திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (00:27 IST)

10 சதவீதம் பேருக்கு கூட கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆப்பிரிக்க நாடுகள்!

10 சதவீதம் பேருக்கு கூட கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆப்பிரிக்க நாடுகள் - உலக சுகாதார அமைப்பின் இலக்கு தப்பியது ஏன்?
 
டிசம்பர் 2020 இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40% தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற இலக்கு பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் சாத்தியபடவில்லை.
 
உலக சுகாதார அமைப்பு மேலே குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தது. ஆனால் ஆப்பிரிக்க கண்டம் முழுக்க, இதுவரை 9% மக்கள் மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
 
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் திரிபு, கடந்த சில வாரங்களில் உலகம் முழுக்க பரவி வருவதால், குறைவாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது தற்போது கவலைக்குரிய விஷயமாகியுள்ளது.
 
ஆப்பிரிக்க கண்டத்திலேயே ஏழு நாடுகள் மட்டுமே 40% இலக்கை எட்டியுள்ளன.
 
அதிலும் மூன்று நாடுகள் சிறு தீவுகள், அங்கு போக்குவரத்து சிக்கல்கள் பெரிதாக இல்லை. செய்சில்லெஸ், மொரீஷஸ் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கேப் வெர்டே நாட்டில் கிட்டத்தட்ட 45% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
 
அதுபோக, ஆப்பிரிக்க கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ள நாடுகளில் மொராக்கோ, துனீசியா, போட்ஸ்வானா, ருவாண்டா ஆகிய நாடுகள் மட்டுமே இலக்கை கடந்துள்ளன.
 
ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள், சகாராவுக்கு கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளை விட ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
 
டிசம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கிட்டத்தட்ட பாதி நாடுகள், சுமார் 10 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்த இலக்கை உலக சுகாதார அமைப்பு செப்டம்பர் 2020-க்குள் அடைய வேண்டும் என்று கூறியது. இதையும் பல ஆப்பிரிக்க நாடுகள் பூர்த்தி செய்யத் தவறியுள்ளன.
 
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளில் (அக்கண்டத்தின் பெரிய நாடுகளும் இதில் அடக்கம்) மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
 
 
இதை எல்லாம் விட அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்ரியா நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
 
வரும் ஜூன் 2022க்குள் அனைத்து உலக நாடுகளும், 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. ஆனால் இந்த இலக்கும் ஆப்பிரிக்காவில் எட்டப்படாமல் போகலாம்.
 
"இப்போதிருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும் போது, ஆப்பிரிக்காவில் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க ஆகஸ்ட் 2024 வரை ஆகலாம் என மதிப்பீடுகள் கூறுகின்றன" என உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்தியத்தின் இயக்குநர் மட்ஷிடிசோ மொய்டி கூறுகிறார்.
 
ஏன் ஆப்பிரிக்க நாடுகள் தடுப்பூசி விவகாரத்தில் தடுமாறுகின்றன?
 
 
பலவீனமான சுகாதார கட்டமைப்புகள், மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சியளித்து பணியில் களமிறக்க போதுமான நிதி இல்லாதது, தடுப்பூசியை சேமித்து வைக்க போதுமான வசதிகள் இல்லாதது போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
உலக அளவில் தடுப்பூசி விநியோகம் அதிகரித்திருந்தாலும், அதை முறையாக நாட்டுக்குள் விநியோகிப்பது மற்றும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது போன்ற விஷயங்களில் சில உலக நாடுகள் பின்தங்கியுள்ளன.
 
சில தடுப்பூசிகள் குறைந்த காலத்துக்குள், விரைவில் காலாவதி ஆகும் நிலையில் வழங்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தங்கள் கவலையை தெரிவித்துள்ளது.
 
தடுப்பூசிய அனுப்புவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத காலத்துக்கு முன் தெரியப்படுத்தி, தங்கள் கையில் தடுப்பூசி வந்து சேரும் போது இரண்டரை மாதமாவது காலாவதி ஆகாமல் இருப்பது போல தடுப்பூசி இருப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
 
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருக்கும் தயக்கம் மற்றும் அதன் மீதான சந்தேகம் கூட குறைவாக தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம், ஆனால் அதை குறிப்பிட்டு அளவிட முடியாது.
 
கடந்த நவம்பர் 2020-ல் ஆப்பிரிக்காவில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் குறைவாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியது உலக சுகாதார அமைப்பு. இதுவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் உள்ள தயக்கம், தடுப்பூசி இருப்பு, அதை எளிதில் செலுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கச் செய்வதில் உள்ள சிக்கல் ஆகியவை ஒரு காரணமாக இருக்கலாம் என்றது.
 
ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற உலக நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள், நன்கொடைகள், உலக அளவில் தடுப்பூசிப் பகிர்வுத் திட்டமான கோவேக்ஸ் திட்டத்தையும் நம்பி இருந்தது.
 
பல நாடுகளும் கடந்த ஆண்டு தடுப்பூசியைப் பெற சிரமப்பட்டன, ஆனால் கடந்த சில மாதங்களில் சூழல் கணிசமாக மாறியது. பணக்கார நாடுகள் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளை நன்கொடையாக அறிவித்தன அல்லது பிரிட்டனில் கடந்த ஜூன் 2020-ல் நடந்த ஜி7 மாநாட்டில் நேரடியாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கின.
 
நாடுகளுக்கு தடுப்பூசி போதுமான அளவுக்குக் கிடைக்கிறது, உள்நாட்டுக்குள் தடுப்பூசியை தேவையான இடத்துக்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்து பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அதைக் களைய வேண்டும்.
 
"தற்போது தடுப்பூசி கிடைப்பது அதிகரித்திருப்பதால், தடுப்பூசி செலுத்துவதில் தடையாக இருக்கும் மற்ற விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் உள்ள தயக்கத்தை எதிர்கொள்வதோடு, போதுமான நிதி இல்லாதது, மருத்துவ சாதனங்கள், சுகாதாரப் பணியாளர்கள், குளிர்சாதன வசதி போன்றவைகளையும் எதிர்கொள்ள வேண்டும்" என்கிறார் மட்ஷிடிசோ மொய்டி.
 
ஆப்பிரிக்காவுக்கு விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளில் 63% தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட பாதி நாடுகள் 50 சதவீதத்துக்கும் குறைவான தடுப்பூசிகளையே பயன்படுத்தியுள்ளன என்கிறது சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் தரவுகள்.
 
பல ஆப்பிரிக்க நாடுகளும் தங்கள் தடுப்பூசி தேவைக்கு கோவேக்ஸ் திட்டத்தையே நம்பி இருந்தன. கோவேக்ஸ் திட்டமோ, தன் பெரும்பாலான தடுப்பூசி சரக்குக்கு உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்து இருந்தது.
 
கடந்த ஏப்ரல் மாதம், இந்தியா, தன் சொந்த அவசர தேவைக்காக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. மற்ற தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாமல் திணறின.
 
கடந்த டிசம்பர் மாதம், தடுப்பூசிக்கு வரும் புதிய ஆர்டர்கள் குறைவதால் சீரம் நிறுவனம், தன் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக அறிவித்தது. ஆக தடுப்பூசி விநியோகப் பிரச்னை தற்போது முக்கிய பிரச்னை அல்ல.
 
பணக்கார நாடுகள், புதிதாக உருவாக்கப்பட்டு வரும் அல்லது சோதனையில் இருக்கும் பல புதிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
 
கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசி விநியோகம் அதிகரித்திருந்தாலும், மேற்கொண்டு கோவேக்ஸ் திட்டம் பெறவிருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை என கடந்த டிசம்பர் மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.
 
ஆப்பிரிக்க கண்டம் முழுக்க 40% பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமானால் 900 மில்லியன் (90 கோடி) தடுப்பூசிகள் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
 
டிசம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, ஆப்பிரிக்க கண்டம் கோவேக்ஸ் திட்டம் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் தடுப்பூசி பெறும் திட்டம் மூலம் 474 மில்லனுக்கும் சற்றே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
 
பிற செய்திகள்: