வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:46 IST)

மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை!

மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை!
 
மொரிஷியசில் உள்ள ஒரு விமான நிலையத்தின் ஊழியர்கள் விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் விட்டுச் செல்லப்பட்டிருந்த, பச்சிளம் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர்.
 
அந்தக் குழந்தையைக் கழிவறையில் பெற்றெடுத்து அங்கேயே விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த 20 வயதாகும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மொரிஷியஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் மடகாஸ்கர் நாட்டில் இருந்து ஜனவரி 1ஆம் தேதி சர் சிவசாகர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
 
விமானம் தரை இறங்கிய பின் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுங்க சோதனைகளின் போது அந்த விமானத்தின் கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் குழந்தை இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அந்தக் குழந்தை உடனடியாக ஓர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
 
கைவிடப்பட்ட குழந்தையைப் பெற்றெடுத்த தாய் என்று சந்தேகிக்கப்படும் பெண் அது தமது குழந்தை அல்ல என்று தொடக்கத்தில் மறுத்தார்.
 
ஆனால் அதன் பின்பு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் மிகச் சமீபத்தில் குழந்தையை பிரசவித்துள்ளார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
 
குழந்தை பராமரிக்கப்பட்டு வரும், அதே மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்தப் பெண் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
 
தற்போது அந்தப் பெண்ணும் குழந்தையும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மொரிஷியசில் இரண்டு ஆண்டுகள் தங்கி வேலை பார்ப்பதற்கான விசாவில் வந்துள்ள அந்த மடகாஸ்கர் பெண் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய பின் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்.
 
புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மொரிஷியஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.