அமெரிக்கா - வட கொரியா மோதல்: ஆயுத சோதனை, கப்பல் பறிமுதல்

Last Modified வெள்ளி, 10 மே 2019 (12:56 IST)
வட கொரியா சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. வட கொரியா அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் நிலக்கரியை கொண்டுசெல்ல இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்த அமெரிக்க  சட்டத்துறை, ஆனால் இந்த போக்குவரத்து ஐநாவின் ஏற்றுமதி தடையை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் முதலில் கடந்த ஏப்ரல் 2018-இல் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய  இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் தொடர்ந்து மோசமாகிவரும் சூழலில், சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி வட கொரிய கப்பல்  ஒன்றை அமெரிக்கா பறிமுதல் செய்வது இதுவே முதல்முறையாகும்.
 
கடந்த பிப்ரவரியில், வியட்நாமின் தலைநகர் ஹனோயில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  ஆகிய இரு தலைவர்கள் இடையே நடந்த சந்திப்பு எந்த உடன்படிக்கையும் எட்டப்படாமல் முடிந்தது.
கிம் முன்வைத்த மோசமான ஒப்பந்தம் என்று விவரிக்கப்பட்ட இந்த உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தையில் இருந்து அதிபர் டிரம்ப்  வெளியேறினார். வட கொரியா தனது அணு ஆயுத சோதனைகளை கைவிடவேண்டுமென்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வரும்  நிலையில், தங்கள் நாட்டின் மீது பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல சர்வதேச தடைகளில் இருந்து விலக்கு மற்றும் நிவாரணம்  கோருகிறது வட கொரியா.
 
கடந்த வாரத்தில் இரண்டு முறை ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியது. இது தங்களுக்கு சலுகைகள் வழங்க அமெரிக்காவுக்கு  அழுத்தம் தர வட கொரியா மேற்கொண்ட நடவடிக்கையாக பரவலாக பார்க்கப்படுகிறது.
 
குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் அடையாளம் காணமுடியாத ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் சினோ-ரி என்ற இடத்தில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தென்கொரிய கூட்டு படைகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை கடந்த சனிக்கிழமையன்று யாரும் எதிர்பாராத வகையில் வடகொரியா ஏவியது. வட கொரியாவின் அண்மைய ஆயுத சோதனைகள் பற்றி குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த சோதனைகளால்  யாருக்கும் மகிழ்ச்சி இல்லை என்று கூறினார்.
 
''அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்றும் அது குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவில்லை என்றே நான் எண்ணுகிறேன்'' என்று டிரம்ப் வட கொரியா குறித்து கருத்து தெரிவித்தார்.
 
இந்நிலையில், முடங்கியுள்ள அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க தூதர்  தென்கொரிய தலைநகர் சோலுக்கு பயணம் மேற்கொண்டது ஒர் முக்கிய நிகழ்வாக சர்வதேச அளவில் பார்க்கப்பட்டது.

இதில் மேலும் படிக்கவும் :