல் நீட்டிக்கிறாரோ என்று தோன்ற வைக்கிறது.
 
படத்தில் வரும் பல சின்னச் சின்ன பாத்திரங்கள் ரசிக்க வைக்கின்றன. கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு, மதவாதிகளை விமர்சிக்கும் ஒரு நபர், பந்தல் போடும் இளைஞர், காவல்துறை ஆய்வாளர் போன்ற பாத்திரங்கள் போகிறபோக்கில் முன்வைக்கும் விமர்சனங்கள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், வேறு சில பாத்திரங்களின் செயல்பாடுகள் துருத்திக்கொண்டு தென்படுகின்றன.
 
படத்தின் சிறப்பான பகுதி, க்ளைமாக்ஸில் காவல் துறை அதிகாரி நடத்தும் அமைதிக் கூட்டம்தான். அந்தக் காட்சியில் காவல்துறை அதிகாரியாக வரும் நரேன், நீளமான ஒற்றை வசனத்தின் மூலம் மொத்தக் காட்சியையும் தூக்கி நிறுத்துகிறார்.
 
படத்திற்கு பின்னணி இசையும் இயக்குநர்தான். அந்தப் பணியை வேறு இசையமைப்பாளர்களிடம் கொடுத்திருக்கலாம். படத்தில் வரும் சில பாடல் காட்சிகளும் கதையோடு ஒட்டாத சில காட்சிகளும் வேகத்தை மட்டுப்படுத்துகின்றன