செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (18:07 IST)

அதிமுக தேர்தலுக்கு பின்னான உட்கட்சி குழப்பமும், அன்பான அறிக்கையும் - என்ன நடக்கிறது அக்கட்சியில்?

அதிமுக தொண்டர்கள் கட்சியின் நிர்வாக முறைகளை பற்றியோ, தேர்தல் முடிவுகளை பற்றியோ, கட்சியின் முடிவுகளை பற்றியோ தங்கள் கருத்துகளை பொது வெளியில் கூறாமல், முன்னாள் முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் செயல்பட்டதை போலவே பணியாற்ற வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த கட்சி உறுப்பினரான ராஜன் செல்லப்பா கட்சியில் ஒற்றை தலைமை தேவை என்றும் கட்சியில் மக்களவை தேர்தலில் அதிமுக தோற்றது குறித்து கட்சி கூட்டத்தை ஏன் நடத்தவில்லை என்று கேட்டும் ஊடகங்களில் பேசி வருகிறார்.
 
ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து கட்சியில் உள்ள பிற மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவாகவும், அதனை மறுத்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இதனை அடுத்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வெளியிட்டுள்ளனர்.
 
சென்னையில் ஜூன் 12ம் தேதி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் அமைச்சர்கள், எம்பிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் பங்குபெறும் கூட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
''கழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை யார் கூற விரும்பினாலும், அதற்கென ஒரு நேரமும், சந்தர்ப்பமும், செயற்குழு,பொதுக்குழு,ஆலோசனைக் கூட்டம் என்று பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்,'' என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையின் முடிவில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என கூறப்பட்டுள்ளது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த காலங்களில் வெளியாகும் அறிக்கையின் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தொனியில் இந்த அறிக்கை உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
 
ராஜன் செல்லப்பாவின் விமர்சனத்தை ஒட்டி வெளியாகியுள்ள அதிமுகவின் அறிக்கை எதனை காட்டுகிறது என மூத்த செய்தியாளர் பகவான் சிங்கிடம் கேட்டோம்.
 
ராஜன் செல்லப்பா ஓபிஎஸின் பகுதியாக கருதப்படும் தென் தமிழகத்தில் உள்ள இபிஎஸ் ஆதரவாளர் என்ற கருத்து உள்ளது என்று தொடங்கிய அவர், ''தற்போது வெளியாகியுள்ள அறிக்கை இரண்டு முக்கிய விஷயங்களை சொல்கிறது. ஓன்று ஜெயலலிதா இருந்த போது இருந்த கட்சியாக இல்லாமல், சுதந்திரமாக கட்சியை பற்றி, தேர்தல் முடிவுகள் குறித்து பேசுகிறார்கள் என்பதை காட்டுகிறது. அதே சமயம் சிலரின் கருத்துக்கள் கட்சி மீதான மதிப்பை குறைப்பதாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால், கட்சியில் உள்ளவர்களை டிடிவி தினகரன் அணிக்கு அனுப்பிவிட கூடாது என்பதால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் கட்சியின் அறிக்கை கண்டிப்புடன் இருப்பதாக இல்லாமல், அன்பு கூர்ந்து என்ற பாணியில் அமைந்துள்ளது,''என்கிறார் பகவான் சிங்.
 
அதே சமயம், கட்சியில் ஓபிஎஸ் ஓரம்கட்டப்படுகிறர் என்ற கருத்து நிலவும் வேளையில்,ராஜன் செல்லப்பா தீவிரமாக ஒற்றை தலைமை வேண்டும் என பேசுவது, இபிஎஸ்சின் சுயசாதனையாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.