புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By bala
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (17:32 IST)

ரஷ்ய அதிபரை கொல்லத் திட்டமிட்டவரின் மனைவி சுட்டுக்கொலை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல சதித்திட்டம் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட செச்சேனைச் சேர்ந்த ஒருவரும் அவரது மனைவியும் சென்ற கார் உக்ரேன் தலைநகருக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளானதில் அந்நபர் காயமடைந்தார் மேலும் அவரது மனைவி கொல்லப்பட்டார். ஆடம் ஆஸ்மாயேவுக்கு ஒரு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவரது மனைவி அமீனா ஒகுயேவாவின் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். லெவேஹா எனும் கிராமத்தில் அந்த கார் சென்று கொண்டிருக்கும்போது தொடர் தோட்டாக்கள் தாக்கியதில் தம்பதிகள் சிக்கினர். இதில் ரஷ்ய அரசின் பங்கு இருக்கிறது என உக்ரேனிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ரஷ்ய ஆதரவுக்குழு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டதால் உக்ரேனில் ஒகுயேவாவுக்கு நாயக அந்தஸ்து கிடைத்தது.


 



மருத்துவமனையில் இருந்தபடி உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் பேசிய ஓஸ்மாயேவ் '' என் மனைவி தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். என்னால் முடிந்த வரை காரை ஓட்டினேன். ஆனால் எஞ்சினும் தோட்டாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை என்பது எனக்கு முன்பே தெரியாது. நான் அவளுக்கு முதலுதவி செய்ய நினைத்தேன் ஆனால் அவள் தலையில் குண்டு பாய்ந்திருந்ததால் பயனளிக்கவில்லை'' எனக் கூறியுள்ளார். இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக இந்தத் தம்பதி மீது இந்த கொலைத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் பிரஞ்சு பத்திரிகையாளராக அறிமுகம் செய்து கொண்ட ஒரு துப்பாக்கிதாரி, ஆஸ்மாயேவை நோக்கிச் சுட்டபோது அவர் பதிலுக்குத் தாக்கியதில் அந்தத் துப்பாக்கிதாரி காயமடைந்தார்.

அதிபர் புடினை கொல்ல இஸ்லாமியவாதிகள் சதித்திட்டம் தீட்டியதில் ஆஸ்மாயேவுக்கு பங்கு இருப்பதாக சந்தேகிப்பதாக கடந்த 2012ல் ரஷிய அதிகாரிகள் கூறினர். ஆஸ்மாயேவை ஓப்படைக்குமாறு உக்ரேனிடம் ரஷியா கேட்டபோது உக்ரேன் அதிகாரிகள் மறுத்தனர்.அயல் நாட்டிடம் தனது நாடு ஒப்படைப்பதற்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தால் அந்த வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் வரை காத்திருக்க விரும்புவதாக அதிகாரிகள் அப்போது ரஷ்யாவிடம் தெரிவித்தனர். இரண்டரை வருட சிறைவாசத்தை உக்ரேனியா சிறைகளில் கழித்தபிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார் .





இந்த செச்சேன் தம்பதிகள் உக்ரைனில் நன்கு அறியப்பட்டவர்கள் .டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்திற்காக தன்னார்வாளராக இவர்கள் சண்டையிட்டதால் அங்கே பிரபலமானார்கள்.

1990களில் ரஷிய படைகளுக்கு எதிராக தேசியவாத எழுச்சியை வழிநடத்திய மறைந்த செச்சேன் தலைவரின் பெயரைக்கொண்ட ஒரு தன்னார்வல படைப்பிரிவிற்கு ஆஸ்மாயேவ் தலைமை வகித்தார். உக்ரைனின் கியெவ்-2 படைப்பிரிவில் மருத்துவ குழுவில் பணியாற்றியவர் ஒகுயேவா.




உக்ரைன் தேசிய பாதுகாப்பு அமைப்பு தலைவர் ஒலெக்சான்டர் டுர்ச்சிநோவ் பேஸ்புக்கில் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். '' கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து அதன் ஆக்ரோஷத்தை காட்டிவருகிறது. எங்களது நாட்டின் தைரியமிக்க படைவீரர்களை கொண்டு வருகிறது. ஒகுயேவா கொல்லப்பட்டிருப்பது எங்களது நாட்டிற்கு ஒரு சவால். இதற்கு தக்க பதிலடி தேவை'' என அவர் எழுதியுள்ளார்.

''இந்த உண்மையான உக்ரைன் தேசபக்தர் எப்போதும் நினைவு கூறப்படுவார்'' என உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் கிராய்ஸ்மேன் பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.


திங்கள்கிழமை நடந்த இந்த தாக்குதலுக்கு அதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.உக்ரேனிய தேசியவாத நாடாளுமன்ற உறுப்பினர் இஹோர் மோசிய்சுக் ஒரு வாகன குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த குண்டுவெடிப்பில் அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். ஒகுயேவா ஒரு காலத்தில் அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

கியெவ் கடந்த சில வருடங்களாக அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் மீது மிக மோசமான தாக்குதல்களை கண்டிருக்கிறது. குறைந்த அளவிலான மோதல்கள் உக்ரைனில் தொடர்கின்றன. டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகளை உக்ரைன் படைகள் அடிக்கடி எதிர்கொள்கின்றன. ரஷ்ய மொழி பேசும் கிளர்ச்சியாளர்கள் மாஸ்கோவிற்கு விசுவாசமாக இருக்கின்றனர்.