திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (21:02 IST)

அமெரிக்க குண்டுவீச்சு விமானம்: போர் ஒத்திகை!!

அமெரிக்கா தமது பி-1பி குண்டு வீச்சு விமானத்தை தென்கொரியா மீது பறக்க வைத்து தாக்குதல் ஒத்திகை செய்தது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா செய்யும் விமான ஒத்திகேயே இது என்று கூறப்பட்டாலும், இது வடகொரியாவை எச்சரிக்கும் செயல் என்று இது பார்க்கப்படுகிறது.
 
ராணுவ தளத்தின் மீது குண்டு வீசுவதாக பாவனை செய்து தமது பி-1பி லேன்சர் போர் விமானத்தின் ஒத்திகையை நடத்தியது அமெரிக்கா. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புதிய ஏவுகணை என்று கூறிக்கொள்ளும் ஓர் ஏவுகணையை ஒரு வாரம் முன்பு வடகொரியா சோதனை செய்த நிலையில் இந்த ஒத்திகை நடந்துள்ளது.

வடகொரியா ஏவுகணைச் சோதனையோ அல்லது அணு ஆயுதச் சோதனையோ செய்த முந்தைய சந்தர்ப்பங்களிலும் அமெரிக்கா குண்டு வீச்சு விமானங்களைக் கொண்டு ஒத்திகை செய்துள்ளது. அமெரிக்கா தமது பலத்தைக் காட்டும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
 
தென் கொரிய போர் விமானங்களோடு சேர்ந்து அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரிய எல்லையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள வட கிழக்கு கேங்வொன் மாகாணத்தின் பில்சுங் மலைத் தொடர் அருகே இந்த ஒத்திகை நடந்ததாக ராணுவத்தை மேற்கோள்காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்கொரிய அமெரிக்க கூட்டு ராணுவ ஒத்திகைகளை எப்போதும் விமர்சிக்கும் வட கொரியா இந்த ஒத்திகையை அணு ஆயுதப் போர் தூண்டுதல் நடவடிக்கை என தமது அரசு ஊடகத்தில் தெரிவித்துள்ளது. ஐ.நா. அரசியல் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி ஃபெல்ட்மேன் பேச்சுவார்த்தைக்காக வடகொரியா வந்துள்ள நிலையில் இந்த போர் ஒத்திகையை அமெரிக்கா நடத்தியுள்ளது.