செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (09:24 IST)

'அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணம்' - 'இந்து' என். ராம்

"அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணமெனக் கருதுகிறேன். வரவிருக்கும் தேர்தல்களிலும் தி.மு.கவின் ஆதிக்கம் தொடரும். பா.ஜ.கவை மக்கள் ஏற்கவில்லை" என்கிறார் மூத்த ஊடகவியலாளர் என். ராம்.
 
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தி இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராமுடன் உரையாடினார் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். அதிலிருந்து:
 
கே. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
 
ப. இது மிகப் பெரிய sweep என்பது தெளிவாகத் தெரிகிறது. தி.மு.கவும் முதலமைச்சரும் இதை எதிர்பார்த்தார்கள். குறிப்பாக மேற்கு தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல ஆட்சி எனக் கருதுகிறேன். இந்த வெற்றிக்கு அதுதான் காரணமாக இருக்கும்.
மக்களுக்கு எது நல்லதாக இருக்கும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அவசரப்படாமல் நிதானமாகச் செல்கிறார்கள். முதலமைச்சரின் உறுதி இதில் தெரிகிறது. புது மாதிரி ஆட்சியைத் தர வேண்டும் என்பதில்தான் அவருடைய உறுதி இருக்கிறது. தொடர்ந்து இதைச் செய்தால், மக்களவைத் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும்.
 
கே. நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற தி.மு.க., அதேபோன்ற மாபெரும் வெற்றியை சட்டமன்றத் தேர்தலில் பெறவில்லை. ஆனால், மீண்டும் அதே போன்ற வெற்றியைப் பெற்றிருக்கிறது...
 
ப. நல்ல ஆட்சியைத் தருகிறார்கள், தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதுதான் காரணம்.
 
கே. உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றுவார்கள். ஆனால், எதிர்பார்த்ததைவிடவும் குறைவான இடங்களையே அ.தி.மு.க. பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. இந்தத் தோல்வியை வைத்து அ.தி.மு.க. பலவீனமடைந்துவிட்டதாக சொல்ல முடியுமா?
ப. நிரந்தரமாக பலவீனமடைந்திவிட்டதாகச் சொல்ல முடியாது. ஆனால், சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால், நிச்சயமாக பலவீனமடைந்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய அரசியல் நம்பிக்கை தரக்கூடிய அரசியலாக இல்லை. மாற்றி மாற்றி பேசுகிறார்கள். அதீதமான குற்றச்சாட்டுகளை வைத்து தாக்குகிறார்கள். அ.தி.மு.க. இன்னமும் ஒரு முக்கியமான எதிர்க்கட்சிதான்.
 
ஆனால், நம்பகத்தன்மை மிக்க தலைமை இருப்பதாகச் சொல்ல முடியாது. அவர்கள் மறைந்துவிடப்போவதில்லை. ஆனால், அவர்கள் பலவீனமடைந்திருக்கிறார்கள். மேற்குப் பகுதியில் தி.மு.க. சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.
 
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மேற்கு மண்டலத்தில் தோற்றதால், கோவிட் கட்டுப்பாடு, தடுப்பூசி அளித்தல் போன்றவற்றில் சரியாகச் செயல்படவில்லையென்ற வதந்தி பரப்பப்பட்டது. உடனே முதலமைச்சர் அங்கே சென்று, தவறுகள் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தார். அது ஒரு நல்ல சமிக்ஞை. தவறுகள் நடந்தால், குறைகள் இருந்தால் அதை தலைமை கவனிக்குமானால் மக்கள் நன்றாக வரவேற்பார்கள்.
இரண்டாவது காரணம், கூட்டணி. கூட்டணி சுமுகமாக இருந்தது. இடங்களைப் பகிரந்து கொண்டார்கள். சட்டமன்றத் தேர்தலின்போது பேச்சுவார்த்தை கடுமையாக இருந்தது. ஆனால், இந்த முறை சற்றுத் தாராளமாக இருந்தார்கள். கூட்டணிக் கட்சிகளுக்காக பணியாற்றவும் செய்தார்கள்.
 
இரண்டாவதாக, பா.ஜ.க. ஆளாத மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களுடன் இணைந்து மாநில சுயாட்சி குறித்த முயற்சிகளை தி.மு.க. எடுக்க ஆரம்பித்துள்ளது. முதல்வர் இது குறித்து தைரியமாகப் பேசியிருக்கிறார். தவிர, நீட் விவகாரத்திலும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை அகில இந்திய அளவில் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
 
கே. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த பிறகு, இங்கு ஒரு இடைவெளி இருப்பதாகக் கருதும் பா.ஜ.க. வலுவாக காலூன்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த முறையும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஏன்?
 
ப. அந்தக் கட்சியை மக்களுக்குப் பிடிக்கவில்லை. பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்படித்தான் சொல்ல வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மக்களைப் பிளவுபடுத்தக்கூடிய கட்சியாக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வகுப்புவாத பாதையில் செல்வதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
 
தமிழக வாக்காளர் நல்ல அரசியல் அறிவுள்ளவர்கள். நிறையப் பேர் அரசியல் பேசுகிறார்கள். வெளிப்படையாக அரசியல் குறித்து விவாதிக்கிறார்கள். மோதி அரசு செய்வது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்தியில் பேசுவது மட்டுமல்ல, எல்லாவிதத்திலும் இந்தியைத் திணிக்கிறார்களோ என்ற எண்ணம் இருக்கிறது.
தவிர, அவர்களுடைய தலைவர்களும் ஏதேதோ பேசுகிறார்கள். மீடியாவை ட்ரோல் செய்கிறார்கள். இப்போது அண்ணாமலை வந்திருக்கிறார். தனக்குப் பிடிக்காத கேள்விகள் வந்தால், கேட்பவர்களை ட்ரோல் செய்கிறார்கள். இப்படிதான் நீங்கள் கேள்வி கேட்பீர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இது எவ்விதமான அரசியல், எவ்விதமான நெறிமுறை? அவர் இதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.
 
தகவல்களைப் பெற பத்திரிகையாளர்கள் தூண்டும் வகையிலான கேள்விகளைத்தான் கேட்பார்கள். அதற்காக ட்ரோல் செய்தால் எப்படி? ஒருவேளை காவல்துறையிலிருந்து வந்ததால் அவர் இப்படியிருக்கலாம்.
 
கே. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களை மாற்று அரசியல் சக்திகளாக முன்னிறுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும் தோல்வியே கிடைத்திருக்கிறது. என்ன காரணம்? மாற்று அரசியலுக்கு இங்கே இடமில்லையா?
 
ப. நான் கமல்ஹாசனிடம் பேசியிருக்கிறேன். அவரிடம் நல்ல சிந்தனைகள் இருக்கின்றன. ஆனால், பெரிய கட்சிகள் மோதும்போது சிறிய கட்சிகளுக்கு இடமிருக்காது. அவர்களுக்கு அளிக்கும் ஓட்டுகள் வீண் என மக்கள் கருதுவார்கள். பல தருணங்களில் ஆதரவாளர்களே மாற்றி வாக்களிப்பார்கள். ஏனென்றால், தங்கள் வாக்குகள் வீணாகக்கூடாது என்றுதான் பலரும் நினைப்பார்கள்.
 
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் பா.ஜ.கவுடன் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார்களோ என்ற எண்ணம் இருக்கிறது. இல்லாவிட்டால் அவர்களால் கூடுதல் இடங்களைப் பிடித்திருக்க முடியும்.
 
கே. தி.மு.க. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால், இம்மாதிரி வெற்றியைப் பெறும் கட்சி, மோசமாக நடந்துகொள்ளும்பட்சத்தில் அது அந்தக் கட்சிக்கே எதிர்மறையாக முடியும் சாத்தியங்கள் உண்டல்லவா?
 
ப. அது ஒரு சவால்தான். மக்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள். அவர்கள்தான் மிகுந்த கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனால், தற்போது முதல்வர் நடந்துகொள்வதைப் பார்த்தால், மிகுந்த நிதானத்துடன் இருப்பவராக காட்சியளிக்கிறார். இருந்தாலும் அது ஒரு சவால்தான். கவுன்சிலர்கள் அராஜகப்போக்கை கையாளக்கூடாது. அப்படிச் செய்ய மாட்டார்கள் எனக் கருதுகிறேன். ஏனென்றால், அ.தி.மு.கவும் களத்தில் இருக்கும்.
 
கே. அ.தி.மு.க. தன் இழந்த பலத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?
 
ப. அவர்கள் தங்கள் சந்தர்ப்பவாத நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். ஆளும்கட்சி செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியதில்லை. ஆக்கபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தால், அதில் கலந்துகொண்டு தங்கள் பார்வையை முன்வைக்க வேண்டும். அதைப் புறக்கணித்துவிட்டு, ஒளிந்துகொண்டால் என்ன பலன்? தேர்தல் நேரத்தில் மோதிக்கொள்ளலாம். ஆனால், மாநில உரிமைகள், வகுப்புவாதம் போன்ற விவகாரங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.
 
இரண்டு கட்சிகளுமே பா.ஜ.க. கூட்டணியில் இருந்திருக்கின்றன. ஆனால், ஜெயலலிதா இருக்கும்போது, அவர் அக்கட்சி சொன்னதையெல்லாம் செய்யமாட்டார். காரணம் மக்கள் அவரை நேசித்தார்கள். இவர்களுக்கு அந்த பலம் இல்லை.
 
கே. தேர்தல் முடிவுகள் இப்படியிருப்பதால், வி.கே. சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் வாய்ப்பிருக்கிறதா?
 
ப. வாய்ப்பிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அது வெறும் யூகம்தான். ஆனால், அவர் கட்சியைக் கைப்பற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஈ.பி.எஸ். உள்ளேயே விட மறுக்கிறாரே.
 
கே. இந்தத் தேர்தல் முடிவுகளை 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்க முடியுமா?
 
ப. கட்டாயமாகப் பார்க்க முடியும். இந்தத் தேர்தல் மட்டுமல்லாமல், தொடர்ந்துவந்த பல தேர்தல்களையும் பார்த்து, தி.மு.க. ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்ல முடியும். கடந்த முறை 39க்கு 38 இடங்களை பெற்றார்கள். இந்த முறையும் அதேபோன்ற வெற்றி கிடைக்குமா என்று சொல்ல முடியாது.
 
ஆனால், ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இருக்காது என்று சொல்ல முடியும். ஆனால், எவ்வளவு இடங்களை பிடிப்பார்கள் என்பதை தேர்தல் நெருக்கத்தில்தான் சொல்ல முடியும். ஆனால், இப்போதைய போக்கைப் பார்த்தால் அவர்களை அகற்றுவது கடினம்.