1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:19 IST)

6 வயது ஹாங்காங் குழந்தைகள் இனி சீன சட்டம் பயில வேண்டும் - ஏன்?

ஹாங்காங்கின் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆறு வயதுள்ள குழந்தைகளும் தங்கள் பள்ளிகளில் குற்றங்கள் குறித்துப் படிக்க வேண்டும்.

அந்நாட்டின் புதிய கல்வி விதிகளின்படி குழந்தைகளின் நடத்தையைக் கண்காணிக்குமாறு பள்ளிகளிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனரா என்பதையும் பள்ளிகள் கண்காணிக்க வேண்டும்.
 
இந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம் கடந்த ஜூன் மாதம் சீனாவால் அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டில் நடைபெற்று வரும் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்கள் இதனால் முடிவுக்கு வரும் எனச் சீனா தெரிவித்துள்ளது.
 
பிரிட்டன் ஆளுகையில் இருந்த ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கென பிரிட்டன், சீனா இரு நாடுகளுக்கு இடையில்  கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி 1997 முதல் 50 ஆண்டுகளுக்கு 'ஒரு நாடு, இரு அமைப்பு' என்ற ஏற்பாடு நீடிக்கும். இந்த ஏற்பாட்டின்படி ஹாங்காங் 50  ஆண்டுகளுக்கு பல சுதந்திரங்களை அனுபவிக்கும்.
 
சீனா இயற்றியுள்ள புதிய சட்டம் ஹாங்காங் 50 ஆண்டுகளுக்கு அனுபவிக்கவேண்டிய அந்த சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாக இருக்கும் என்கிறார்கள்  விமர்சகர்கள்.
 
ஹாங்காங் போராட்டத்தில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
ஹாங்காங் கல்வித் துறை வியாழனன்று தேசியப் பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன என்பதை விளக்கும் அனிமேஷன் காணொளி ஒன்றை வெளியிட்டு அதனுடன் சில விதிமுறைகளையும் பள்ளிகளுக்கு அறிவித்தது.
 
அந்த சட்டத்தின்படி நாட்டிடமிருந்து விலகிச் செல்ல நினைப்பது, அரசை அகற்ற நினைப்பது, வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைப்பது ஆகியவை  குற்றமாகும். மேலும் இதற்கு அதிகபட்ச சிறை தண்டனை வழங்கப்படும்.
 
அந்த அனிமேஷன் காணொளியில் ஆந்தை ஒன்றும், இரு மாணவர்களும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் குறித்து விவரிக்கின்றனர். மேலும் இது "ஹாங்காங்கின்  வளர்ச்சிக்கும் நீண்டகால வளமைக்கும்" தேவையானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
"ஹாங்காங் நமது நாட்டின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்" என அந்த குழந்தைகளுக்கான காணொளியில் கூறப்பட்டுள்ளது.  மேலும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தேசிய கீதத்தை எவ்வாறு பாட வேண்டும் என்றும், எவ்வாறு அதற்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கற்பிக்கப்படும்.
 
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் எவ்வாறு ஹாங்காங்கை காக்கிறது என்றும் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்  ஹாங்காங்கின் உரிமைகள் மற்றும் அதன் சுதந்திரம் குறித்து பாடம் கற்பர்.
 
இந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம் புவியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பாடலை பாடுவதையும் பள்ளிகள் நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் சீன தேசிய கீதத்திற்கு பதிலாக பள்ளி மாணவர்கள் போராட்ட பாடல்களை பாடியது குறிப்பிடத்தக்கது.
 
தேசிய பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் எந்த ஒரு புத்தகமும் பள்ளி நூலகங்களிலிருந்து நீக்கப்படும். ஹாங்காங்கின் தொழில்முறை ஆசிரியர்கள் சங்கத்தின்  துணை தலைவர் டின் ஃபாங் சக் இந்த புதிய விதிமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இந்த புதிய சிந்தனைகள் கருத்துச் சுதந்திரத்தில் `மிகவும் ஊடுருவுவதாக` உள்ளது என டின் தெரிவித்துள்ளார்.
 
"அரசு பொதுவாகவே பள்ளிகளை நம்பாது. இந்த நடவடிக்கைகள் ஆசிரியர் மாணவர் உறவைப் பெரிதும் பாதிக்கும்," என்கிறார் அவர்.
 
ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டம் - ஒரு பார்வை
 
1997ஆம் ஆண்டு ஹாங்காங் பிரிட்டனின் ஆட்சியிலிருந்து சீன ஆட்சிக்கு திரும்பியபோது அதிகளவிலான தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தது.
 
மேலும் இதன் மக்களுக்கு சீன பெரு நிலப்பரப்பில் இருப்பதை காட்டிலும் அதிகப்படியான பேச்சு உரிமையும், ஊடக உரிமைகளும் இருந்தன.
 
ஆனால் இந்த புதிய சட்டத்தின்படி அரசிடமிருந்து பிரிந்து செல்வது, அதை அகற்றுவது, பயங்கரவாதம், வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு ஆகியவற்றுக்கு  அதிகப்படியான சிறை தண்டனை வழங்கப்படும்.
 
இது போராட்டக்காரர்களை ஒடுக்க எளிதாக வழிவகுக்கும். மேலும் ஹாங்காங்கின் தன்னாட்சி தன்மையை குறைக்கும். மேலும் சீனாவிற்கு அதிக அதிகாரத்தை  கொடுக்கும்.
 
விமர்சகர்கள் இந்த சட்டம் போராட்டத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் ஒடுக்கும் என தெரிவிக்கின்றனர். ஆனால் சீனா இந்த புதிய சட்டம் அந்த பிராந்தியத்தில்  ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் என்று கூறுகிறது.