திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:27 IST)

இரான் சுட்டு வீழ்த்திய உக்ரைன் விமானம்: ரூ.625 கோடி இழப்பீடு வழங்க கனடா நீதிமன்றம் உத்தரவு

இரானில் 2020ஆம் ஆண்டு விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு 107 மில்லியன் கனடா டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 652 கோடி ரூபாய்), வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும் என கனடா நீதிமன்றம் ஒன்று இரானுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த இழப்பீட்டை ஒண்டாரியோவின் உயர் நீதிமன்றம், இறந்தவர்களின் இணையர்கள், உடன் பிறந்தவர்கள், குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் மகள்கள் மற்றும் மகன்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க உத்தரவிடப்ட்டுள்ளது. இரானிடம் இருந்து எப்படி இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும் என்று உடனடியாக தெரியவில்லை.
 
உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பி.எஸ் 752  (PS752) டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. அப்போது, இந்த விமானத்தை அமெரிக்காவின் ஏவுகணை என்று தவறாக கருதியதாக இரான் கூறியது. இந்த சம்பவத்தில், விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.
 
அவர்களில் 55 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள்; மேலும் 35 பேர் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள்.  இந்த சம்பவத்திற்கு காரணமான இரான் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
இழப்பீட்டுக்காக கனடாவிலும் வெளிநாட்டிலும் உள்ள இரானிய சொத்துகளைக் (எண்ணெய் டேங்கர்கள் உட்பட) கைப்பற்றுவது குறித்து அவரது குழு சிந்திக்கும் என்று உறவினர்களின் வழக்கறிஞரான மார்க் அர்னால்ட் கூறினார்.
 
சிபிசியின் செய்திப்படி, நீதிமன்றத்தில் இரான் தன் தரப்பு  வாதத்தை முன் வைக்காமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.  
 
கடந்த ஆண்டு, கனடா  அரசின்  அறிக்கைப்படி, இந்த விமானம் வீழ்த்தப்பட்டதற்கு இரானுக்கு "முழு பொறுப்பு" உண்டு என்றும், அந்நாட்டின் "திறமையற்ற", "பொறுப்பற்ற தன்மையின்" விளைவு எனவும் கூறியிருந்தது.
 
2020ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதியன்று நடந்த இந்த சம்பவத்திற்கு இரானிய அதிகாரிகள் முதலில் பொறுப்பு ஏற்க மறுத்தனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அதிகரித்ததால், போயிங் 737-800 விமானத்தை அமெரிக்க ஏவுகணை என்று  இரான் நாட்டின் வான் பாதுகாப்புப் பிரிவு தவறாகக் கருதியதாக  புரட்சி காவலர்களின் விண்வெளிப் படை (Revolutionary Guards' Aerospace Force) கூறியது.
 
அச்சமயத்தில், இரானின் வான் பாதுகாப்பு துறை  மிகவும் தயாரான நிலையில் இருந்தது. ஏனெனில், அந்த நாடு அமெரிக்கப் படைகளை கொண்ட இரண்டு இராக்கிய ராணுவ தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியிருந்தது.  அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, பாக்தாத் நகரத்தில் அமெரிக்காவின்  ஆளில்லா விமானத் தாக்குதலில் இரானின் உயர் அதிகாரியான ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் தாக்குதல் நடத்தியது.
 
விமான விபத்தின் பின்னணி
 
2020 ஜனவரி 8ஆம் தேதி, இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
 
தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
 
தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா , கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறின.
 
மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது இரான்; இந்நிலையில் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் அடுத்த சில நாட்களில் ஒப்புக்கொண்டது.
 
ஏவுகணைத் தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக இரான் நாட்டு நீதித்துறை விமான விபத்து நடந்த அடுத்த வாரம் தெரிவித்தது.