வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (21:26 IST)

விமானிகளின் தவறால் உயிரிழந்த 72 பேர், நேபாள விமான விபத்தில் நடந்தது என்ன?

nepal plane clash
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 72 பேர் பலியான சம்பவத்தில் விமானிகள் தவறுதலாக விமானம் இயங்கத் தேவையான ஆற்றல் விநியோகத்தை நிறுத்தியதே காரணம் என்று அரசுத் தரப்பு விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
 
இது கடந்த ஜனவரி 15 அன்று தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான போகராவுக்குச் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம். கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மோசமான விமான விபத்துகளில் ஒன்று இது.
 
ஜனவரி 15 அன்று ஏடிஆர் 72 விமானக் குழுவினருக்கு காத்மாண்டு மற்றும் போகரா இடையே அது மூன்றாவது செக்டர் பயணம்.
 
இந்தத் தனியார் விமானம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி 1.5 கிமீ (0.9 மைல்) தொலைவில் உள்ள சேதி நதி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் நொறுங்கியது. இந்நிலையில் இங்கு மீட்புப் பணிக்காக உடனடியாக நூற்றுக்கணக்கான நேபாள ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
நேபாள விமான விபத்து: 72 பேரை பலிகொண்ட விபத்தில் விமானி செய்த தவறு என்ன?
"அதன் வேகம் காரணமாக, தரையில் மோதுவதற்கு முன்பு விமானம் 49 நொடிகள் வரை மேலே பறந்ததாக" விசாரணைக் குழுவின் உறுப்பினரான விமானப் பொறியாளர் தீபக் பிரசாத் பாஸ்டோலா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
 
விமானிகள் ஃபிளாப் லிவரை இயக்குவதற்குப் பதிலாக, விமானத்தின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் கண்டிஷன் லிவர்களை ஃபெதரிங் நிலையில் வைத்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார். மேலும் இதுவே இன்ஜினை "இயங்கு நிலைக்கு உந்தாமல் இயங்கா நிலைக்குத் தள்ளிவிடும்" என்று விளக்குகிறார் திரு பாஸ்டோலா.
 
அந்த அறிக்கையின்படி, "உள்நோக்கமின்றி இரண்டு இன்ஜின் ப்ரொப்பல்லர்களும் ஃபெதரிங் நிலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, உடனே பிரச்னையைக் கண்டறிந்து, பணியாளர்குழு எச்சரிக்கை செய்த போதிலும் சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுக்க விமானிகள் தவறிவிட்டதாக" கூறப்பட்டுள்ளது.
 
தகுந்த தொழில்நுட்ப மற்றும் திறன் அடிப்படையிலான பயிற்சி குறைபாடு, அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம், நிலையான இயக்க செயல்முறைகளைக் கடைபிடிக்காதது ஆகியவை விபத்துக்கான காரணங்களாக இருப்பதாக அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, அந்த விமானத்தின் விமானி அறை பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும், விமானம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும், குறைபாடுகள் ஏதும் அதில் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த விசாரணையில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த டஜன் கணக்கான புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
உள்ளூர்வாசியான திவ்யா தக்கால், ஜனவரி மாதம் இந்த விபத்து 11 மணியளவில் (05:15 GMT) நடந்தபோது விமானம் மேலிருந்து கீழே விழுந்ததைப் பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு விரைந்ததாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
"நான் அங்கு சென்றபோது, விபத்து நடந்த இடத்தில் ஏற்கெனவே கூட்டமாக இருந்தது. விமானத்தில் எரிந்துகொண்டிருந்த தீயில் இருந்து பெரும் புகை வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அங்கு ஹெலிகாப்டர்கள் வந்தன," என்று கூறினார் அவர்.
 
கடந்த பத்து ஆண்டுகளாகவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக நேபாள விமானங்களைத் தனது வான்வெளியில் தடை செய்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
 
தொலைதூர ஓடுபாதைகள் மற்றும் திடீர் வானிலை மாற்றங்கள் அபாயகரமான நிலைமைகளை ஏற்படுத்துவதால், நேபாளத்தில் விமான விபத்துகள் ஒன்றும் அசாதாரணமானது அல்ல.
 
கடந்த மே மாதம்கூட, எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தாரா ஏர் விமானம் 197 மலைப்பகுதியில் மோதியதில் 22 பயணிகள் மற்றும் அதன் பணியாளர்கள் உயிரிழந்தனர்.