திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (13:10 IST)

அலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா?

சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது ஒரு கடினமான வாரம்தான்.

வார இறுதியில் சீன கட்டுப்பாட்டாளர்கள் ஜாக் மாவின் இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபாவிற்கு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தனர்.

பல வருடங்களாக தனது போட்டியாளருக்கு எந்த வர்த்தக வாய்ப்பும் செல்லவிடாமல் தடுத்ததாக விசாரணை ஒன்றில் தெரியவந்ததால் அலிபாபாவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அலிபாபவின் இணை நிறுவனமான டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொழில் செய்யும் ஏஎன்டி குழுமம், தனது நிறுவனத்தை மீண்டும் கட்டமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அரசின் ஒழுங்குமுறை அமைப்பு, ஏஎன்டி குழுமம் தொழில்நுட்ப நிறுவனத்தை போல அல்லாமல் ஒரு வங்கியை போல செயல்பட வேண்டும் என்று கூறியதால் இந்த திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை, சீன தொழில்நுட்பத்துறையில் உள்ள 34 நிறுவனங்களின் பிரதிநிதிகளை சம்மன் அனுப்பி அழைத்த அதிகாரிகள், "அலிபாபா உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்," என்றும் எச்சரித்துள்ளனர்.

அந்த நிறுவனங்கள் `சுய பரிசோதனை` செய்து கொண்டு புதிய விதிகளை பின்பற்ற ஒரு மாத கால அவகாசத்தையும் சீனா வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்குவோருக்குமான தளமாக செயல்படும் நிறுவனங்கள்தான் ஃபிளாட்ஃபார்ம் நிறுவனங்கள்.

சீனாவின் தொழில்நுட்ப துறையில் அசைக்க முடியாத ஜாம்பவானாக உள்ள நிறுவனம் அலிபாபா. சீனாவில் மட்டும் அந்த நிறுவனத்திற்கு 800 மில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். எனவேதான் அலிபாபா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது, பிற நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கை ஒலி போன்றது.

அலிபாபா குறித்த விசாரணையில், அந்நிறுவனம் தனது போட்டி நிறுவனத்தில் வியாபாரிகள் எந்த வியாபாரமும் செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு வருவாயில் 4 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் அலிபாபாவை தொடர்ந்து தங்களுக்கு இந்த நிலை வரலாம் என அஞ்சுகின்றன.

கட்சியை காட்டிலும் யாருக்கு அதிகாரம் இல்லை

இன்னொரு புறம் பார்த்தால் சீனாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கும் அரசின் ஒழுங்குமுறை அமைப்பு, அந்த நிறுவனங்களை விட ஒரு அடி முன்னோக்கி தமது நடவடிக்கையை முடுக்கி விட முற்பட்டிருப்பதை, சம்பந்தப்பட்ட சட்டங்களை படித்தால் புரியும்," என சீனாவின் தொழில்நுட்ப ஆய்வாளர் ருயி மா தெரிவித்துள்ளார்.

"இம்மாதிரியான நிறுவனங்களை புரிந்து கொண்டு, வளர்ந்த பொருளாதாரங்களின் நிலையை கடைபிடிக்க கண்காணிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்," என்றார் ருயி மா.

ஆனால் இந்த நடவடிக்கையில் அரசியல் நோக்கங்களும் உள்ளன.

அதிபர் ஷி ஜின்பிங்கின் ஆட்சியில் தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை காட்டிலும் யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை விலக்குவதாக இந்த நடவடிக்கை உள்ளது.

இந்த நிறுவனங்கள் சீனர்களின் வாழ்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த செயலிகளில் ஒன்றை பயன்படுத்தாமல் ஒரு நாளும் கடந்து செல்வதில்லை சீன மக்கள்.

எனவே இந்த செயலிகள் சீனர்களின் வாழ்க்கையில் செலுத்தும் தாக்கத்துடன்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறது.

பேச்சால் வந்த சிக்கல்

பாரம்பரிய வங்கி முறையை ஒழிக்கும் நடைமுறை குறித்து கடந்த வருடம் ஜாக் மா பேசிய பேச்சு பீய்ஜிங்கில் உள்ள முக்கிய அதிகாரிகளை எரிச்சலடைய வைத்தது என சீன நிதித்துறையில் உள்ள செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பேச்சால் ஜாக் மாவின் அலிபாபா மற்றும் அண்ட் க்ரூப் குறித்து சீன அரசு ஊடகம் விமர்சனங்களை வெளியிட்டது.

அதன்பிறகு ஜாக் மா மற்றும் அவரின் குழுவினருக்கு சம்மன் வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ட் க்ரூப்பின் பங்குச் சந்தை தொடக்கம் கைவிடப்பட்டது.

ஜாக் மாவின் அந்த பேச்சால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அலிபாபா மற்றும் அண்ட் ஆகிய நிறுவனங்கள் வரையறையை வகுக்க தொடங்கின.

முதலீட்டாளகள் ஆலோசனை ஒன்றில், அலிபாபாவின் நிர்வாக துணைத் தலைவர் ஜோ சாய், "முன்னோக்கி செல்லும் நேரத்தில், சர்வதேச அளவில் நியாயமற்ற போட்டிகள் நடைபெறும் இடங்களை கண்காணிப்பாளர்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள்," என்றார்.

கட்டுப்பாடற்ற வளர்ச்சி

சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அல்லது வெகு சிறிய கட்டுப்பாடுகளில் மட்டுமே உருவானவை.

எந்தவித ஒழுங்கு நெறிமுறைகளும் இல்லாமல் இந்த நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. பல காலங்களுக்கு அரசும் அதனை ஊக்குவித்தது.

"சீனாவில் தொழில்முனைதல் மற்றும் மாற்று வர்த்தகத்தை ஊக்குவிக்க பல தேசிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன," என்கிறார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஏங்கலா சாங்.

அவர் சீன சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் சமீபத்தில் சீனாவின் நம்பிக்கையற்ற விதிவிலக்குவாதியம் என்ற புத்தகத்தை எழுதியவர்.

"கடந்த காலங்களில் கட்டுப்பாட்டாளர்கள் இத்தனை கடுமையாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது சீனா இந்த நிறுவனங்களுக்கு கடிவாளம் போட நினைக்கிறது.

இந்த நிறுவனங்களிடம் கடினம் காட்டவே சீனா விரும்புகிறது. இருப்பினும் தங்க முட்டையிடும் வாத்தை சீனா கொல்ல விரும்பாது," என்கிறார் ஏங்கலா சாங்.

’குரங்கை அச்சுறுத்த கோழியை கொன்ற கதை’

"குரங்குகளை பயன்முறுத்த கோழிகளை கொன்ற கதை என சீனாவில் ஒரு பழமொழி உண்டு. பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாடம் புகுட்ட அலிபாபாவை ஒரு எடுத்துக்காட்டாக சீனா பயன்படுத்துகிறது. சீன தலைவர்களை பொறுத்தவரை பொருளாதாரம் சிறந்து விளங்கவே அவர்கள் விழைகின்றனர். அரசுக்கு வளர்ச்சிதான் முக்கியம். எனவே அலிபாபா குறித்த நடவடிக்கை பிற நிறுவனங்களை ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரும்," என்கிறார் ஏங்கலா.

இந்த கட்டுப்பாடுகள் தற்போது பெரிய நிறுவனங்களால் நசுக்கப்படும் சிறிய நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என ஆய்வாளர் ருயி மா தெரிவிக்கிறார்.

"உள்ளூரில் உள்ள சிறு முதலீட்டாளர்கள் இந்த கட்டுப்பாடுகள் குறித்து ஆதரவாக பேசுகின்றனர், இந்த நடவடிக்கைகளால் இளம், புதிய நிறுவனங்களுக்கு இது வரை கிடைக்காத ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்." என்கிறார் ருயி மா.