2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் நாள் அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் நான் வசிக்கும் ஐயோவா சிட்டி என்னும் சிறிய ஊரில், ஒரு தமிழ் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டேன். அந்த விழாவில் சில தமிழ் குடும்பங்களும் கலந்து கொண்டன.
அவர்கள் எனது ஊரில் இருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள நார்த் லிபர்டி என்ற ஊரில் இருந்து வந்திருந்தார்கள். சிலர் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். அந்தக் குழந்தைகளுடன் உரையாடிய போது, ஹாசினி என்ற ஒரேயொரு குழந்தை மட்டும் நன்கு தமிழில் பேசினாள். மற்ற இரண்டு குழந்தைகளுக்குத் தமிழ் தெரியவில்லை.
அடுத்த வார இறுதியில் நார்த் லிபர்டிக்குச் சென்று அந்தக் குடும்பங்களைச் சந்தித்தேன். இந்தப் பகுதியில் தமிழ் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற என் விருப்பத்தைக் கூறினேன். அவர்களுக்கு மகிழ்ச்சி. இன்னும் பல தமிழ்க் குடும்பங்கள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. அவர்களையும் சந்தித்துப் பேசுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்கள்.
'தாத்தா பாட்டியிடம் தமிழில் பேச வேண்டும்'
நானும் உற்சாகமாக தமிழ் பெற்றோர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். 2019 ஏப்ரல் 30ஆம் நாள் பெற்றோர்களுடனான முதல் கலந்தாலோசனை கூட்டத்தை நடத்தியபோது, ஐந்து பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளியைத் துவங்குவதற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்கள்.
அந்தப் பெற்றோர்கள்களில் சிலர் தமிழகத்தின் கிராங்களில் இருந்து அமெரிக்கா வந்தவர்கள், பத்தாம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்கள். அவர்களிடம் இயல்பாக தமிழ் உணர்வு இருந்தது. பலர் நகர்புறங்களில் இருந்தும், பெரு நகரங்களில் இருந்தும் வந்தவர்கள். அவர்கள் ஆங்கில வழியில் படித்தவர்கள். ஆனாலும் தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படித்தவர்கள். அவர்களிடம் தமிழ் மொழியின் முக்கித்துவத்தை எடுத்துக் கூறி அவர்களின் குழந்தைகளையும் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டினோம்.
விடுமுறையில் அமெரிக்கா வந்திருந்த ஒரு குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் (அவர் ஒரு தமிழாசிரியை) தமிழின் பெருமைகளை குழந்தைகளிடம் எடுத்துச் சொன்னார்கள். தங்கள் குழந்தைகள் தாத்தா பாட்டியிடம் தமிழில் பேச வேண்டும் என்று விரும்பிய பல பெற்றோர்கள் தாமாக முன்வந்து தமிழ்ப் பள்ளியில் சேர்த்தார்கள்.
இப்படியாக, 20 குழந்தைகள் தமிழ் பள்ளியில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தார்கள். மே மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நார்த் லிபர்ட்டியில் உள்ள நூலகத்தில் தமிழ் பள்ளியைத் துவக்கினோம்.
"நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும்?"
பதிவு செய்தவர்களில், 11 குழந்தைகள் கலந்து கொண்டார்கள். இரண்டு மாதம் அறிமுக வகுப்புகளை நடத்தினோம்.
"அக்கா தமிழ் படிக்கவில்லை, அண்ணன் தமிழ்ப் படிக்கவில்லை, நான் ஏன் படிக்க வேண்டும்?" என்று குழந்தைகள் வாதிட்டார்கள். பெற்றோர்கள் உதவியுடன் தமிழின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு படங்களாகக் காட்டினோம்.
சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துகளை குழந்தைகளிடம் காட்டி அவர்களை தமிழ் படிக்க ஈர்த்தோம்.
பெற்றோர்கள் இதனால் ஊக்கமடைந்து குழந்தைகளை தமிழ் பள்ளியில் சேர்த்தார்கள்.
கோடை விடுமுறைக்குப் பின் 21 மாணவர்களுடன் பள்ளி மீண்டும் துவங்கியது.
'ஐயோவாசிட்டி தமிழ் பள்ளி'
எங்கள் பள்ளிக்கு 'ஐயோவாசிட்டி தமிழ் பள்ளி' என்று பெயரிட்டோம். அமெரிக்காவில் சுமார் 8000 மாணவர்கள் இணைந்து பயிலும் 'அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம்' (American Tamil Academy) என்ற அமைப்பில் 100 பள்ளிகள் இணைந்து அவர்களின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். எங்கள் ஐயோவாசிட்டி தமிழ் பள்ளியையும் அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்துடன் இணைத்துக் கொண்டோம்.
இரண்டு மாதங்கள் பாட நூல்கள் இன்றி நான் பாடம் நடத்தி வந்தபோது குழந்தைகளிடையே இருந்த சோர்வு புதிய வண்ணப் பாடநூல்களைப் பார்த்தவுடன் நீங்கியது. அவர்கள் உற்சாகமானார்கள். பெற்றோர்களுக்கும் புதிய நம்பிக்கை வந்தது.
21 குழந்தைகள் வயதுக்கேற்ப நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டனர். மழலை நிலை, நிலை ஒன்று, நிலை இரண்டு, நிலை மூன்று. மழலை நிலையில் நான்கு குழந்தைகள், நிலை ஒன்றில் இரண்டு குழந்தைகள், நிலை இரண்டில் ஆறு குழந்தைகள், நிலை மூன்றில் ஒன்பது குழந்தைகள்.
சனி, அல்லது ஞாயிற்றுக்கிழமை நார்த் லிபர்ட்டி நூலகத்தில் அறையைப் பதிவு செய்து வகுப்புகளை நடத்தினோம். 45 நிமிடங்கள் ஒரு வகுப்புக்கு. மழலை நிலை, நிலை ஒன்று ஆகியவற்றை இணைத்து ஒரே வகுப்பாக நடத்தினோம். எனக்கு உதவி செய்ய பெற்றோர் ஒருவரும் கூட இருப்பார். அடுத்த 45 நிமிடங்கள் நிலை இரண்டுக்கான பாடம் நடத்துவோம். அதற்கு அடுத்த 45 நிமிடங்கள் நிலை மூன்றுக்குப் பாடம் நடத்துவோம். மொத்தமாக தமிழ் பள்ளி இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.
முதலில் தமிழில் பேசுவதற்கு பயிற்சி அளித்தோம். அதுவே வகுப்பின் முதன்மையான பயிற்சியாகவும் இருந்தது. பேசுவதற்கு அடுத்தபடியாக தமிழ் எழுத்துக்களைப் படிக்கப் பயிற்சி அளித்தோம். அதன் பின்னரே தமிழில் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தோம்.
பள்ளி நடத்த நிரந்தர இடமில்லை
முதலில் பெற்றோர்கள் முழுமையாக எங்களை நம்பவில்லை. பள்ளி வேலைகளை இவர்கள் நம்மிடத்தில் கொடுத்துவிட்டால் என்ன செய்வது, பள்ளியை விட்டு இவர்கள் விலகிவிட்டால் என்ன செய்வது, நாம் எப்படி பள்ளியை நடத்துவது என்பன போன்ற பல ஐயங்கள் அவர்களுக்கு இருந்தன. ஆனால் இரண்டு மாதங்களில் அவர்களுக்கு எல்லா ஐயங்களும் நீங்கி நூறு சதவீதம் ஆதரவளித்தார்கள்.
ஆனால், நார்த் லிபர்ட்டி நூலகத்தில் எல்லா வார இறுதியிலும் அறைகளைப் பதிவு செய்ய முடியவில்லை.
இரண்டு வாரம் அறைகளை ஒதுக்குவார்கள். அடுத்த இரண்டு வாரங்கள் எங்கள் தமிழ் பள்ளியை நடத்த இடமில்லாமல் போகும். அருகில் உள்ள கோரல்வில் என்ற இடத்திலுள்ள நூலகத்தை அணுகி அங்கு சில வாரங்கள் வகுப்புகளை நடத்துவோம். சில வாரம் பெற்றோர்களின் வீட்டில் வாகனம் நிறுத்துமிடத்தில் தமிழ் பள்ளியை நடத்தினோம். இப்படிப் பல இன்னல்களைச் சமாளித்துப் பள்ளியை நடத்தினோம்.
தமிழகத்தில் இருந்து சுமார் 250 குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களை வாங்கி பெற்றோர்கள் உதவியுடன் நூலகத்தை உருவாக்கினோம்.
அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தால் (அ.த.க) நடத்தப்படும் பருவத் தேர்வுகளுக்கு மாணவர்களை அணியமாக்கினோம். ஒவ்வோர் ஆண்டும் மூன்று பருவத் தேர்வுகள் நடைபெறும். கேள்வித் தாள்களை அ.த.க. மின் அஞ்சலில் அனுப்பி வைப்பார்கள். தமிழ் தேர்வு குறித்த அச்சத்தில் இருந்த மாணவர்களை உற்சாகப்படுத்தி மாதிரித் தேர்வுகளை நடத்தினோம். 60 மதிப்பெண்கள் வாய்மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கு என்று தேர்வுகளை நடத்தினோம்.
வசந்த காலத்தை எதிர்நோக்கி...
ஐயோவாவின் குளிர்காலம் மிகக் கடுமையானது. 2018 டிசம்பர் மாதம் குளிர் மைனஸ் 43 டிகிரியைத் தொட்டது . ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை ஐந்து மாதங்கள் கடும் குளிரை சமாளிக்க வேண்டும்.
நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். பனியில் என்னுடைய சக்கர நாற்காலி சிக்கிக் கொள்ளும். வீட்டிலிருந்து பத்தடி தூரத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்திற்குச் செல்ல இயலாது. இரண்டு அடி உயரத்தில் பனி கொட்டிக் கிடக்கும். பள்ளிக்குச் சென்று பாடம் நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டேன். அப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.
இப்படியாக முதல் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். பின்னர் கொரோனா காலத்தில் இணைய வழியில் தமிழ் பள்ளியை நடத்தினோம். இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் பள்ளியை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இரண்டு ஆண்டில் பெற்றோர்கள், ஆசிரியர் பயிற்சி பெற்றார்கள். பாடங்களைத் தமிழில் நடத்தக் கற்றார்கள். தற்போது பெற்றோர்களே ஆசிரியர்களாக மாறி பள்ளியை நடத்தப் பெரிதும் உதவி வருகிறார்கள்.
வரும் வசந்த காலத்தில் கொரோனா முடிவுக்கு வந்து மீண்டும் நேரில் சென்று மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் நாட்களுக்காகப் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
சூர்யா நாகப்பன், ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் நியூட்ரிஷன் அறிவியல் துறை சான்றிதழ் படிப்பை முடித்துவிட்டு, தாவர உணவுகள் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்கத் தமிழ் வானொலியின் செய்திப் பிரிவில் தன்னார்வ ஒருங்கிணைப்பாளராக இரண்டு ஆண்டு பணியில் இருந்தார். தற்போது 'நூலால் எழுவோம்' என்ற பழங்குடிக் குழந்தைகளின் கதை சொல்லும் நிகழ்ச்சியின் பொறுப்பாளராக இருக்கிறார். இதுவரை 78 வாரங்கள் கதைகள் ஒலிபரப்பாகி உள்ளன.