வடகொரியாவில் இருந்து இறந்த அமெரிக்கர்களின் எச்சங்களை மீட்கும் பணியை நிறுத்தியது அமெரிக்கா
கொரிய போரில் இறந்த அமெரிக்கர்களின் எச்சங்கள் வடகொரியாவில் இருந்து வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
1950 - 1953 கொரிய போரில் கொல்லப்பட்ட 50 அமெரிக்க படை வீரர்களின் எச்சங்களை வடகொரியா கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் - உன் இடையேயான உறவு மேம்பட்டு வருவதை காட்டும் அறிகுறியாக இருந்தது.
இந்நிலையில் பென்டகனில் இருந்து புதன்கிழமை வந்த செய்தியில், சமீபத்தில் இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த உச்சிமாநாடு தோல்வியடைந்ததை அடுத்து வடகொரியாவிடம் இருந்து அமெரிக்க படை வீரர்களின் எச்சங்களை பெறும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரிய போரின்போது கிட்டத்தட்ட 36 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் 7700 பேருக்கும் அதிகமானோர் கணக்கில் வரவில்லை என அமெரிக்கா கூறுகிறது. இதில் 5300 பேர் வடகொரியாவின் காணாமல் போயுள்ளார்கள்.
வியட்நாம் உச்சமாநாடு தோல்வியில் முடிவடைந்ததையடுத்து அதன் பின்னர் வடகொரியா அதிகாரிகள் தங்களது நிறுவனத்தோடு தொடர்பு கொள்ளவில்லை என போரில் காணாமல் போன அமெரிக்கர்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்க அரசின் டிபிஏஏவின் செய்தி தொடர்பாளர் சக் பிரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.
இறந்த அமெரிக்கர்களின் எச்சங்களை பெறுவது தொடர்பாக 2019-ம் ஆண்டுக்கான கூட்டு மீட்பு நடவடிக்கைகளில் நாங்கள் கொரிய மக்கள் ராணுவத்தினை தொடர்பு கொண்டதில் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் வாயிலாக இந்த மீட்பு முயற்சிகள் தற்காலிகமாக கைவிடப்படுகிறது' என டிபிஏஏ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இரு தரப்பும் சேர்த்து நன்றாக திட்டமிட்டு, ஒருங்கிணைந்து, கள செயல்பாடுகளை மேற்கொள்வது இனி சாத்தியமில்லை என்ற புள்ளியை நாங்கள் அடைந்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.