செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:56 IST)

யுக்ரேன் - ரஷ்யா பதற்றம்: ஒரே நாளில் 1,400 வெடிப்புச் சம்பவங்கள்

யுக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண்டுதல்களுக்கு எதிராக எந்த விதமான பதில் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என யுக்ரேனிய அதிபர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக எங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மியூனிக்கில் நடந்த ஒருபாதுகாப்பு மாநாட்டில் பேசுகையில், யுக்ரேனிய மக்கள் "பயப்படவில்லை, ஆனால் நாங்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறோம்" என்றார்.

மேற்கத்திய தலைவர்கள் ''ரஷ்யாவை மகிழ்விக்க விரும்பும் வகையிலான கொள்கையைக் கடைபிடிப்பதற்கு" எதிராகத் தன் கருத்தை பதிவு செய்தார் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி யுக்ரேனுக்கு புதிய பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

யுக்ரேனிய அதிபரின் பாதுகாப்பு கருதி மியூனிக்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்தை மீறி, இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், தங்களைத் தாங்களே குடியரசுகளாகப் பிரகடனம் செய்து கொண்ட யுக்ரேனின் கிழக்குப் பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், சனிக்கிழமை அன்று 1,400 வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தப் பதற்றத்தின் மூன்றாவது நாளில் இரண்டு யுக்ரேனிய படையினர் கொல்லப்பட்டனர்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் ரஷ்யா இதை முற்றிலும் மறுத்தது. மேற்கத்திய நாடுகள், ரஷ்யா போலியான பதற்றத்தை உருவாக்குகிறது என்றும், யுக்ரேன் மீது படையெடுப்பதற்கான காரணத்தை உருவாக்குகிறது என்றும் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சென்ற நேரத்தில் அதிரடித் தாக்குதல்

யுக்ரேனின் கிழக்குப் பகுதியை பார்வையிட யுக்ரேனிய உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கை சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டது. பிறகு அவர் குண்டு துளைக்க முடியாத கட்டடத்துக்கு அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

கிழக்கு யுக்ரேனில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் உள்ள கிளர்ச்சியாளர்கள், போராடும் வயதுடைய அனைத்து ஆண்களையும் அணிதிரட்ட உத்தரவிட்டனர். அங்கு குடியிருக்கும் மக்களை ரஷ்யாவிற்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தக் கட்டளைக்கு இணங்கவில்லை. யுக்ரேன் தங்கள் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆதாரம் இல்லாத தகவலை அவர்கள் கூறியிருக்கின்றனர்.

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் யுக்ரேன் தாக்குதல் நடத்துவதாக சனிக்கிழமையன்று ரஷ்ய ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் யுக்ரேனிய எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ் பகுதியில் குறி வைத்துத் தாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது என்றும் அதன் மீது குற்ற விசாரணை நடத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இப்படியான தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளான ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் தங்கள் குடிமக்களை யுக்ரேனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன. ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்சா வருகின்ற திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு யுக்ரேனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஏவிய ரஷ்யா

மியூனிக்கில் மேற்கத்திய தலைவர்கள் சந்தித்த நேரத்தில், ரஷ்யா தனது ராணுவ பலத்தை வெளிக்காட்டும் ராணுவப் பயிற்சி நடத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் அணு ஆயுத பயிற்சியின் ஒரு பகுதியாக அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவி சோதித்தாக ரஷ்யா தெரிவிக்கிறது.

யுக்ரேனிய எல்லைக்கு அருகில் உள்ள பெலாரூஸ் நாட்டில் ரஷ்யா ராணுவப் பயிற்சி நடத்தி வந்தது. இந்த ராணுவப் பயிற்சியின் பிறகு யுக்ரேனிய எல்லைகளில் ரஷ்ய படையினர் குவிக்கப்பட்டனர். அமெரிக்காவின் கணிப்புப்படி, கிழக்கு யுக்ரேனின் கிளர்ச்சியாளர்கள் உள்பட சுமார் 169,000 முதல் 190,000 வரையிலான ரஷ்யா படையினர் யுக்ரேன் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டனர்.

இது சம்பந்தமாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் குறிப்பிடும்போது "யுக்ரேனிய எல்லையை ரஷ்ய படைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தன" என குறிப்பிட்டார்.

கமலா ஹாரிஸ் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு ஒரு போலி காரணத்தை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். ரஷ்ய படையெடுப்பு நடந்தால் அதற்கான விளைவுகள் "கடுமையானதாகவும் விரைவானதாகவும்" இருக்கும் என்று எச்சரித்தார் கமலா ஹாரிஸ்.

ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்தில் யுக்ரேன் ஓர் அங்கமாக இருந்ததால் ரஷ்யாவுடன் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்தது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத போதியிலும் அந்த அமைப்புகளின் உறுப்பு நாடுகளுடன் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது.

ரஷ்யாவைப் பொறுத்தவரையில், யுக்ரேன் ராணுவ ஒத்துழைப்புக்கான கூட்டணியாக உள்ள நேட்டோவுடன் இணையக் கூடாது என விரும்புகிறது. அப்படி இணைந்தால் அது தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதுகிறது.